தமிழ் திரையிசையில் பல இசையமைப்பாளர்கள் ‘ராஜாங்கம்’ நடத்தியிருக்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களோடு இணைந்த இயக்குநர்களுக்கேற்ப, அப்போதைய ரசிகர்களுக்கேற்ப, திரையுலகைச் சேர்ந்தவர்களின் விருப்பத்திற்கு இணங்கப் படைப்புகள் பல தந்திருக்கின்றனர்.
இசையமைப்பது தங்களது தொழில் என்பதையும் தாண்டி முழு அர்ப்பணிப்பையும் கொட்டியவர்கள் மட்டுமே நீண்ட காலம் அதனுடன் உறவாடியிருக்கின்றனர். அப்படியொரு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
மில்லினியம் ‘ஸ்டார்’!
கர்நாடக இசை தொடங்கிப் பல்வேறு இசை மரபுகளைக் கற்று, உள்வாங்கி, அதில் மேதைமையை வெளிப்படுத்துகிற வாய்ப்புகளைப் பெற்று, பின்னர் இசையமைப்பாளராக மாறுவது ஒரு வகை.
ஒரு சிலரோ வாத்தியக் கருவி இசைப்பவராக ஆரம்பித்து, பின்னர் திரையிசை உருவாக்கத்தில் வெவ்வேறு பணிகளைக் கையாண்டு இறுதியாக இசையமைப்பாளர் நாற்காலியில் அமர்வார்கள்.
அந்த வகையில் கிடார், கீபோர்டு உள்ளிட்ட வாத்தியக் கருவி இசைஞராகத் தொடங்கி, சவுண்ட் என்ஜினியர் ஆக இருந்து, மெல்லத் தனது இசை ஆக்கத் திறனால் உயர்ந்தவர் ஹாரிஸ்.
ஏ.ஆர். ரஹ்மான் உட்படத் தொண்ணூறுகளில் இயங்கி வந்த பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. அதனால், ‘ட்ரெண்ட் என்றால் என்ன’ என்ற கேள்விக்குத் தெளிவான பதிலும் இவரிடம் இருந்தது.

அதனாலேயே, ஒரு படத்தில் இயக்குநரின் விருப்பத்திற்கான பாடல்களையும் தனது ரசனைக்குரிய பாடல்களையும் தனித்தனியே சேர்த்ததோடு ரசிகர்களின் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் தந்தார்.
பத்தாவது ரீலுக்கு மேல் மெலடி பாட்டு இடம்பெற நேர்ந்தால், ‘இது வேணுமா’ என்று கேட்கிற குணம் ஹாரிஸிடம் இருந்திருக்கிறது.
அதனாலேயே, ‘அந்நியன்’ போன்ற படங்களில் ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல்களுக்கு இடம் தர நேர்ந்திருக்கிறது.
கௌதம் இயக்கிய ‘மின்னலே’வில் ஹாரிஸ் அறிமுகம் ஆனார். ஆனால், ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘மஜ்னு’தான் அவர் முதன்முறையாக இசையமைக்க ஒப்புக்கொண்ட திரைப்படம்.
இப்போதும் இவ்விரு படப் பாடல்களையும் கேட்டால், ‘கூஸ்பம்ஸ்’ ஆகும். காரணம், அதில் இருக்கும் ஈர்ப்புத்தன்மை.
ரஹ்மான் பாணியில், ஒரு படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்க வேண்டுமென்ற உழைப்பைக் கொட்டியவர் ஹாரிஸ். அவரது பிலிமோகிராஃபியை எடுத்துப் பார்த்தால், அது பிடிபடும்.
2001இல் மட்டும் ஹாரிஸ் இசையில் மின்னலே, மஜ்னு, 12பி ஆகியன வந்தன. இவற்றில் மஜ்னு தவிர்த்து மற்ற இரண்டும் வெற்றிப்படங்கள். மஜ்னு பாடல்கள் இன்றளவும் தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன.
