Take a fresh look at your lifestyle.

‘ஹாலிவுட்’ நடிகர் ’யாமக்குச்சி’யைத் தெரியுமா?

ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். ‘நாரதரும் நான்கு திருடர்களும்’ என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு.

ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத, நரசிம்மனோ அதை ‘ஓமக்குச்சி’ ஆக்கி விட்டார்.

‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் ஓமக்குச்சி, விசுவை பார்த்து சாப்பிட்டாச்சான்னு கேட்பார். சாப்பிட்டுட்டு சாப்பிடலைன்னு சொன்னா சாப்பாடு வாங்கித் தரப்போறியா.. இல்லை…ன்னு விசு ஒரு குழப்பல் போடுவார். ஓமக்குச்சி தலைசுற்றி ஓடிவிடுவார்.

அடுத்த காட்சியில் விசு ‘சாப்பிட்டியா’ன்னு கேட்டதும் “பதிலுக்கு சாப்ட்டியான்னு கேட்க மாட்டேனே”ன்னு சொல்லிட்டு “பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை செய்யற டாக்டருக்கு உடம்பு சரியில்லை”ன்னு சொல்லி மாட்டிக்குவார்.

உடனே விசு ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார…” ஆரம்பிச்சு தொண தொணப்பார். ஓமக்குச்சி தலையை பிய்த்துக் கொண்டு ஓடி விடுவார்.

ஓமக்குச்சி நரசிம்மன், ‘சூரியன்’ படத்தில் கவுண்டமணிக்கு தொடர்ந்து டார்சார் கொடுக்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

அவரைப் பார்த்து “நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை” என கூறும் காட்சிகள் எல்லாம் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் காமெடிக் காட்சிகளாக உள்ளது.

‘சூரியன்’ படத்தில் கவுண்டமணி புதை சேற்றில் மாட்டிக்கொள்வார். கவுண்டமணி விழுந்ததும் ஜாங்குசக்கு ஜஜக்குஜக்குன்னு ஓமக்குச்சி பாடிட்டுப் போவார். பல படங்களில் ஓமக்குச்சியின் காமெடி வயிறு வலிக்க செய்யும்.

கவுண்டமணி ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். ஓமக்குச்சி அங்கே வந்து “எச்சூஸ்மி…ஸ்கோர் என்ன?…ரேடியா இல்லைல்லா…. கன்ட்ரி வில்லேஜ்…”ன்னு அவர் பேசுவதும் கவுண்டமணி தலைமுடியை பிடித்து அடிப்பதும்….

முதல்வன் படத்தில் வடிவேலு அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போல வைத்திருந்த காட்சியும் நகைச்சுவையாக இருக்கும்.

இப்படிக் காமெடியாகவே நடித்த ஓமக்குச்சி கடைசியாக நடித்த படம் தலைநகரம். அதில் வடிவேலுவை ஹீரோ மாதிரி போஸ் கொடுக்கச் சொல்வார் மயில்சாமி. அப்போது வடிவேலு எல்லாவற்றையும் உடைப்பார்.

அருகே நிற்கும் ஓமக்குச்சியை தலைக்கு மேலே சுற்றிகீழே போடுவார். அதில் ஓமக்குச்சி தலை சாய்ந்து விடும். நன்றாக ரசிக்கப்பட்ட அந்தக் காமெடி தான் கடைசி.

ஓமக்குச்சி நரசிம்மனைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் இருந்து தனது திரைவாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 14 மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சுமார் 1,500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 1953ஆம் ஆண்டு வெளியான ஔவையார் என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஹாலிவுட்:

எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றி வந்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பின்னர்தான் சினிமாவில் நடிக்கும் ஆசையை தனக்குள் தீவிரப்படுத்திக் கொண்டுள்ளார்.

பல மொழிப்படங்களில் நடித்த இவர், கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான இந்தியன் சம்மர் என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக இவர் அமெரிக்கா சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-ம் ஆண்டு வயது மூப்பினால் இவர் காலமானார். ஆனால், இவரது புகழ், இவரது சாதனைகள் குறித்து இணையம் நன்கு வளர்ந்த பின்னர்தான் வெளியே தெரியவந்துள்ளது.

தென்னிந்திய நடிகர்களில் அதிக படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஓமக்குச்சி நரசிம்மன்.

நன்றி : ஃபிலிம் பீட் இதழ்