Take a fresh look at your lifestyle.

“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”!

525

திரைத் தெறிப்புகள் –  84 :

*

பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் மதத்திற்கு அப்பாற்பட்ட மனித நேயத்தையும், காதலையும் கொண்டாடும் பல மகத்தான திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அந்த வரிசையில் 1961-ம் ஆண்டு வெளிவந்த ‘பாவ மன்னிப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற,

“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது…”

– என்று துவங்கும் பாட்டுக்குக் குல்லா அணிந்தபடி சிவாஜி காட்டும் முகபாவம் அபாரம் என்றால், அதற்கு நடிகை தேவிகா காட்டும் எதிர்வினையும் ரசனைக்குரியதாக இருக்கும்.

இதமான மெட்டில் அமைந்த இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதன்.

மென்மையாக இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்திருப்பவர் பி. சுசீலா.

காதல் உணர்வு ஒரு மனதிற்குள் நுழைகிறபோது என்னென்ன மாற்றங்களை அது உண்டாக்குகிறது என்பதை எளிய வரிகளில் எப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

“நாலு வகை குணமிருக்கும், ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது…”

அந்தக் காலத்திய தொழில்நுட்பத்தின்படி கருப்பு – வெள்ளைப் படமாக இத்திரைப்படம் வெளிவந்திருப்பதைப் போலவே, அக்காலத்தில் நிலவிய காதல் மதிப்பீட்டையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது.

“கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்.
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்.
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்.
கொண்ட பள்ளியறை பெண் மனதில் போர்க்களமாகும்”

அடுத்து, இடம்பெற்ற இந்த வரிகளைப் பாருங்கள்.

காதலை எவ்வளவு எளிய மந்திரம் போல் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

“காதலுக்கு ஜாதியில்லை, மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே.

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே.
அது வேதம் செய்த குருவைக்கூட விடுவதில்லையே.”

மழைக் காலத்தில் அந்த மண்ணின் பதத்திற்கு ஏற்றபடி காளான்கள் முளைப்பது மாதிரி, அந்தக் காலத்திய இயக்குநர்களின் கனிவான மனதிற்கு ஏற்றபடி இத்தகைய திரைப்படங்களும், திரைப்படப் பாடல்களும் முளைத்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

*

– மணா.

*