பின்னர் வந்த படங்களில் சாமுராய், லேசா லேசா, சாமி, கோயில், காக்க காக்க, செல்லமே, அரசாட்சி என்று எல்லாமே மியூசிகல் ஹிட்களாக அமைந்தன.
கதைத் தேர்வில் கவனம்!
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்னர் நாயகர்கள் எந்தளவுக்குப் பல கோணங்களில் கேள்விக்கணைகளைத் தொடுப்பார்களோ, அதற்கு இணையான உழைப்பைக் கொட்டியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
கதையின் புதிய அம்சங்கள், ரசிகர்கள் அப்படத்தை நோக்கும் விதம், அந்தப் படைப்பில் தனது இசைக்கான இடம் என்று பலவற்றை யோசித்தே ஒரு படத்தில் தன்னை இணைத்துக் கொள்வார் ஹாரிஸ்.
அவரது பட வரிசையை உற்றுநோக்கினால், தோல்வியுற்றவற்றிலும் கூட ஏதோ ஒரு சிறப்பம்சம் ஒட்டிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும்.
சாமுராய், லேசா லேசா என்றிருந்தவர், திடீரென்று யாரும் எதிர்பாராவண்ணம் ‘சாமி’க்கு இசையமைப்பாளர் ஆனார்.
அதில் ‘திருநெல்வேலி அல்வாடா’ தொடங்கி ‘ஐயய்யோ ஐயய்யோ பிடிச்சிருக்கு’, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு’ பாடல்கள் ‘ஹாரிஸ் இசை இப்படித்தான் இருக்கும்’ என்ற கணிப்புகளைப் பொய்யாக்கின.
அன்னியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் என்று ஹிட் ஆல்பங்கள் தந்த ஹாரிஸ், ‘உன்னாலே உன்னாலே’வில் இன்னொரு உயரத்தைத் தொட்டிருந்தார்.
அந்தப் படம் வெளியான காலகட்டத்தில், ‘இதெல்லாம் சிட்டியில மட்டும்தான் ஓடும்’ என்கிற மனநிலையை அடித்து நொறுக்க ரொம்பவே உதவிகரமாக இருந்தது ஹாரிஸின் பாடல்கள் தான்.
தாம்தூம், வாரணம் ஆயிரம், சத்யம், பீமா படங்களுக்கு நடுவே அயன், ஆதவன் மாதிரியான படங்களிலும் இடம்பிடித்தது ஹாரிஸின் புத்திசாலித்தனம்.
கௌதம் மேனன், கே.வி. ஆனந்த், ஏ.ஆர். முருகதாஸ் என்று சில இயக்குநர்களின் குட்புக்கில் இடம்பிடித்தபோதும், அவ்வப்போது புதிய அலை இயக்குநர்களோடு கைகோர்க்கிற சாமர்த்தியமும் அவரிடத்தில் உண்டு.
அதனாலேயே என்றென்றும் புன்னகை, இது கதிர்வேலன் காதல், தேவ் போன்ற படங்களில் அவர் இடம்பிடித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, படவுலகில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் ஒதுங்கிவிட்டாரா என்று கேட்கிற அளவுக்கு உள்ளது அவரது நிலைமை. காப்பான், தி லெஜண்ட், பிரதர் என்று மிகச்சில படங்களே அவரிடத்தில் இருந்து வந்திருக்கின்றன.
அவரோடு கைகோர்த்த இயக்குநர்கள் பலர் படம் இயக்காமல் இருப்பது அதற்கொரு காரணமாக இருக்கலாம். அதேநேரத்தில், புதிய இயக்குநர்களோடு இணைய அவர் தயாராக இருப்பதில்லையா’ என்ற கேள்வியும் பலமாக எழுகிறது.
ஆனாலும், ‘நான் ட்ரெண்டில் தான் இருக்கிறேன்’ என்று காட்டும்விதமாகக் கடந்த ஆண்டு ‘பிரதர்’ படத்தில் ‘மக்காமிஷி’ தந்தார். இன்றைய படைப்பாளிகளுக்கு அதுவொரு பாடம்.
ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி பேச்சு வந்தால், அவரைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களும் அதில் கணிசமாக இருக்கும். இத்தனை ஆண்டுகாலமாக அதனைச் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வருவதும் அசாதாரணமான விஷயம் தான்.
அவரது பட வரிசை குறைந்து போனதற்கு, கதைத் தேர்வில் காட்டிவரும் கெடுபிடிகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஏனென்றால், அவர் இசையமைத்தவற்றில் பெரும்பாலானவை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் ஜனரஞ்சக அம்சங்கள் நிறைந்தவை. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் அவற்றில் மிகக்குறைவு.
இது போன்ற பார்வைகளைப் பிற இசையமைப்பாளர்களிடம் பார்ப்பது அரிது.
ஏ.ஆர். ரஹ்மான் போன்று, தான் இசையமைக்கும் படங்கள் அனைத்தும் தன்னிசையால் கவனம் பெற வேண்டுமென்று ஆர்வம் காட்டுபவர் ஹாரிஸ். அதுவும் கூட, குறைவான படங்களை அவர் ஒப்புக்கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.
பதின்ம வயதில் இசையைத் தொழிலாகக் கொண்டபோது பல மொழிப் படங்களில் பணியாற்றிய ஹாரிஸ், பிற்காலத்தில் தமிழுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்தார்.
இந்தி, தெலுங்கு படங்களைப் பொறுத்தவரை, தன்னைத் தேடி வரும் இயக்குநர்களுக்காக மட்டுமே அவற்றில் இணைய ஆர்வம் காட்டுகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவராக இருந்தாலும், தன்னிசையில் எளிமைக்கு அதிக இடம் இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டவர் ஹாரிஸ்.
அனைத்துக்கும் மேலாக, ஒவ்வொரு இசைத்துணுக்கிலும் வசீகரம் நிறைந்து வழியும். அந்த வகையில், அவரை ‘இசை கந்தர்வன்’ என்றுதான் அழைக்க வேண்டும்.
அவர் இசையமைத்த படங்கள் அனைத்திலும் இதனைக் காண முடியும். அதுதான் இன்று வரை அவரை நம் நெஞ்சில் இருத்தி வைக்கிறது.
அவரது இசையில் அமைந்த ‘துருவ நட்சத்திரம்’ வெகுநாட்களாக திரையரங்குகளை அடையாமல் குளிரில் வாடிக் கொண்டிருக்கிறது. அது போகத் தமிழ், தெலுங்கில் இரு படங்களில் பணியாற்றி வருகிறார் ஹாரிஸ்.
சமீபநாட்களாக அவரது மகன் சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளர் ஆகப் போவதாகச் செய்திகள் வருகின்றன. அதற்கு முன்னதாகத் தனக்கான தயார்படுத்தலுக்காகச் சில காலம் ஹாரிஸ் ஓய்வெடுத்திருக்கலாம். இனிமேலும் அவர் அதனைத் தொடரக் கூடாது.
’எங்கேயோ கேட்ட ஞாபகம்’ என்ற எண்ணத்தைத் தந்தாலும், பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கச் செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துபவை ஹாரிஸின் பாடல்கள்.
‘இனி வரும் காலங்களில் அதனை அவர் நிகழ்த்த வேண்டும். இசையமைப்பில் அவர் விரைவில் ‘சதம்’ அடிக்க வேண்டும்.
ஹாரிஸ் ஜெயராஜுக்கு நேற்று 50வது பிறந்தநாள்.. தான் இசையமைத்ததை ஒருமுறை கேட்டாலே, மேலே நாம் சொன்னவற்றுக்கு ‘ஓகே’ சொல்லிவிடுவார். அப்படி நிகழ்ந்தால், அவரது ரசிகர்களைப் போலவே அடியேனும் அகம் மகிழ்வேன்!
-உதயசங்கரன் பாடகலிங்கம்.