விஜய் – இயக்குனர் அட்லீ காம்பினேஷனில் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியானபோது, ‘இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி’ என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அக்காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசனை அட்லீயும் விஜய்யும் சந்தித்துப் பேசியபோது, ‘அபூர்வ சகோதரர்கள்’ போஸ்டருக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்ததும் சர்ச்சையானது.
அதேநேரத்தில், இவ்விரண்டு படங்களிலும் ‘மூன்று முகம்’ படத்தின் சாயல் இருப்பதைச் சிலர் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்திருக்கின்றனர்.
‘அப்பா இறந்துவிட, இரண்டு மகன்கள் வில்லனைப் பழி வாங்குகிற கதை’ என்ற ஒற்றுமையைத் தாண்டி, இரண்டு மகன்களும் வெவ்வேறு இடங்களில் வளர்வது உட்படப் பல ஒற்றுமைகளை அப்படங்களில் காண முடியும்.
அனைத்தையும் தாண்டி இவ்விரண்டு படங்களுக்கு முன்னரே ‘ப்ளாக்பஸ்டர்’ அந்தஸ்தை பெற்றது ‘மூன்று முகம்’ என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
கதை ‘பழசு’!
பெரிய தொழிலதிபரின் மகன் வெளிநாட்டில் கல்வி பயின்றுவிட்டு திரும்பி வருகிறார். ஒரு பெண்ணுக்குத் தந்தை இருபதாண்டுகளாகப் பணம் அனுப்பி வருவதைக் காண்கிறார்.
‘காரண காரியம் இல்லாமல் ஏன் ஒருவருக்குப் பணம் தர வேண்டும்’ என்று ஆராய முற்படுகிறபோது, அந்த இளைஞனின் உண்மையான பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்துபோனது தெரிய வருகிறது.
அது மட்டுமல்லாமல், அவரைப் போன்ற தோற்றமுடைய ஒரு இரட்டைச் சகோதரனும் இருக்கிறார் என்பதை அறிகிறார்.
தந்தையைக் கொன்ற நபர் தற்போது வேறொரு அடையாளத்துடன் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். அவரது முகத்திரையைக் கிழிக்க, ‘இறந்துபோன தந்தையின் அடுத்த ஜென்மமாக நான் இருக்கிறேன்’ என்ற பொய்யை அவிழ்த்துவிடுகிறார்.
அதனைக் கண்டு வில்லன் துணுக்குற, அதன்பின் என்ன நடந்தது என்று சொல்கிறது ‘மூன்று முகம்’ படத்தின் மீதி.
‘மூன்று முகம்’ போலவே ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் தந்தை பாத்திரமானது போலீஸ்காரராக காண்பிக்கப்பட்டிருக்கும்.
தயாரிப்பாளராக, எழுத்தாளராக இருந்த பீட்டர் செல்வகுமாரின் கதைக்கு கனக சண்முகம், பி.எல்.சுந்தர்ராஜன், தமிழழகன், ராதா வீரண்ணன் ஆகியோர் திரைக்கதை அமைத்திருந்தனர்.
ஏ.ஜெகந்நாதன் இதனை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்த அருண், ஜான் பாத்திரங்களைத் தாண்டி, அலெக்ஸ் பாண்டியன் பாத்திரம் அவருக்குப் பெரும்பெயரைப் பெற்றுத்தந்தது. எம்ஜிஆரின் ‘காவல்காரன்’, சிவாஜியின் ‘தங்கப் பதக்கம்’ போன்று ரஜினிக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது அந்த போலீஸ் அதிகாரி பாத்திரம்.
சுண்டியிழுத்த சில அம்சங்கள்!
எண்பதுகளில் வந்த தமிழ் படங்களில் மிகப்பெரிய அளவுக்குப் பொருட்செலவு தென்படாது. அந்த காலகட்டத்தில் வந்த இந்தி, தெலுங்கு படங்களைப் பார்த்தவர்கள் இதைச் சொல்வார்கள்.
அதேபோன்று ‘க்ளிஷே’க்களாக சில விஷயங்கள் தவறாமல் இடம்பெறும். அவை நாடகத்தனமாக அமைந்து, நம்மை முகம் சுளிக்கச் செய்யும். அப்படிப்பட்ட விஷயங்கள் ‘மூன்று முகம்’ படத்திலும் உண்டு.
ஆனால், அவற்றைப் புறந்தள்ளும் விதமாக இதில் உணர்ச்சிப் பிரவாகத்தைக் காட்டுகிற காட்சிகள் இருக்கும். கமலா காமேஷ் மற்றும் ஜான் ஆக வரும் ரஜினி பேசுகிற காட்சிகள் அதற்கொரு எடுத்துக்காட்டு.
விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் மூலம் முன்பாதியை நகர்த்திய ஜகந்நாதன், பின்பாதியில் வில்லன் பாத்திரத்துடன் மற்றுமொரு ரஜினி பாத்திரம் சேர்ந்து நிற்பதைக் காட்டி ரசிகர்களைப் பதைபதைக்க வைத்திருப்பார்.
‘இது போதும்’ என்று சொல்லத்தக்க வகையில், அவரது காட்சியாக்கம் இருந்ததே ‘மூன்று முகம்’ படத்தின் ப்ளஸ்.

மேலும் இதில் சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ‘சூப்பர்ஹிட்’ ஆக அமைந்தன.
குறிப்பாக ‘தேவாம்ருதம் ஜீவாம்ருதம்’ பாடல் இன்றளவும் ‘டான்ஸ் மிக்ஸ்’ஸுக்கு ஏற்ற ஒரு படைப்பு. அது தவிர ‘நான் செய்த குறும்பு’, ‘ஆசையுள்ள ரோஷக்கார மாமா’, ‘எத்தனையோ பொட்டப்புள்ள’ பாடல்களும் ரசிகர்களை ஈர்த்தன.
விஸ்வம் நடராஜனின் ஒளிப்பதிவு, கே.ஆர்.கிருஷ்ணனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் கனகச்சிதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் வித்தியாசம் காட்டியதோடு, ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறித் தோற்றமளித்திருப்பார் ரஜினிகாந்த். ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் அவர் வெளிக்காட்டிய மிடுக்கு ஈடிணையில்லாதது.
இதில் நாயகிகளாக ராதிகா, ராஜலட்சுமி நடித்தனர். சத்யராஜ், சில்க் ஸ்மிதா, சங்கிலி முருகன், கமலா காமேஷ், வி.கோபாலகிருஷ்ணன், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், சாருஹாசன், என்னத்த கன்னையா, காந்திமதி, லூஸ் மோகன், காஜா ஷெரிஃப் எனப் பலர் இதில் இடம்பெற்றனர்.
வில்லனாக மிரட்டல் நடிப்பைத் தந்திருந்தார் செந்தாமரை. அதுவும் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று.
கப்பலின் மேற்பரப்பில் சண்டைக்காட்சி நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்த ‘கிளைமேக்ஸ்’ ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
அனைத்துக்கும் மேலே, அந்தக் காலகட்டத்தில் வெற்றிப்படங்களை மட்டுமே தந்து வந்த சத்யா மூவிஸின் வெற்றிப் படங்களில் ஒன்றாகச் சேர்ந்தது ‘மூன்று முகம்’. சுமார் 250 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது.
ரஜினியின் ‘பெர்பெக்ட்’ கமர்ஷியல் சினிமாக்களில் இதுவும் ஒன்று எனத் தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் ‘ரஜினியிசம்’ நிறைந்து இருக்கும்.
இதே படம் இந்தியில் ‘ஜான் ஜானி ஜனார்த்தன்’ என்ற பெயரில் தயாரானபோது, அதிலும் நாயகனாக ரஜினியே நடித்தார்.

கன்னடத்தில் சங்கர் நாக்கும் தெலுங்கில் சிரஞ்சீவியும் இப்படத்தின் ‘ரீமேக்’குகளில் நடித்தனர்.
சிரஞ்சீவி நடித்த ‘முக்குரு மொனகல்லு’ படமானது மீண்டும் தமிழில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது. அப்படத்திற்கும் தனி ரசிகர் கூட்டம், அது வெளியான காலகட்டத்தில் இருந்தது.
இப்படி ஒரே கதை பல மொழிகளில் சிற்சில வித்தியாசங்களுடன் வலம் வருவது ஒருகாலகட்டத்தில் வழமையானதாக இருந்தது.
அதற்கு உரிமை பெறுவது, உரிமை தர மறுக்கிற பட்சத்தில் வேறு விதமாக ‘காப்பி’ அடிப்பது என்று ஒவ்வொரு மொழியிலும் பல கதாசிரியர்கள், இயக்குநர்கள் உழைப்பைக் கொட்டிய காலமது.
அதற்கு மத்தியில், தனித்துவத்தை வெளிக்காட்டி ஒரு பாதையை ஏற்படுத்துவதென்பது சாதாரண விஷயமல்ல.
அந்த வகையில், ஜெகந்நாதன் – ரஜினிகாந்த் காம்பினேஷனில் வந்த ‘மூன்று முகம்’ படத்திற்குத் தனியிடம் உண்டு. இன்றுடன் அப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
– மாபா