Take a fresh look at your lifestyle.

மிராஜ் – ட்விஸ்டு மேல ட்விஸ்டுங்கோவ்..!

ஒரு திரைப்படம் பார்க்கையில் ஆங்காங்கே சில திருப்பமான காட்சிகள் இருந்தால்தான் சுவாரஸ்யம் அதிகமாகும். மிகச்சில படங்களில் முதல் அரை மணி நேரத்தில் வருகிற பிரச்சனை வடிவத்தில் முதல் திருப்பம் இருக்கும்; அதனால் ஏற்படுகிற விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கான வழியைக் கண்டறிவது இரண்டாவது திருப்பமாக இருக்கும்.

இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் ஒரு திரைப்படத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். இவ்விரண்டு திருப்பங்களைக் கடந்துவிட்டால், ஒரு திரைப்படத்தின் நிறைவுப்பகுதிக்கு வந்துவிடுவோம்.

மிகச்சில திரைப்படங்களில் இந்தத் திருப்பங்களை பல பகுதிகளாகப் பிரித்து அடுத்தடுத்து வைத்திருப்பார்கள் சில இயக்குநர்கள். அவை தருகிற ‘த்ரில்’ ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

அந்த வகையில் தனது ‘மிராஜ்’ திரைப்படத்தைத் தர முனைந்திருக்கிறார் ‘த்ருஷ்யம்’ படங்களைத் தந்த இயக்குநர் ஜீத்து ஜோசப்.

இதில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு ஷ்யாம் இதற்கு இசையமைத்துள்ளார்.

‘மிராஜ்’ திரைக்கதையில் இருக்கிற திருப்பங்கள் படம் பார்ப்பவர்களை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறதா?

‘மிராஜ்’ கதை!

‘மிராஜ்’ என்றால் ஆங்கிலத்தில் ‘கானல் நீர்’ என்று அர்த்தம். அதாவது, கண்ணுக்குப் புலப்படுகிற பிம்பங்கள் உண்மையல்ல என்பது அந்த இடத்தை நெருங்கிப் போய் பார்த்தால் மட்டுமே தெரிய வரும். கிட்டத்தட்ட அப்படியொரு கதைதான் ‘மிராஜ்’ படத்தில் வைத்திருக்கிறாரா ஜீத்து ஜோசப்?

கோயம்புத்தூரில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் கிரண் (ஹகீம் ஷாஜகான்). அதன் உரிமையாளர் ராஜ்குமார் (சரவணன்). பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், ரௌடிகள் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்கிற வேலையை அவர் செய்து வருகிறார்.

அந்த அலுவலகத்தில் புதிதாகச் சேரும் அபிராமியை (அபர்ணா பாலமுரளி) கிரண் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களாகக் கிரணைக் காணவில்லை என்று தவிக்கிறார் அபிராமி. அது பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார்.

அதேநேரத்தில், ராஜ்குமாரின் அலுவலகத்தில் இருந்து ‘க்ளையண்ட் லிஸ்ட்’டை ஒரு ஹார்ட் டிஸ்கில் கிரண் பிரதியெடுத்த தகவல் தெரிய வருகிறது. உடனே கிரண் மற்றும் அவரைச் சார்ந்தவர்களைப் பிடித்து, அந்த ஹார்ட் டிஸ்க்கை வாங்கி வருமாறு தனது கையாள் ரியாஸிடம் (மதன் தட்சிணாமூர்த்தி) சொல்கிறார் ராஜ்குமார்.

ஆனால், கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில் விபத்திற்குள்ளானதில் கிரண் இறந்ததாகத் தகவல் வெளியாகிறது. பிணவறையில் இருக்கும் சடலத்தைப் பார்த்து அழும் அபிராமி, அது ‘கிரண் தான்’ என உறுதிப்படுத்துகிறார்.

இந்த நிலையில், ‘ஹார்ட் டிஸ்க் எங்கே’ எனக் கேட்டு ரியாஸ் அபிராமியை மிரட்டுகிறார். அதற்கு முன்னரே, அந்த ஹார்ட் டிஸ்க் பற்றிய தகவல் தெரிந்தால் தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் எஸ்பி ஆறுமுகம் (சம்பத்ராஜ்) கூறுகிறார்.

அபிராமியைப் பின்தொடரும் அஸ்வின் (ஆசிஃப் அலி), அவையனைத்தையும் உற்றுநோக்குகிறார்.

அபிராமியை நேரில் சந்தித்து, தான் ஒரு ஆன்லைன் ஜர்னலிஸ்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஒரு பிரச்சனையை வெளிக்கொணர்வதற்காக, கிரணைத் தான் பின்தொடர்ந்து வந்ததாகவும் சொல்கிறார்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தான் உதவுவதாகச் சொல்கிறார் அஸ்வின். அதனை அபிராமி ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அவரது தோழி ரிதிகா (ஹன்னா ரெஜி கோஷி) அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவர் அஸ்வினைச் சந்தேகத்தோடு நோக்குகிறார்.

