ஒரு நடிகர் ஒரு வேறு மொழிப் படத்தை பார்க்கிறார். அதே படத்தின் தமிழ்மொழியில் அந்த வில்லன் ரோல் செய்யக்கிடைக்கிறது.
அந்த பாத்திரத்தை அப்படியே கம்ப்ளீட்டா மாற்றி செய்து அந்த பாத்திரத்தை ஹீரோவை விட அதிகமாக பேச வைத்து விடுகிறார். யார் அவர்?
One and only ரகுவரன் தான்.
ஃபாஸில் மம்முட்டி நடித்த ‘பூவினும் புதிய பூந்தென்னல்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருந்த போது வில்லன் சுரேஷ்கோபி நடித்த சுரேஷ் (தமிழில் ஆனந்த்) ரோலுக்கு ரகுவரன் தேர்வானார்.
கதைப்படி சுரேஷ்கோபி பாத்திரம் பணக்காரன். ஆனால் அவருடைய மனைவிக்கு சுரேஷ் கோபியிடம் வேலை செய்யும் ஆளான வேணு என்பவரோடு கள்ளத்தொடர்பு உண்டு.
இதனால் வேணுவை தன் கையாள் பாபு ஆண்டனியோடு சேர்ந்து வேணு வரும் வழியில் வைத்து கொலை செய்வார்.
இதை ஒரு குழந்தையும், தாயும் பார்த்துவிட தாயையும் கொன்று விடுவார். குழந்தை தப்பி விட அதை கொல்லத்தேடுவது தான் கதை.
சுரேஷ்கோபி சாதாரணமாகத்தான் வருவார். அந்த பாத்திரத்தை செய்ய ரகுவரன் செய்த முதல் மாற்றம் பணக்காரன் என்பதை அழுத்தமாக சொல்வது.
ரகுவரன் சுரேஷ்கோபி போல் சாதாரணமாக வராமல் படம் முழுக்க விலையுயர்ந்த கோட் சூட்களில் வருவதாக அமைத்தார்.
இரண்டாவது ரகுவரன் மாதிரி ஒரு அழகனை விட்டு விட்டு வேணு என்பவனோடு ரகுவரனின் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட வேண்டுமென்றால் ரகுவரனுக்கு ஏதேனும் ஒரு குறை இருக்க வேண்டும். அதனால் ரகுவரன் தன்னை ஒரு மாற்று திறனாளியாக்கிக்கொண்டார்.
கால் சரியாக நிற்க முடியாமல் க்ரட்ச் ஒன்றை கையில் எந்நேரமும் பொருத்தி நடந்து வருவதாக நடித்தார். அவர் உயரத்துக்கு இது பெரும் ஸ்டைலாக அமைந்தது.
அடுத்து முகபாவம். ரகுவரனின் முகத்தில் கோபமும், வெறுமையும் அப்பட்டமாக தெரியும். சுரேஷ் கோபியிடம் இல்லாதது. பேசும் ஸ்டைலில் கூட.
படித்த மேல்தட்டு குடும்பத்தின் ஸ்டைலில்…. அவர் “ஐடன்ட்டிஃபிகேஷன் பரேட்… அது நடக்கக்கூடாது. நடக்கவே கூடாது” என சொல்வதே தனி ஸ்டைல்.
இந்த மொத்த ஆனந்தும், மலையாளத்தின் சுரேஷை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது ரகுவரனின் ஆழ்ந்த படைப்பு திறமை. மம்முட்டியை டிட்டோ செய்தார் சத்யராஜ்.
மம்முட்டியின் அந்த மகனை இழந்த துக்கத்தை சத்யராஜுக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கலாக இருந்திருக்கும் படத்தில். அதனால் தான் ரகுவரன் ‘கேரக்டர் மெட்டீரியலா’க பேசப்படுகிறார்.
தோல்விப்படமான ‘பூவினும் புதிய பூந்தென்னலை’ தமிழில் பூவிழி வாசலிலே என வெற்றிப்படமாக்கியதில் நாயகன் சத்யராஜை விட ரகுவரனுக்கு தான் பெரும் பங்கு உண்டு.
தனக்கு கிடைத்த பாத்திரம் சிறிதென்றாலும் அதில் தனித்தன்மை காண்பித்ததாலேயே ரகுவரனின் பாத்திரங்களின் வெரைட்டி இன்றும் பேசப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞன் ரகுவரன்.
– பிரபு சண்முகம்