Take a fresh look at your lifestyle.

ரூ. 2 ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் புஷ்பா-2!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘சூப்பர் ஹிட்’டாகும் சினிமாக்களின் இரண்டாம் பாகம் உருவாவது இப்போது ‘பேஷன்’. அநேக படங்கள் முதல் பாகம்போல் இருப்பதில்லை.

தமிழில், சந்திரமுகி, இந்தியன், சாமி, சண்டக்கோழி போன்ற படங்கள் ஆகச்சிறந்த உதாரணங்கள்.

ஆனால், தெலுங்கில் உருவான பாகுபலியும், புஷ்பாவும் விதி விலக்கான படங்கள். இந்தப் படங்களின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தைக் காட்டிலும் வாகை சூடியதுடன், வசூலையும் குவித்தது.

அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க, சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’, வெறும் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவானது.

நல்ல விமர்சனங்களையும் வசூலையும் ஈட்டியதால், இதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா-2: தி ரூல்’ த்லைப்பில் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரானது.

இந்தப் படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்தனர்.

புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது.

முதல் நாளிலேயே ரூ.294 கோடி வசூலித்து, இந்தியாவிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் அள்ளிய படம் என்ற பெருமையைப் பெற்றது.

அடுத்த ஆறு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலையும் தாண்டியது. வெளியான சில நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது.

அதிவேகமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய திரைப்படம் என்ற பேரும் புகழும் ‘புஷ்பா2′-வுக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகவும் மாறியது.

இந்த நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் மொத்தம் ரூ.1871 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிகபட்சமாக அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம்தான் ரூ. 1950 கோடி வசூலை ஈட்டியிருந்தது.

அடுத்த இடத்தில் ரூ. 1810 கோடி வசூலுடன் ‘பாகுபலி-2′ இரண்டாவது இடத்தில் இருந்தது.

இன்னும் சில நாட்களில் ‘புஷ்பா 2′ படத்தின் வசூல் 2000 கோடி ரூபாயை எட்டும் என நம்பப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய படம் என்ற சாதனையை ‘புஷ்பா-2’ படைக்க இருக்கிறது.

-பாப்பாங்குளம் பாரதி.