Take a fresh look at your lifestyle.

மிஸ்டர் எக்ஸ் – விஷுவல் வியப்பு!

ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா நடிப்பில் மனு ஆனந்த் எழுதி இயக்கியிருக்கும் படம். 

மாவெரிக் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் வினீத் ஜெயின் மற்றும் லக்ஷ்மன் குமார் தயாரித்து இருக்கிறார்கள். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள நந்திதேவி பனிமலைச் சிகரத்தில், ஒன்பது புளூட்டோனியம் கதிர் வீச்சுக் குடுவைகள் கொண்ட ஒரு சாதனத்தை, அந்நிய நாடுகள் அணு ஆயுத சோதனைக்காக வைக்கின்றன.

ஆனால், இந்த திட்டமிட்டதை செய்ய முடியாமல் அப்படியே விட்டுவிட்டு வந்து விடுகின்றன. அது இரு நூறு ஆண்டுகள் வரை கதிர்வீச்சு அபாயம் கொண்டது. 

அது அங்கே இருந்தால் நாட்டுக்கு ஆபத்து என்று முடிவு செய்யும் ரா உளவுத்துறை, மிஸ்டர் எக்ஸ் என்ற தனது ஏஜென்ட் (சரத்குமார்) ஒருவரை அனுப்ப, அதை இந்தியாவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் அவர் அதை ரஷ்யா எடுத்துச் சென்று விடுகிறார். அங்கிருந்து வர முடியாத நிலை எனவே அவர் அங்கேயே இருக்கிறார்.

சென்னையில் இருக்கும் ரா ஏஜென்ட் ஒருவன் (ஆர்யா), சரியான புராஜெக்ட்கள், தனக்கு தரப்படாமல், ஹவாலா பண மோசடியைப் பிடிக்க மட்டும் தான் பயன்படுத்தப்படுவது கண்டு போர் அடித்து அந்த வேலையை விட்டுவிட நினைக்கிறான். அவன் காதலியான டாக்டருக்கு (அனகா) அவன்  ரா ஏஜென்ட் என்பது தெரியாது. 

இந்த நிலையில், ரஷ்யாவில் இருக்கும் மிஸ்டர் எக்ஸ்-ஐ மீட்டுக் கொண்டு வர, வேறொரு ஏஜெண்டை (கவுதம் கார்த்திக்)  அனுப்புகிறார் ‘ரா’ உயரதிகாரி (மஞ்சு வாரியர்).

ஆனால் அவன் அவரை கைது செய்து புளூட்டோனியம் சாதனத்தை இந்திய அரசுக்கு தராமல் கடத்துகிறான். 

இந்த நிலையில், துரோகி ஏஜெண்டை வீழ்த்தி, மிஸ்டர் எக்ஸ்-ஐ கொண்டு வரும் வேலையை சென்னையில் உள்ள ரா ஏஜெண்டுக்கு தருகிறார் பெண் உயரதிகாரி.

ஒரு காலத்தில் அணு உலைக்கு எதிராகப் போராடி அரசால் தண்டிக்கப்பட்ட நிலையில், அணுவை வைத்தே பெரும் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த துரோகி ஏஜென்ட்டின் திட்டம்.

சென்னையில் பன்னாட்டு மாநாடு ஒன்று நடக்கும்போது அவன் குறிவைக்க, நடந்தது என்ன என்பதே படம்.

சயின்ஸ் பிக்ஷன், அணு உலை, தேசப்பாதுகாப்பு, பன்னாட்டுப் பயணம் என்று ஒரு எலைட் படம்.

மனு ஆனந்தின் மேக்கிங் பிரம்மாதம். வினீத் ஜெயின் மற்றும் லக்ஷ்மன் குமார் ஆகியோரின் தயாரிப்பு பிரம்மாண்டம்.

இயக்குநரின் ஷாட்கள், அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு, திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ராஜீவனின் தயாரிப்பு வடிவமைப்பு, ஸ்டண்ட் சில்வாவின் சண்டை இயக்கம், பிரசன்னா ஜி.கே.வின் படத்தொகுப்பு.. தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு – எல்லாமே அட்டகாசம். அபாரம்!

இவர்கள் எல்லோருமே கூட இந்தப் படத்தின் ஹீரோக்கள்தான்.

ரா பெண் அதிகாரியாக மஞ்சு வாரியார் மிடுக்கு. ஆர்யா, சரத்குமார், கவுதம் கார்த்திக், எல்லோரும் கேரக்டருக்கு பொருத்தமாக அடிக்கிறார்கள் (எழுத்துப் பிழை இல்லை).

காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அதுல்யா – ஒப்புக்கு சப்பாணி கேரக்டர்கள்.  

