Take a fresh look at your lifestyle.

மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!

நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

600

‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். உடனான தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட உலக நாயகன் கமல்ஹாசன்.

*****

‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. ஒரு வாலிபனா திரும்ப தங்கப்பன் மாஸ்டர்கிட்ட டான்ஸ் அசிஸ்டென்ட்டா சேர்ந்தப்போ வாத்தியாரை அடிக்கடி நேரில் பார்க்குற வாய்ப்பு கிடைச்சது.

‘ஆனந்த ஜோதி’ படத்துல நடிச்சப்போ எம்.ஜி.ஆர். கூட இருந்த அதே நெருக்கம் திரும்ப உண்டாச்சு.

இந்த முறை கை நடுங்குற அளவுக்கு பதட்டம் எனக்கு. ஏன்னா அவரோட உயரம் என்னனு அப்ப எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு பெரிய மனிதர்னு முழுசா உணரக்கூடிய வயசு எனக்கு. அந்த காலகட்டத்தை சந்தோஷமா அனுபவிச்சேன்.

ஏன்னா ஆளு யாருனு தெரியும். அவரை பார்க்குறதையே பெரிய கொண்டாட்டமா பலரும் நினைச்சுகிட்டு இருந்த காலகட்டம் அது.

ஆனா அவர் அதே பழைய கனிவோட என்னை அவர் ரூமுக்கெல்லாம் கூப்பிட்டுப் பேசுவார். அது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்.

எனக்கு என்னன்னா… இப்ப சொல்லலாம். அப்ப சொல்லி இருந்தா, மீடியாவுல ஏன் இதையெல்லாம் சொன்ன என்று திட்டி இருப்பாங்க.

தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று அவர் நினைப்பவர்கள் முன்னால் மட்டும்தான் எம்.ஜி.ஆர். தலையில் விக் வைக்காமல் இருப்பார்.

எனக்கு விக் இல்லாத எம்.ஜி.ஆரை பார்த்தா அடையாளம் தெரியாது. அவர் ரூம்லயே பல தடவை அவர் முன்னாடியே அவரை தேடி இருக்கேன்.

அப்புறம் உடம்பைப் பார்க்கும்போது தான் அது எம்.ஜி.ஆர்னு தெரியும்.

ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்ல லஞ்ச் பிரேக்.

எல்லாரும் சாப்பிட்டுட்டு ஃப்ளோர்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கோம். அன்னிக்கு எடுத்த ஷாட் பத்தி நாங்க பேசிக்கிட்டு இருந்தோம்.

உடனே நான் வழக்கம்போல அதிகப் பிரசங்கித்தனமா எம்.ஜி.ஆர். பேசின டயலாக்கை அவர் மாதிரியே மிமிக்ரி செஞ்சு பேசிக் காட்டிட்டு இருந்தேன்.

யாரும் எதிர்பார்க்கல… டக்னு உள்ளே வந்துட்டார். அவர் வந்ததை நாங்க கொஞ்சம் லேட்டாத்தான் பார்த்தோம்.

பின்டிராப் சைலன்ஸ்.

“என் ரூமுக்கு வா”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

எனக்கு லேசா உதறல். நான் அவரை மாதிரி நடிச்சதை பார்த்திருப்பாரோ… திட்டுவாரோனு பயம். ரூமுக்கு போனேன்.

“சொந்த ஊரு எது”னு கேட்டார்.
“பரமக்குடி”ன்னேன்.

“பரமக்குடியா…? மலையாளம் பேசுறியே எப்படி?” என்றார்.

தங்கப்பன் மாஸ்டர் என்னை மலையாளத்துல தான் திட்டுவார். அப்ப பதிலுக்கு நானும் மலையாளத்துல பேசுவேன். அதை எம்.ஜி.ஆர். கவனிச்சிருக்கார் என்பது புரிந்தது.

“கொஞ்சம் மலையாளப் படத்துலலாம் நடிக்கிறேன். அப்ப கத்துக்கிட்டது”னு சொன்னேன்.

“அப்படியா”னு சிரிச்சார்.

அப்புறம் என்னை ஏற இறங்கப் பார்த்தவர்,

“நீ ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்க” என்றார்.

“டான்ஸ் கத்துக்குறதுனால…”னு சொன்னேன்.

“நால்லா சாப்பிடுறல்ல…” என்று கேட்டார்.

“நல்லா தான்ணே சாப்பிடுறேன்” என்றேன்.

“நடிகன்னா உடம்பு தான் சொத்து. நல்லா சாப்பிடணும். நல்லா எக்சர்சைஸ் பண்ணணும். உடம்பு நம்ம சொல் பேச்சைக் கேட்கணும்..”னு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.

“செஸ்ட் ஏன் இப்படி இருக்கு உனக்கு. இந்த, தர தண்டால்லாம் ரொம்ப பண்ணாதே.

ஏற்கனவே முகம் ஒட்டிப் போயிருக்கு. இந்த சேரை இப்படி போட்டுக்க, ஜன்னல்ல காலை வச்சுகிட்டு, இப்படி தண்டால் எடு”ன்னு அவரே செய்து காட்டினார்.

“16, 17 வயசுல எனக்குள் எக்சர்சைஸ் ஆர்வத்தை தூண்டினவர்கள்ல அவர் முக்கியமானவர்’’ என்று சொன்ன கமல், எம்.ஜி.ஆர். எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. அப்படி ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க… என்று தொடர்ந்தார்.

‘‘நான் ‘மன்மதலீலை’ நடிச்சுகிட்டு இருந்த நேரம். ஏதோ ஒரு பெரிய சினிமா சம்மந்தப்பட்ட விழா. அதுல கலந்துக்க எம்.ஆர்.ராதா அண்ணன் வந்திருந்தார். யாருமே எதிர்பார்க்கல திடீர்னு எம்.ஜி.ஆரும் அந்த விழாவுக்கு வந்துட்டார்.

