Take a fresh look at your lifestyle.

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

திரைத் தெறிப்புகள் – 67 :

*

இருவருக்கிடையிலான காதலின் நெகிழ்வை உணர்த்துகிறபடி எவ்வளவோ சங்கப் பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன.

அவற்றில் தலைவன் பிரிந்துசென்ற பிறகு தலைவி, பிரிவின் துயரத்தைத் தாங்கமுடியாமல் பாடுவதாக சில பாடல்கள் அமைந்திருக்கின்றன.

மேனியில் பசலை படர்ந்த நிலையில் சில தலைவிகள் பிரிவின் துயர் தாங்க முடியாமல் பாடியிருக்கிறார்கள்.

1963-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆனந்த ஜோதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பி. சுசீலாவின் இனிய குரலில் உருவான இந்தப் பாடலும் பிரிவின் துயரை வெளிப்படுத்தும் பாடல் தான்.

“நினைக்கத் தெரிந்த மனமே.. உனக்கு மறக்கத் தெரியாதா…?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…?”

கருப்பு நிறத்திலான சேலை அணிந்தபடி, படத்தின் நாயகனான எம்.ஜி.ஆரை. நினைத்து தேவிகா பாடுகிறபடி இந்தப் பாடல் அமைந்திருக்கும்.

கருப்பு – வெள்ளை என்றாலும் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்ட விதம் ரம்மியமாக இருக்கும்.

முழுக்கப் பெண்ணின் குரலை மட்டுமே வெளிப்படுத்தும் இந்தப் பாடலில், தேவிகாவின் முகபாவங்களைப் பார்ப்பது ரசிக்கும்படி இருக்கும்.

“மயங்கத் தெரிந்த கண்ணே, உனக்கு உறங்கத் தெரியாதா…?
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா…?”

பி. சுசீலாவின் இன்னிசைக் குரலில் அமைந்த இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர்கள் இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதனும், டி.கே. ராமமூர்த்தியும்.

“எடுக்கத் தெரிந்தக் கரமே உனக்குக் கொடுக்கத் தெரியாதா…?
இனிக்கத் தெரிந்தக் கனியே உனக்குக் கசக்கத் தெரியாதா…?”

பாடலிலிலேயே தொடர்ந்து காதல் மிகுந்த உணர்வுடன் பல கேள்விகளை எழுப்பியிருப்பார் இதில் வரும் கதாநாயகி. இப்பாடலில் ஊடே, சில காட்சிகளில் இடம் பெற்றிருப்பார் எம்.ஜி.ஆர்.

கதாநாயகியின் நடன அசைவுகளும் கூட ,மிகவும் லாவகமாக அமைந்திருக்கும்.

“கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்குக் குளிரத் தெரியாதா…?
குளிரும் தென்றல் காற்றே உனக்குப் பிரிக்கத் தெரியாதா…?”

பாடலின் நிறைவாக, பிரிவு கசிந்த வலி இப்படி முடிவடைந்திருக்கும்.

“பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா…?
இணையத் தெரிந்தத் தலைவா உனக்கு என்னைப் புரியாதா…?
தலைவா என்னைப் புரியாதா…? “

எவ்வளவு பிரிவு ததும்பும் எளிமையான, அதேசமயம் நயமான கவியரசின் கவித்துவ வரிகள்!

*

– மணா.