ஆர்யா – அனகா அறிமுகக் காட்சி லவ்லி.

மிஸ்டர் எக்ஸ், சென்னை ஏஜென்ட் இவர்களின் வாழ்க்கைப் பின்னணி என்று சென்டிமன்ட் காட்சிகளும் லிஸ்டில் இருக்கு.

என்னமோ பெருசா இருக்கு என்று எதிர்பார்க்க வைக்கும் ரைசா வில்சனின் கேரக்டர்  பலவீனமாகி விட்டது.

அணு உலை கூடாது என்று போராடி பாதிக்கப்பட்ட ஒருவன், எப்படி அணு உலை மூலம் இந்தியாவையே அழிக்க நினைப்பான்?.

தவறி அவனும் சேர்ந்து அழகியப் போகிறான் என்னும்போது அதன் மூலம் அவன் என்ன சாதிக்க விரும்புகிறான்? அவன் என்ன அந்த அளவுக்கு சைக்கோவா?

இப்படி அந்த கேரக்டர் சரியாக டிசைன் செய்யப்படாத காரணத்தால் படத்தின்  அடிப்படையே ஆட்டம் காண்கிறது.

ஒரு திரைப்படத்துக்கு திருப்பங்கள் தேவைதான். ஆனால் ஒரு அளவு வேண்டாமா பாஸ்?

”இப்ப, இங்க,  இது வரை படம் பாத்துகிட்டு இருக்கிறது நீங்கன்னுதானே நினைச்சீங்க?. இல்ல அது நீங்க இல்ல. உங்கள  மாதிரி வேற ஒருத்தர்தான் அது.

இப்ப நீங்க உங்க வீட்டுல தூங்கிட்டு இருக்கீங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீங்க மறுபடியும் தியேட்டருக்கு வந்து  உள்ள வந்து அதே சீட்ல உட்காரப்  போறீங்க.

உங்க சீட்ல இப்ப உட்காந்து இருக்கும், நீங்க இல்லாத நீங்க, பாத்ரூம் போயிட்டு அப்படியே வீட்டுக்குப் போகப் போறீங்க… அப்புறம் என்ன நடக்குதுன்னா…”  என்று நம் மீதே ஒரு டுவிஸ்ட் வைத்து விடுவார்களோ என்று நடுங்கிப் போகிறது மனசு.

இப்படி இயக்குனரை  டுவிஸ்ட் வெறி,  பேய் போல பிடித்து ஆட்டி இருப்பதால்,  ஒரு நிலையில் கனமான கிளைமாக்ஸோடு நல்ல விதமாக முடிய வேண்டிய படத்தை, அதற்கு மேல்  திரு திரு திருப்பங்கள் என்று படத்தை ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

(அதோடு கட் செய்து  படத்தை  முடித்து வைக்க மனசு பரபரக்கிறது) இத்தனைக்கும் பிறகும் பயந்தது மாதிரியே இரண்டாம் பாகத்துக்காக லீட் வேறு.

இதே மனு ஆனந்த் சில வருடங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் தயாரித்து  நடிக்க F.I.R  என்று ஒரு படம் எடுத்தார். அதுவும் இப்படிதான் மேக்கிங் நன்றாக இருக்கும். ஆனால் திரைக்கதை பலவீனமாக இருக்கும்.

கிட்டத்தட்ட அந்தப் படத்தின் கதையும் நாட்டுக்காக உழைக்கும் – வாழ்ந்தாலும் செத்தாலும் பேர் தெரியாமலே போகும் ரகசிய ஏஜன்ட்கள் பற்றிய கதை தான்.

அதே கதையோடு அதே மனு ஆனந்தை, யாரோ மீண்டும் இங்கே வந்து கோர்த்து விட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படம் ஓ.டி.டி-யில் ஒருவேளை ஒரு தரப்பைக் கவர வாய்ப்பு இருக்கலாம். ஆனால், தியேட்டருக்கான படம் இல்லை.

எவ்வளவுதான் தொழில்நுட்பத் திறமை, நேர்த்தி, உழைப்பு இருந்தாலும் நல்ல எழுத்தாக்கமும் எழுத்திலேயே எடிட்டிங்கும் இல்லாவிட்டால் அந்த உழைப்பு, திறமை, நேர்த்தி எல்லாம் உரிய பயன்தராது என்பதற்கு – இந்த பிரம்மாண்ட, தொழில்நுட்ப சிறப்பு கொண்ட படமும் உதாரணம்.

எனினும் மிஸ்டர் எக்ஸ் – விஷுவல் வியப்பு, விஸ்வரூபம். 

– சு. செந்தில் குமரன்