Take a fresh look at your lifestyle.

“உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்”!

திரைத் தெறிப்புகள் – 55 :

*

பெயருக்கேற்றபடியே ரசித்துப் பார்த்த பலருடைய நெஞ்சங்களில் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறது ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ம் ஆண்டில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம்.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல அமானுஷ்யமானபடங்களுக்கு முன்னோடியான திரைப்படம் என்று இதைச் சொல்ல வேண்டும்.

கருப்பு – வெள்ளையில் நிகழ்ந்த அற்புதத்தைப் போல் வெளிவந்த இந்தத் திரைப்படப் பாடலுக்கு, வழக்கத்தைவிட கூடுதலான நாட்களை எடுத்துக்கொண்டு இசையமைத்திருக்கிறார்கள் இசை இரட்டையர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

காதுகளை மட்டுமல்ல, கண்களின் இமையையும் சற்றே மூடும் விதமாக லயித்துக் கேட்கும் விதத்தில் இந்தப் பாடலை அவ்வளவு மென்மையாகப் பாடியிருப்பார்கள் பி.பி. ஸ்ரீனிவாசும், பி. சுசீலாவும்.

“நெஞ்சம் மறப்பதில்லை.
அது நினைவை இழக்கவில்லை.
நான் காத்திருந்தேன்.
உன்னைப் பார்த்திருந்தேன்.
கண்களும் மூடவில்லை – என்
கண்களூம் மூடவில்லை…..”

– என்று நகர்கிற பாடலுக்கு அங்குமிங்கும் ஓடியபடி, குழைவான முகபாவத்துடன் நடித்திருப்பார்கள் கல்யாண் குமாரும், தேவிகாவும்.

ஒரு பெண்ணின் பிரியம் எவ்வளவு எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது கண்ணதாசனின் வரிகளில்.

“ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை.
இது சோதனையா, நெஞ்சின் வேதனையா,
உன் துணையேன் கிடைக்கவில்லை…?”

இந்தப் பாடலில் நிறைவு வரிகள் உண்மையான காதலுக்கான சாட்சியத்தைப் போல இப்படி முடிந்திருக்கும்.

“ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்.
அதை இறப்பினிலும்,
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்”.

– என்று நிறைவடைகிற இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிற போது, நெகிழ்வான அனுபவத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இந்தப் பாடலின் தனிச் சிறப்பு.

  -மணா