Take a fresh look at your lifestyle.

முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!

91

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன்.

ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க வந்தவர் தான் முத்துராமன்.

ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை செய்துகொண்டு இருந்த முத்துராமன் பல நாடக சபைகளில் ஏறி இறங்கினார்.

நடிகரும் நாடக உரிமையாளருமான எஸ்.வி.சகஸ்ரநாமனின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்து பிரபலமானார் முத்துராமன்.

அதே நாடகக் கம்பெனியில் இருந்த நடிகர் கோபி என்பவர் போலீஸ்காரன் என்ற நாடகத்தைப் பார்க்க வருமாறு இயக்குனர் ஸ்ரீதரிடம் சொல்ல அதன் மூலம் ஸ்ரீதர் தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று கோபி இந்தத் திட்டத்தை போட்டிருக்கிறார்.

ஸ்ரீதரும் நாடகத்தைப் பார்த்து முத்துராமனை பார்த்திருக்கிறார். அப்போது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக கதா நாயகனைத் தேர்வு செய்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு லட்டாக மாட்டினார் முத்துராமன்.

எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் துள்ளிக் குதிச்ச முத்துராமனுக்கு கூடவே ஒரு அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படப்பிடிப்பின் அதே கால்ஷீட் நாளில் எஸ்.வி.சகஸ்ரநாமனின் நாடகமும் பம்பாயில் 10 நாட்கள் நடக்கப் போவதாக தகவல் வந்தது.

இதனால் மனமுடைந்த முத்துராமன் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஸ்ரீதரிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால், ஸ்ரீதர் முத்துராமனிடம், “எஸ்.வி.எஸிடம் இந்த நிலையை கூறி என்ன செய்வதென்று கேள், அதன் படி முடிவுசெய்” என்று சொல்லி அனுப்பினாராம்.

எஸ்.வி.எஸ் இதை கேட்டு முத்துராமனிடம், “இது உனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு, ஆகவே இதைத் தவறவிடாதே, என் நாடகத்தில் ஒரு இரண்டு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போ, பின் 8 நாள்கள் அந்தப் படப்பிடிப்பிலேயே பயன்படுத்திக் கொள்” என்று கூறினாராம்.

அதன்படியே முத்துராமன் செய்ய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் முத்துராமன் கெரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படமாக மாறியது. இந்த சுவாரஸ்யத் தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

– நன்றி: சினி ரிப்போர்ட்டர்