நூல் அறிமுகம்:
திரைப்படப் பாடல்கள் – தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கம். எல்லா நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும், எல்லா நேரத்திலும் தொடர்ந்து ஒலிக்கும் தங்கம்.
அதைக் கேட்கும் போதெல்லாம், நாம் அந்தப் பாடலைக் கேட்ட முதல் தருணத்திலிருந்து, பல நினைவலைகளை இழுத்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் செல்லும்.
தியாகராஜ பாகவதர், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்த ராஜன், டிஎம்எஸ், பிஎஸ்பி, எஸ்.பி.பி, சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜானகி, சித்ரா என்ற குரல்கள் நம்மை அருகில் அமர வைத்து வைத்தியம் பாக்கும்.
இந்தப் பாடல்களைப் படைத்த படைப்பாளிகள் சிலரை மட்டுமே நாம் அறிந்தது. பலரை நாம் அறியவில்லை, அறிய முயற்சிக்கவும் இல்லை.
அப்படி நாம் அறிய மறந்த அரிய செய்திகளை, நினைக்க மறந்த நினைவில் கொள்ள வேண்டிய உண்மைகளை இந்த நூலில் யுகபாரதி பட்டியலிட்டுள்ளார்.
நா.காமராசன், புலமைப்பித்தன், முத்துலிங்கம், சுரதா, மருதகாசி, உடுமலை நாராயணகவி, மு.மேத்தா, பஞ்சு அருணாசலம், கலைஞர், ஆலங்குடி சோமு, தஞ்சை ராமையாதாஸ் – அந்த இருபதுகளில் சில பேர்கள்.
கவிஞர் யுகபாரதியின் உழைப்பும் கடமையுணர்வும் இவர்களை ஆவணப்படுத்த எடுத்த முயற்சிகளை ஆவென வியந்து பாராட்டி, பாடல்களினால் பயன் பெற்றவர்க்கு பரிந்துரைக்கிறேன்.
யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர்.
தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர்.
வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன.
இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.
*************************
நேற்றைய காற்று
(இருபது திரைக் கவிராயர்களின் கதை)
கவிஞர் யுகபாரதி
நேர்நிரை வெளியீடு
பக்கங்கள்: 493
விலை: 500/-
– பொ.நாகராஜன்.