இரண்டு வெப்சீரிஸ்களில் தலைகாட்டிய ஒரு இளைஞனை ‘ஹீரோ’ ஆகவும், ஒரு படத்தில் நடித்த அனுபவம் கொண்ட பெண்ணை ‘ஹீரோயின்’ ஆகவும் கொண்டு, ஒரு புதுமுக இயக்குனர் உருவாக்கிய ‘மெல்லிய நகைச்சுவை காதல்’ கதை ‘மெகா ஹிட்’ ஆகும் என்று யார் தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
அந்த ஆச்சர்யத்தைச் சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் நிகழ்த்தியிருக்கிறது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’.
சாய் மார்த்தாண்ட் எழுத்தாக்கம் செய்து இயக்கியுள்ள இப்படத்தில் மௌலி தனுஜ் பிரசாந்த் நாயகனாகவும் ஷிவானி நகரம் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
சுமார் இரண்டரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் மூன்று நாட்களில் அந்த வசூலை அள்ளியது கண்டு மலைத்துப் போயிருக்கிறது தெலுங்கு திரையுலகம்.
சரி, ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ படத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது?
‘லி.ஹா.’ கதை!
நல்லி அகில் குமார் (மௌலி தனுஜ் பிரசாந்த்) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் பி.டெக். சேரத் தயாராகி வருகிறார். உண்மையைச் சொன்னால், பொறியியல் படிப்பில் மகனைச் சேர்க்க வேண்டுமென்பது அவரது தந்தை நல்லி கோபால் ராவின் (ராஜீவ் கனகலா) கனவு.
மற்றபடி அகிலுக்கு அதில் ஒரு சதவிகிதம் கூட இஷ்டமில்லை.
விருப்பமே இல்லாமல் ‘கோச்சிங்’ கிளாஸ் சென்று, தேர்வையும் எழுதுகிறார் அகில். விடைத்தாளில் தனது வரிசை எண்ணை ஒழுங்காக ‘கோடிங்’ செய்யாத காரணத்தால், தேர்வுக் கண்காணிப்பாளரால் அறையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
அதற்கான பலன் தேர்வு முடிவுகள் வெளியானதும் தெரிய வருகிறது.
கோபாலின் முகம் கோபத்தில் சிவக்கிறது. ‘அடுத்த வருஷம் முழுக்க நீ கோச்சிங் கிளாஸ் போற.. திரும்பவும் எக்ஸாம் பண்ணி, பி.டெக்ல சேர்ற. அதுவும் ஐஐடியில தான் சீட் கிடைச்சாகணும்.. இல்லேன்னா..’ என்று ஆத்திரத்தில் அவரது கண் சிவக்கிறது.
தந்தையின் ரௌத்திரத்தை விட அகிலை அதிகம் டென்ஷன் ஆக்குவது, கேர்ள்ப்ரெண்ட் சமீராவின் பிரிவு தான்.
‘எனக்கு என்ஜினியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சு. நீ இங்கயும் நான் அங்கயுமா லாங் டிஸ்டர்ன்ஸ் ரிலேஷன்ஷிப் சரிப்பட்டு வராது’ என்று அகில் மொபைல் எண்ணை அவர் ‘பிளாக்’ செய்துவிடுகிறார்.
சில நாட்கள் காதல் தோல்வியில் இருப்பதாக எண்ணி உழல்கிறார் அகில். பிறகு, தந்தை சொல்படி ‘கோச்சிங் கிளாஸ்’ செல்ல முனைகிறார்.
நண்பன் ஆஷிஷ் (நிகில் அப்புரி) நழுவ, இன்னொரு நண்பன் மதுவை (ஜெய் கிருஷ்ணா) துணைக்குச் சேர்த்துக்கொண்டு, ஓராண்டைச் செலவழிக்க அங்கு செல்கிறார்.
சென்ற இடத்தில், ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறார் அகில். அந்த பெண்ணின் பெயர் காத்யாயனி (ஷிவானி நகரம்). மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வில் ‘பாஸ்’ ஆவதற்காக, அவர் அங்கு வந்திருக்கிறார்.
