திரைத் தெறிப்புகள் – 56 :
*
தமிழ் திரையிசை உலகில் கவி கா.மு. ஷெரீஃப்பும், பாடகர் சீர்காழி கோவிந்தராஜனும் ஒன்றிணைந்த பாடல்கள் தனிக்கவனம் பெற்றிருக்கின்றன.
1961-ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர். – விஜயகுமாரி நடிப்பில் வெளியான ‘பணம் பந்தியிலே’ படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் உருவான பாடல் இது.
சாதாராண எளிய மக்களின் வாழ்வையும், அவர்களின் பொருளாதாரத்தையும் அதனால் கூடுதலாக உருவாகிற பொருளாதார நெருக்கடிகளையும் வெளிப்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல், இப்படித் துவங்கும்,
“பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே – இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே.
பிழைக்கும் மனிதனில்லே…”
அதாவது, கடுமையான எழுத்துத் தமிழ் இல்லாமல் எளிய மக்களின் பேச்சு மொழியில் இப்பாடல் இருப்பது தனிச் சிறப்பு.
“ஒண்ணுந் தெரியா ஆளானாலும், பணமிருந்தாலே – அவனை
உயர்த்திப் பேச மனிதக் கூட்டம் நாளும் தப்பாதே!
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே…”
பணத்தின் பலத்தையும், பணமில்லாதவரின் பலவீனத்தையும் ஒருசேரச் சொல்லும் இந்தப் பாடல் பணமில்லாதவர்களுக்கு எதிராக சமூகம் உருவாக்கும் மதிப்பீடுகளைப் பற்றியும் சொல்கிறது.
“ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் – பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்.
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை – இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை…”
தன்னலம் பார்க்காமல், பொதுநலத்தையே எண்ணிச் செயல்படும் மனிதர்கள் அடையும் வீழ்ச்சியை, இப்படி உணர்த்துகிறது இந்தப் பாடல்.
“உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர்
நிறையப் பேர்கள் உண்டு – அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு.
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு – நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு”.
இயல்பாகவே தனது தனித்த வெண்கலக் குரலில் பாடும் சீர்காழி கோவிந்தராஜன், இந்தப் பாடலை இன்னும் கூடுதலாகத் தன் குரலை உயர்த்திப் பாடியிருப்பதை அனுபவிக்க வேண்டுமென்றால் அந்தப் பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள். பாடலின் அர்த்தமும் தெரியும். பாடுகிறவரின் கம்பீரமும் தெரியும்.
*
- மணா.