அந்த ஹார்ட் டிஸ்க்கை தேடும்போது, கோழிக்கோடு ரயில்நிலையத்தில் இருக்கும் லாக்கரின் சாவி அபிராமியின் கையில் கிடைக்கிறது. ‘அதில் ஹார்ட் டிஸ்க் இருக்கக் கூடும்’ என்ற எண்ணத்தோடு அங்கு அவரும் அஸ்வினும் சொல்கின்றனர்.

போலீசாரும் ரியாஸ் ஆட்களும் பின்தொடரக் கூடாது என அபிராமியின் மொபைலையும் காரையும் ரிதிகாவிடம் கொடுத்து, அவரை திருச்சூர் வரை போகச் சொல்கிறார் அஸ்வின்.

கோழிக்கோடு செல்லும் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த லாக்கரில் ஹார்ட் டிஸ்க் இல்லை. ஆனால், அதிலிருக்கும் கிரண் தாயின் செக்புக் கொண்டு அவரது முகவரிக்கு இருவரும் செல்கின்றனர்.

அங்கிருக்கும் வீட்டில் கிரண் தாய் வசிக்கிறார். ஆனால், அபிராமியிடம் அவர் ‘தனது தாய் இறந்துவிட்டதாக’ச் சொல்லியிருக்கிறார்.

அபிராமி, அஸ்வின் இருவரிடமும் ‘மகன் கிரண் எப்படியிருக்கிறான்’ எனக் கேட்கிறார் அந்த தாய். அவர்களிடம் நன்றாகப் பேசுகிறார். இந்தநிலையில், அந்த வீட்டில் இருக்கும் புகைப்படமொன்றில் ’அமல்’ என்ற பெயர் இருக்கிறது.

அதனைக் கண்டதும், ‘கிரணுக்கு அமல் என்று இன்னொரு பெயர் இருந்ததா’ என்று கேட்கிறார் அபிராமி. அதனைக் கேட்டதும், அந்தத் தாயின் முகம் மாறுகிறது. அவர் வீட்டினுள் சென்றுவிடுகிறார்.

அந்த நொடியில், கிரண் தாய் ஏதோ ஒரு உண்மையை மறைப்பதை உணர்கிறார் அபிராமி. பிறகு, அவரும் அஸ்வினும் கிரணுக்குப் பிடித்தமான இடமொன்றுக்குச் செல்கின்றனர்.

அங்கு சென்றதும், இருவரையும் வீட்டிற்குள் பூட்டி தீ வைத்துக் கொளுத்துகிறார் ஒரு நபர். ‘மரணம் நிச்சயம்’ எனும் சூழலில் அங்கிருந்து தப்பிக்க இருவரும் முயற்சிக்கின்றனர்.

அப்போதுதான், தீ வைத்தது கிரண் தான் என்று தெரிய வருகிறது.

கிரண் உண்மையில் சாகவில்லையா? ராஜ்குமார் கம்பெனியில் இருந்து திருடிய ஹார்ட் டிஸ்கை எடுத்துக்கொண்டு, அவர் ஏன் கேரளாவில் சுற்றித் திரிகிறார்? இந்த விஷயத்தில் போலீஸுக்கு உதவுவது போல ஏன் கிரண் நடித்தார்? கிரண் நல்லவன் இல்லை என்று அறிந்தபிறகும், அபிராமி அவரைத் தேடி அலைவது ஏன்?

இப்படிச் சில கேள்விகளுக்கான பதில்கள் திரையில் விரியும்போது, ஒரு புதிர் விடுபட்ட உணர்வு நம்மில் எழுகிறது. அதிர்ச்சியும் ஆச்சர்யமும் சூழ்கிறது. இறுதியாக, பல திருப்பங்கள் கடந்து ‘மிராஜ்’ நிறைவடைகிறது.

தொடக்கத்தில் கதையின் மையக்களம் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது. பிரதான பாத்திரங்களும் காட்டப்படுகின்றன. அவற்றின் உரையாடல் வழியே இன்னொரு கதை விரிகிறது.

அந்தப் பேச்சுகளில் எத்தனை சதவிகிதம் உண்மை? எத்தனை சதவிகிதம் பொய் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் என்னென்ன என்று தெரிய வரும்போது மற்றொரு கதை வெளிப்படுகிறது.

பலவாறாகக் கிளை விரிக்கிற அந்தக் கதைகளின் வழியே ‘மிராஜ்’ஜின் ஆரம்பம் மற்றும் இறுதிப்புள்ளிகள் ஒரு நேர்க்கோட்டை வந்தடைகின்றன. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

யோசிக்க வைக்கும்..!