மெல்ல அவரது நட்பைப் பெற விழைகிறார் அகில். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி தன் மனதில் காதல் இருப்பதைச் சொல்லும் அளவுக்குச் செல்கிறார் அகில்.
அந்த நேரத்தில்தான், ஒரு உண்மை அவருக்குத் தெரிய வருகிறது.
வேறொன்றுமில்லை, அகிலை விட மூன்று வயது மூத்தவர் காத்யாயனி. அது தெரிந்ததும் ‘ஆண்ட்டியா நீ’ என்கிறார் அகில். அதனைக் கேட்டவுடனே, ‘பளார்’ என்று அவர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார் காத்யாயனி.
அதன்பிறகு என்னவானது? இருவரும் காதலர்கள் ஆனார்களா, இல்லையா என்று சொல்கிறது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ஸின் மீதி.
சர சர சாரக்காத்து..!
வயது குறைந்த நாயகன், வயதில் மூத்த நாயகியை ‘லவ்’ பண்ணுகிறார் என்று ‘வல்லவன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களில் ஏற்கனவே நம்மூரில் சொல்லிவிட்டார் சிலம்பரசன் டிஆர்.
அந்த விஷயத்தை முடிந்த அளவுக்கு மிக இலகுவான ‘ட்ராமா’ ஆக, ஓரளவுக்கு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாய் மார்த்தாண்ட்.
சாதாரண காட்சி என்றபோதும், அதில் கவித்துவமான அழகும் நகைச்சுவையும் பாத்திரங்களின் உணர்வெழுச்சியும் சரியாக அமையுமாறு கவனம் செலுத்தியிருக்கிறார். ’வாகை சூட வா’ படத்தில் ‘சர சர சாரக்காத்து’ பாடலில் நகைச்சுவையும் கவித்துவமும் இழையோடுமே, கிட்டத்தட்ட அதே போன்றதொரு அனுபவத்தை இப்படம் முழுக்கத் தருகிறார்.
அதற்கான பலன், ஒவ்வொரு காட்சிக்கும் கைதட்டி, சிரித்து ஆர்ப்பரிக்கிறது ரசிகக் கூட்டம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
ஆதலால், ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ என்பது ஜனரஞ்சகமான திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.
அதேநேரத்தில், ‘சினிமாட்டிக் மொமண்ட்’ என்று எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு நிற்கிற மாதிரியான ஹீரோயிசமோ, ஸ்டண்ட் காட்சிகளோ, பாடல்களோ, காமெடியோ இதில் கிடையாது.
சாதாரணமாகப் பொதுவெளியில் நாம் காண்கிற நடுத்தரக் குடும்பத்து மனிதர்களை, இளைய தலைமுறையினரை, சிறார் சிறுமியரைக் காட்டுகிறது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’.
அதற்கேற்ற பாத்திர வார்ப்பும் காட்சியமைப்பும் இப்படத்தின் ஒரு பாதியைப் பலப்படுத்துகிறது என்றால், யதார்த்தமான திரைக்கதை ட்ரீட்மெண்ட் இன்னொரு பாதி பலத்தைத் தந்துவிடுகிறது.
நாயகன் மௌலி தனுஜ் பிரசாந்துக்கு இதுவே முதல் படம். ஆனால், திரையில் அது சுத்தமாகத் தெரியவில்லை.
அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கலாய்க்கிறபோதும், காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தடுமாறுகிறபோதும் ‘அப்ளாஸ்’ அள்ளுகிறார்.
நாயகி ஷிவானி நகரம் முதல் பிரேமில் மட்டுமே ‘சாதாரணமாக’ தோன்றுகிறார். அடுத்தடுத்த பிரேம்களில் அவரது அழகு ‘கிராஃப்’ எகிறிக்கொண்டே செல்கிறது.
கடைசி இருபது நிமிடங்களில் அவர் ‘நைட்டி’ அணிந்து வருவதாக ஒரு காட்சி உள்ளது. அதில் கூட அவர் பேரழகியாகத் திகழ்கிறார் என்றால், அவருக்கான காட்சிகளை இயக்குனர் எவ்வளவு தூரம் ’செதுக்கியெடுத்தாற் போல’ இழைத்திருக்கிறார் என்று உணரலாம்.
