Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆருக்காகப் பாடிய ‘பிள்ளைத் தமிழ்’!

கவிஞர் முத்துலிங்கம் நெகிழ்ச்சி

263

“எந்தக் குழந்தைகள் பிறந்த நாள் விழாவானாலும் இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும். அந்த வகையில் பொருத்தமான முறையில் பாடல் எழுது” என்று கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.

வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி சென்னை வடக்கு போக் ரோட்டில் இருந்தது. ஒரே இடத்தில் இருந்தால் எனக்கு எழுத வராது. அதனால் கொஞ்சத் தூரம் நடந்து யோசித்துக் கொண்டு வருகிறேன் என்று வெளியே சென்றேன். தெற்கு போக் ரோட்டிலுள்ள சிவாஜி வீடு வரையிலும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன்.

அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட் கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன். காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரி வேலன் ஆகியோர் இருந்தனர்.

இந்த வாரம் ‘தென்னகம்’ பத்திரிகையில் நீங்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் மிக நன்றாக இருந்தது என்று பாவலர் முத்துசாமி பலபடப் புகழ்ந்து எம்.ஜி.ஆரிடம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் ஐசரி வேலன் கூறினார். கண்ணனும் அதை வழி மொழிந்தார்.

எம்.ஜி.ஆரைப் பற்றி ‘எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்’, ‘எம்.ஜி.ஆர். உலா’, ‘எம்.ஜி.ஆர் அந்தாதி’ ஆகிய மூன்று சிற்றிலக்கியங்களைப் படைத்த கவிஞன் நான் ஒருவன்தான். வேறு யாரும் இல்லை.

அதனால் ஐசரி வேலன் அப்படிச் சொன்னவுடன் எனக்குப் பொறி தட்டியதைப் போல் ஓர் எண்ணம் தோன்றியது. நாம் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாகப் பாவித்து ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியம் எழுதுகிறோம்.

எம்.ஜி.ஆரும் படத்தில் ஒரு பிள்ளைக்காகத்தான் பாடுகிறார். ஆகவே இதையே முதல்வரியாக வைத்து எழுதினால் என்ன என்று எண்ணிய நேரத்திலே என் மூளைக்குள் ஒரு பல்லவி உட்கார்ந்து முரசறைந்தது.

வேகமாகச் சென்று அண்ணன் எம்.எஸ்.விசுவநாதனிடம் எழுதிக் காட்டினேன். நன்றாக இருக்கிறது. இதற்கு டியூன் போடுகிறேன். அதற்குள் ஒரு சரணத்தை யோசித்து எழுது என்றார்.

வரும்போதே சரணமும் எப்படி எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டு வந்த காரணத்தால் சரணத்தையும் உடனே எழுதிவிட்டேன். அதற்கும் எம்.எஸ்.வி. உடனே மெட்டமைத்து விட்டார்.

அந்தப் பாடல் இதுதான்,

“பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் – ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன்”

சரணம்:

நீலக்கடல் அலைபோல
நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே
நீராடி நீ வாழ்க
காஞ்சிமன்னன் புகழ்போலே
காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென
கண்மணியே நீ வாழ்க”