Take a fresh look at your lifestyle.

பெண்கள் மீதான பெரும் திணிப்பைப் பேசும் ‘ரகு தாத்தா’!

‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு:

தி ஃபேமிலி மேன்’, ‘ஃபார்ஸி’ ஆகிய வெற்றிபெற்ற இணையத் தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுமன் குமார், ”ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.‌

என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது, ‘உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தித் தேர்வு ஒன்றினை எழுதினார்’ என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

அவரது பேச்சு என்னைக் கவர்ந்தது. அப்போது தான் இப்படத்திற்கான கதைக்கருவும் உருவானது.

ஆனால் இது திரைப்படமாக உருவானதற்கு என்னுடைய எழுத்துப் பணியில் உதவியாளர்களாக இருக்கும் ஆனந்த், மனோஜ் ஆகியோர்களின் கடின உழைப்புதான் காரணம்.

இந்தத் திரைப்படத்தின் கற்பனைத் திறன்மிகு இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் – தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது தயாரிப்பாளரிடம், ‘ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவனுக்கு இந்தி தெரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள்’ என மிக சுருக்கமாக ஒரு கதையை சொன்னேன்.

அது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்தக் கதையை இயக்கவில்லை.‌ ஆனால் வேறொரு கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன்.‌

இந்தத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரும் நானும் ஒரு வகையில் ‘லூசு’.

இந்த இரண்டு லூசும் சேர்ந்து பணியாற்றினால் என்ன மாதிரியான படைப்பு வரும் என்று கேள்வி எழும். அதற்கு விடை அளிக்கும் வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது.

இந்தத் திரைப்படம் இந்தி திணிப்பைப் பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாகப் பேசுகிறது.” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்:ஒரு தீவிரமான அரசியலை நகைச்சுவையாகவும், மென்மையாகவும் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர்.

அதே தருணத்தில் தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஜானர் என்றால் அது டிராமா தான்.‌

மணிரத்னம் சார், கேபி சார் என பெரிய இயக்குநர்கள் அனைவரும் கதையை மையமாக வைத்து, தங்களது எண்ணத்தை திரைக்கதையாக்கி இருப்பார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

திணிப்புகளில் பலவகையான திணிப்பு இருக்கிறது.‌ குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திணிப்புகள் இருக்கின்றன.

யார் மீதும் எதனையும் திணிக்க கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.‌ அடிப்படையாக நான் நேசிக்கும் விசயம் இப்படத்தில் இருப்பதால் இசையமைக்க  ஒப்புக் கொண்டேன்.

உண்மையை சொல்லப்போனால், இயக்குநர் சுமனுடன் பாடல்களை உருவாக்குவது எனக்கு எளிதாக இருந்தது. அவருக்கு இசை மீது நிறைய காதல் இருக்கிறது. அவர் கிட்டார் வாசிக்கும் கலைஞரும் கூட. அவருக்கு இசைப் பற்றிய தெளிவான புரிதல் இருந்ததாலும்… படத்தின் கதை பீரியட் கால கட்டத்தைச் சேர்ந்தது என்பதாலும்.. புது வகையான ஒலிகளை பயன்படுத்தும் சுதந்திரத்தைக் கொடுத்தார்.

ஒரு கருத்தை சொன்னால் அது சீரியஸ் என்று அர்த்தம் அல்ல.‌ ஒரு கருத்தை மென்மையாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல முடியும்.‌

ஒரு கருத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செல்வது என்பது அழகானது. அதே தருணத்தில் கிண்டலும், நையாண்டியும் நம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் இவை அனைத்தும் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் பத்து.. பதினைந்து.. ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், நல்லதொரு படைப்பை வழங்கி இருக்கிறோம் என்ற திருப்தியை ஏற்படுத்தும்.

ஐந்து பாடல்கள் இருக்கிறது. நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்.‌ இயக்குநர் சுமன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வசனகர்த்தா மனோஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.‌ நான் ஒரு பாடலை பாடியிருக்கிறேன்.‌ வித்தியாசமான குரலை பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் கிட்டார் ஒரு முக்கியக் கதாபாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது. இதற்காக என்னுடைய நண்பர் விக்ரம் – கிட்டார் வாசித்திருக்கிறார்” என்றார்.