கூட்டமே ஒருமாதிரி பதட்டமாகிடுச்சு. என்ன நடக்கப்போகுதோனு நான் ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டே இருக்கேன்.

காரில் இருந்து இறங்கி நேரா மேடை அருகில் வந்தவர், ராதா அண்ணனைப் பார்த்ததும் வணக்கம்னாரு.

ராதா அண்ணனும் பதிலுக்கு வணக்கம் சொன்னாரு.

சடசடனு ராதா அண்ணன்கிட்ட வந்தவர், உடனே அவர் பக்கத்துல உட்கார்ந்துட்டார்.

ரெண்டு பேரும் சிரிச்சு பேசிக்கிட்டிருந்தாங்க.

இதைப் பார்த்த எனக்கு வியப்பு அடங்கவே இல்ல. தூரத்தில் நின்னுகிட்டு ஆச்சரியமா இதை பார்த்துகிட்டு இருந்தேன்.

சட்டுனு திரும்பி என்னைப் பார்த்தவர், என் முகத்தில் இருந்த வியப்பைப் புரிந்து கொண்டவராக ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு, “என்ன…? இங்க வா”ன்னு சைகை செய்தார்.

ஓடிப்போய் அவர் சேர் அருகில் காலை மடித்து உட்கார்ந்து கொண்டேன்.

“என்ன பண்ணிட்டு இருக்க?” என்றார்.

“நிறைய வாய்ப்புகள் வருதுண்ணே… என்னோட நல்ல படம் வரும்போது சொல்றேன். நீங்க தவறாம வந்து பார்க்கணும்” என்றேன்.

“ஓஹோ… அப்ப நல்ல படம் இல்லனு தெரிஞ்சும் நடிக்கிறியா” என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரித்துவிட்டார்.

எம்.ஜி.ஆரின் ஹியூமர் சென்ஸ் பற்றி வெளியே ரொம்பத் தெரியாது. நான் நேரிலே பார்த்தவன். படு ஷார்ப்பான ஹியூமர் சென்ஸ் உள்ளவர் வாத்தியார்’’ என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கமல் முகம் சற்று இறுக்கமாக மாறுகிறது.

வாத்தியாரை நான் கடைசியா பார்த்த அந்த சந்திப்பைப் பற்றி சொல்லியே ஆகணும் என்று தொடர்கிறார்.

‘‘நாயகன் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டப்போ அவரை சந்திக்க வீட்டுக்கு போயிருந்தேன். தலைவரை பார்த்துட்டு அப்படியே அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏறுறதா ப்ளான். கூடவே ஸ்ருதியையும், சரிகாவையும் அழைச்சுட்டுப் போயிருந்தேன்.

ஸ்ருதி ரொம்பச் சின்னக் குழந்தை. எம்.ஜி.ஆர். சாரை பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டு “வணக்கம் ஐயா”னு சொல்லணும்னு நல்லா ப்ராக்டீஸ்லாம் பண்ணித்தான் ஸ்ருதியை கூட்டிட்டுப் போனேன். ப்ராக்டீஸ்ல எல்லாம் நல்லா தான் பண்ணிச்சு.

வாத்தியாரோட ராமவரம் தோட்டம் மாடி அறைக்கு வெளியே அவருக்காகக் காத்துட்டு இருக்கோம். அங்கே வாத்தியாரோட பெரிய பெரிய படங்கள் மாட்டி இருப்பாங்க. அதையெல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா ஸ்ருதி.

எம்.ஜி.ஆர். பளிச்னு என்ட்ரி கொடுத்தார். நான் எழுந்து வணக்கம் சொல்றேன், ஸ்ருதி பராக் பார்த்துட்டு அப்படியே உட்கார்ந்துட்டிருக்கா.

நான் கண்ணு காட்டுறேன். கையால லேசா இடிக்கிறேன். எதுக்கும் ரெஸ்பான்ஸே இல்ல. அங்கிருந்த பெரிய எம்.ஜி.ஆர். படத்தையே ஆ…ஆ…னு பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்தா.

சே… ப்ராக்டீஸ் பண்ணினதெல்லாம் வீணாப்போச்சேன்னு எனக்கு பயங்கர கோபம்.

என்னையும் ஸ்ருதியையும் மாறி மாறி பார்த்த வாத்தியார்… “என்ன?” அப்படினு தலையால் சைகை செய்தார்.

“இல்ல… நிறைய சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்தேன்… அதான்…”னதும்.

“குழந்தைய ஒன்ணும் சொல்லாத. கொஞ்சம் இரு”ன்னு சொல்லிட்டு உள்ளே போனவர், தொப்பி கண்ணாடி எல்லாம் போட்டுட்டு திரும்பி வந்தார்.

உடனே எழுந்து “வணக்கம் ஐயா”னு சொன்னா.

“பாத்தியா… அதான் குழந்தை. அவ வெயிட் பண்ணிட்டு இருந்தது இந்த எம்.ஜி.ஆருக்கு. இப்ப புரியுதா”ன்னார்.

“என்கூட சரிகா வந்திருந்தாங்க. நாம பேசுறது இவங்களுக்கு புரியுமானு கேட்டவர், ஜானகியம்மாவை காமிச்சு, என்னைவிட இவங்க நல்லா இந்தி பேசுவாங்கன்னு சொன்னார்.

சிரிச்சுகிட்டே வாழ்த்தி அனுப்பினார். திரும்பி வரும்போது இல்ல” என்று சொல்லும்போதே கமல் கண்கள் கலங்கி இருந்தன.

– அருண் சுவாமிநாதன்.