Take a fresh look at your lifestyle.

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”!

திரைத் தெறிப்புகள் – 93 :

*

திரையிசைப் பாடலிலும், வசனத்திலும் கொடிகட்டிப் பறந்தாலும் அபூர்வமாக சில திரைப்படங்களில் தலைகாட்டி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

‘பராசக்தி’ தொடங்கி ‘அபூர்வ ராகங்கள்’ வரை பல படங்களில் அவர் தோன்றியிருந்தாலும், 1963-ம் ஆண்டு வெளிவந்த ‘ரத்தத் திலகம்’ படத்தில், மேடையில் கவிஞரே தோன்றி மைக்கில் பாடுவதைப் போல அமைந்திருக்கும் இந்தப் பாடலில், கவிஞருக்குக் குரல் கொடுத்திருப்பவர் டி.எம். சௌந்தரராஜன்.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.
ஒரு கோல மயில் என் துணையிருப்பு.
இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு.
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு…”

கண்ணதாசன், இந்தப் பாடலை மேடையில் பாடும்போது அவருடைய வாழ்வையே பாடலின் வழியே வெளிப்படுத்துவதைப் போல இருக்கும்.

இனிமையான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்.

கோட்டும் டையும் அணிந்து மிதமான ஒப்பனையுடன் கவியரசர் பாடுவதைப் பார்க்கும்போது ரசனையாக இருக்கும்.

அடுத்து வரும் இளமையான வரிகளைப் பாருங்கள்.

தன்னைப் பற்றியே, கவிஞர் எப்படியெல்லாம் எடை போட்டு வைத்திருக்கிறார் என்பது தெரியும்.

“காவியத் தாயின் இளையமகன்.
காதல் பெண்களின் பெருந் தலைவன்.
பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்..”

ஒரு படைப்பாளி படைக்கும் படைப்புகளுக்கு என்றும் மரணம் இல்லை என்பதை எவ்வளவு மேன்மையான வரிகளின்மூலம் உணர்த்தியிருக்கிறார் கவிஞர்.

“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்,
மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.”

சிவகங்கை மாவட்டத்தில் கவியரசர் பிறந்த சின்னஞ்சிறு கிராமமான சிறுகூடல் பட்டியில், அவர் பிறந்த வீட்டில், தற்போது உருவாகியிருக்கும் அவருக்கான நினைவு இல்லத்தில், பதிந்திருக்கும் இப்பாடலின் இறுதி வரிகள், அவருடைய புகழை உயிர்ப்போடு சொல்லிக் கொண்டிருக்கின்றன – காலம் கடந்தும்.

– மணா.