வழக்கமாக, இது போன்ற ‘த்ரில்லர்’ கதைகளில் புதிர்கள் உடைபடும் வரை தான் ‘சுவாரஸ்யம்’ இருக்கும். படம் முடிவடையும்போது, ‘ஓ இதுதான் விஷயமா’ என்ற எண்ணமே மேலோங்கும். அதனால், அவற்றை இரண்டாவது முறை பார்க்கிற எண்ணம் பெரிதாக எழாது.

ஆனால் மிகச்சில கதைகள் படம் முடிவடைந்தபிறகு நம்மை யோசிக்க வைக்கும். ’ஆரம்பத்துல இது இப்படி இருக்கும்னு யோசிச்சோம். ஆனா, அப்படி நடக்கலையே’ என்று மீண்டும் கதையை அசை போட வைக்கும். ‘முதல்ல வந்தப்போ, இப்படி ரெண்டு அர்த்தம் அந்த சீன்ல இருந்ததா’ என்று மீண்டும் பார்க்கிற ஆசையைத் தூண்டும்.

அப்படியொரு திரைக்கதையைக் கொண்டிருக்கிறது ‘மிராஜ்’. அந்த வகையில் அபர்ணா ஆர்.தரகாட் எழுதிய கதைக்கு அபாரமாகத் திரை வடிவம் தந்திருக்கிறது இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் ஸ்ரீனிவாசன் அப்ரோல் கூட்டணி.

அது மட்டுமல்லாமல், காட்சிகளில் இருக்கிற அதிர்ச்சியை, ஆச்சர்யத்தை, ரகசியத்தைக் கொஞ்சம் கூடப் பிசகாமல் திரைக்குக் கடத்தியதில் ‘சபாஷ்’ சொல்ல வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

கடந்த பத்தாண்டுகளில் ‘த்ரில்லர்’ வகைமையில் விதவிதமான கதைகளை அவர் கையாண்டு வருகிற விதம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

‘லாஜிக் மீறல்களைக் கண்டுபிடிப்போம்’ என்று ஒருவர் படம் பார்க்க உட்கார்ந்தால், அந்த நபரைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்து ‘பதிலற்ற கேள்வியைக் கண்டுபிடி பார்க்கலாம்’ என்று சவால் விடுகிற வகையிலான காட்சியாக்கத்தைத் தருவதுவே அவரது சிறப்பு. ‘மிராஜ்’ஜிலும் அது மிகச்சிறப்பாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப், படத்தொகுப்பாளர் விநாயக், தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரசாந்த் மாதவ் மற்றும் விஎஃப் எக்ஸ், டிஐ கலைஞர்கள் என்று பலர் இயக்குநருக்குத் தோள் கொடுத்திருக்கின்றனர்.

திரையில் தெரியும் பரபரப்பு பன்மடங்காகக் காதுகள் வழியே மூளைக்குள் புகும் வகையில் பின்னணி இசை தந்திருக்கிறார் விஷ்ணு ஷ்யாம்.

பல காட்சிகள் கோவையிலும் கேரளத்திலும் மாறி மாறி நடப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், இந்த மலையாளப் படத்தில் நிறைய இடங்களில் தமிழ் வசனங்கள் வருகின்றன.

ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி, ஹகீம் ஷாஜகான், சரவணன், மதன் தட்சிணாமூர்த்தி, சம்பத்ராஜ், ஹன்னா ரெஜி கோஷி, தீபக் பரம்போல், அர்ஜுன் ஷ்யாம் கோபன் உள்ளிட்டோர் இதில் பிரதான பாத்திரங்களில் வருகின்றன.

அவர்கள் தவிர்த்து இரண்டு டஜன் பேர் திரையில் வந்திருந்தால் அதிகம். அனைவருமே சிறப்பாக நடித்திருப்பதால், நம்மால் எளிதாகப் பாத்திரங்களுடன் ஒன்ற முடிகிறது.

தேவையான அளவுக்குப் பாத்திரங்கள், குறிப்பிட்ட லொகேஷன்கள், பிரமாண்டம் அற்ற பின்னணி கொண்டு, மிகச்சீர்மையுடன் வேகம் பிடிக்கிற திரைக்கதையுடன் ஒரு ‘த்ரில்லர்’ தருவதில் தான் ‘பெஸ்ட்’ என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

சாதாரணமாக நகர்கிற காட்சிகளில் சில உண்மைகளைச் சொல்லாமல் மறைத்து, திரைக்கதையின் பின்பாதியில் அவற்றின் வழியே திருப்பங்களுக்கு வித்திடுகிற உத்தியைக் கவனத்துடன் கையாள்வதில் தான் ஒரு ‘ஜித்தன்’ என்று காட்டியிருக்கிறார். அதனால், படம் முழுவதும் நாம் இருக்கை நுனியில் அமர்ந்து ‘அல்லாட’ வேண்டியிருக்கிறது.

ஜீத்து ஜோசப்புக்காக ‘மிராஜ்’ஜை ரசித்து சிலாகித்துக் கொண்டாடலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்