பழைய தமிழ் படங்களில் சார்லி, வையாபுரி, விவேக், தாமு போன்ற நகைச்சுவை நடிகர்கள் வருவது போன்றே இதில் ஜெய்கிருஷ்ணா, நிகில் அப்பூரி இருவரும் மௌலியின் நண்பர்களாக வருகின்றனர்.
நாயகனின் பெற்றோராக வரும் ராஜிவ் கனகலா – அனிதா சௌத்ரி ஜோடி ஒருபக்கம் ’காமெடி’ ஒன்லைனர்களை உதிர்க்க, இன்னொரு புறம் நாயகியின் பெற்றோராக வரும் எஸ்.எஸ்.காஞ்சி – சத்யா கிருஷ்ணன் இருவரும் ‘சீரியசாக’ தோன்றி சிரிக்க வைத்திருக்கின்றனர்.
நாயகனின் ‘எக்ஸ்’ ஆக, நாயகியின் தோழியாக வரும் ஷைலஜா துர்வசுலா, பத்மினி செட்டம் ஆகியோரும் ‘அழகழகாக’த் திரையில் தெரிகின்றனர்.
இது போக கோச்சிங் கிளாஸ் மாஸ்டர் எனச் சில பாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.
கவனத்தோடு அமைக்கப்பட்ட இந்த ‘காஸ்ட்டிங்’ இப்படத்தின் இன்னொரு பலம்.
தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை ஒளிப்பதிவாளர் சூரியா பாலாஜி, கலை இயக்குனர் திவ்யா பவன், படத்தொகுப்பாளர் சிதர் சொம்பல்லி, ஒலி வடிவமைப்பாளர் பிரபு சி.எஸ்., விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கௌஷிக் என்று பலரது உழைப்பு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இசையமைப்பாளர் சின்ஜித் யெர்ரமல்லியின் பங்களிப்பு இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
பாடல்களும் சரி; பின்னணி இசையும் சரி; இருக்கையை விட்டு எழவிடாமல் நம்மைக் கட்டிப் போடுகின்றன.
’லிட்டில் ஹார்ட்ஸ்’ படத்தில் கதை புதிதல்ல; காட்சிகளோ, திரைக்கதை ட்ரீட்மெண்டோ கூடப் புதிதென்று சொல்ல முடியாது. எல்லாமே ‘நார்மலாக’ இருந்தும், இப்படத்தின் காட்சியாக்கம் ‘ஸ்பெஷல்’ ஆகத் தெரிகிறது.
அதுவே இந்த படத்திற்கு முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக பார்வையாளர்கள் வருகை அமையக் காரணமாகியிருக்கிறது.
வயது மூத்த பெண்ணை ஆண் காதலிப்பது என்பதைத் தாண்டி, பொருளாதாரத் தேடல் கொண்ட கல்வி ஆர்வம், சாதிரீதியான நட்பு மற்றும் காதல் என்று சமகால விஷயங்கள் சிலவற்றைக் கிண்டலடிப்பதும் இப்படத்தின் சிறப்பு.

ஒரு ‘ஓடிடி படைப்பு’ ஆக வந்திருக்க வேண்டிய ‘லிட்டில் ஹார்ட்ஸ்’, இப்படத்தோடு சம்பந்தப்பட்ட அத்தனை பேரின் ‘சின்சியரான’ உழைப்பின் காரணமாகத் திரையரங்குகளில் ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக மாறியிருக்கிறது. உண்மையைச் சொன்னால், ரசிகர்களுக்கு இது எதிர்பாராத இன்ப ஆச்சர்யம் தான்.
நிச்சயமாக, இது தெலுங்கு திரையுலகில் சில மாற்றங்களை உருவாக்கும்.
‘லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படம் ஒன் டைம் வொண்டரா’ என்ற கேள்விக்கான விடையை இயக்குனர் சாய் மார்த்தாண்ட் மற்றும் மௌலி தனுஜ் பிரசாந்த், ஷிவானி நகரம் உள்ளிட்டோரின் அடுத்தடுத்த படங்கள் நமக்குச் சொல்லிவிடும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்