‘ஏழு வள்ளல்கள்-
ஏட்டிலும் பாட்டிலும்-
இருந்தது முன்னாலே;
எங்கள்
மன்னவன் வந்தான்-
மற்றவ ரெல்லாம்-
இவனுக்குப் பின்னாலே!’
என்று நான் – ஒருமுறை
ஏத்தியது நிஜம்;
ஆம்;
அனேகருக்கு –
வழங்கி வழங்கி
வீங்கியிருந்தது அவன் புஜம்!
இல்லார்க்கு ஈவதில் – அவன்
இன்னொரு பேகன்;
நடிப்பிலிருந்து – பதவி
நாற்காலிக்கு வந்ததில்-
இப் புவிமிசை – அவன்
இன்னொரு ரொனால்ட் ரீகன்!
***
அவனை-
அறியு முன்…
வான்புகழ்
வெண் திரையில்-
அடியேன் வரைந்ததுண்டு
அனேக வரிகள்:
ஆயினும்-
அவன் பொருட்டு_ நான்
எழுதிய முதல்வரி-
எனக்குத் தந்தது முகவரி!
ஆம்!
அவனது – மன
விசாலம் – தந்ததெனக்கு
விலாசம்!
அவன்-
அம்பு கொண்டு-
வாலியை
வீழ்த்திய இராமச்சந்திரன் அல்ல;
அவன்-
அன்பு கொண்டு-
வாலியை-
வாழ்த்திய இராமச்சந்திரன்!
அதுமட்டுமல்ல;
அவன்…
இந்தியாவில் பிறந்து-
இலங்கை சென்ற-
இராமச்சந்திரன் அல்ல;
இலங்கையில் பிறந்து-
இந்தியாவிற்கு வந்த-
இராமச்சந்திரன்!
அந்த இராமச்சந்திரன்-
ஆதியில்…
மன்னனாயிருந்து-
பின் நாடோடி யானான்:
இந்த இராமச்சந்திரன்-
இளமையில்…
நாடோடி யாயிருந்து-
பின் மன்ன னானான்!
***
கோபால மேனன் – எனும்
குண வானுக்கும்;
சத்திய பாமா – எனும்
சகதர்மிணிக்கும்;
பிள்ளையாய்ப்
பிறந்தவன்-
எம்.ஜி.ஆர். என
எல்லோராலும் விளிக்கப் பெற்ற…
பெருமகன்; வெற்றித்-
திருமகன்;
ஓர் ஆயிரத்தில்-
ஒரு மகன்!
அவனது-
ஆரம்பம்…
மூன்று தமிழ்களில்
மூன்றாம் தமிழான நாடகத்தில்;
அதன்வழி
அவன் புகுந்தான்-
மெல்ல மெல்ல
மன்பதையின் நெஞ்சகத்தில்!
காளி. என்.ரத்தினம் –
குரு;
அவர்-
அந்நாளில் இட்ட எரு –
உண்டு
உயர்ந்தது-
எம்.ஜி.ஆர்.
என்னும் தரு!
முதன் முதல் – அவன்
முகம் காட்டிய படம்…
பலர் வாழ்வுக்குப்-
பிள்ளையார் சுழி போட்ட-
சினிமா எனப் பேசப்பெற்ற-
சதி லீலாவதி:
அதன்பின்-
அந்திமக் காலம் வரை-
அவனது புகழ்
ஆகவில்லை காலாவதி!
***
அறிஞர் பெருந்தகை
அண்ணாவின்-
இதயக்கனியாக
இலங்கியவன்;
தொய்வடையாத கீர்த்தியொடு-
துலங்கியவன்!
பெரும் பெயரைப்-
பெற்றுத் தந்த படங்கள்…
மந்திரிகுமாரி;
மலைக் கள்ளன்!
இந்தப் படங்களில் – அவன்
இயம்பிய உரையாடல்களை…
மாந்தர் செவிகள்
மாந்தின – அடடா!
முத்தமிழ்த் தேனா என்று!
அந்தத் தேனை
அருளியது –
கலைஞர் பெருமானின்
கைப் பேனா அன்று!
***
புரட்சித் தலைவர்’
‘பொன்மனச் செம்மல்’
‘மக்கள் திலகம்’
‘இதய தெய்வம்’
இவை யெலாம்-
இருந்தமிழர் உலகம்…
அவனுக்கு-
அளித்த பட்டங்கள்:
ஆயினும்
அவன்-
இத்தகு பட்டங்கள் பெற
இளமை முதல்-
ஏற்க நேர்ந்தது
எத்துணையோ கட்டங்கள்!
துன்பத்தில் பிழைத்தான்;
துப்பாக்கியில் பிழைத்தான்;
இத்துணை
இடுக்கண்களின்
இடையே – அவன்
இறவாது பிழைக்கக் காரணம்…
அவன் – இடையறாது
அறங்கள் இழைத்தான்!
அனேகருக்கு – அவன்
அன்ன மிட்டவன்;
அடித்தட்டு மக்களின்
அன்பு மனங்களைத் –
தனது-
தருமத்தால் கன்னமிட்டவன்!
***
ஏற்ற வேடங்களுக்கெல்லாம்
ஏற்றம் தந்தவன்;
இயல்பான நடிப்புக்கு-
இலக்கணமாய் வந்தவன்!
‘பெற்றால்தான் பிள்ளையா?’ எனும்-
பேசும் படம் – அவன்
பெருமையை – இன்றளவும்
பேசும் படம்!
சரித்திர வேடங்களில் – அவன் போல்
சாதித்தவ ரில்லை:
மதுரை வீரனாகவும்-
மன்னாதி மன்னனாகவும்-
அடிமைப் பெண்ணின்
அன்புக்குரிய அழகனாகவும்;
விளங்கி – நடிப்புக்கு
வகுத்தான் புதிய எல்லை!
***
அவனை-
அந்தகன் வெல்லவில்லை;
அவன்தான்
அந்தகனை வென்றான்;
ஆதலால் தான்-
அவன்-
இறந்தும் – இன்றளவும்
இறவாது நின்றான்!
தமிழ்த்
திரையில்..
என்-
ஏற்றம்-
அவன் தந்த பிச்சை;
அதைச் சொல்ல எனக்கில்லை லச்சை!
***
-கவிஞர் வாலி, இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.