ஒரு திரைப்படம் வெளியாகும் காலகட்டத்தைவிட, வெகுகாலம் கழித்து கொண்டாடப்படுவது ஒருவகை சாபம்.
தமிழ்த் திரையுலகில் அப்படியொரு நிலைக்கு ஆளான திரைப்படங்களில் மிக முக்கியமானது ‘கர்ணன்’.
நடிப்புக்கோர் இலக்கணமாகப் போற்றப்படும் சிவாஜி கணேசனின் இருப்பு எந்த அளவுக்கு தனித்துவமானது என்பதை வெளிப்படுத்தும் உதாரணங்களில் கர்ணனும் ஒன்று.
வரலாறு, புராணம் சார்ந்த கதைகளை, கதாபாத்திரங்களைத் திரையில் வடிக்க, சிவாஜி மட்டும் நடித்தாலே போதுமென்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நம்புவதற்கு வழியமைத்தது இது.
கதாகாலட்சேபம், தெருக்கூத்து, நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவு என்று திருவிழா காலத்து நிகழ்வுகளே மகாபாரதத்தைத் தாங்கிப் பிடித்திருந்ததால், மக்கள் மனதில் ராமாயணத்துக்குக் கிடைத்த அந்தஸ்து இதற்குக் கிட்டவில்லை.
‘மகாபாரதத்தைப் படித்தால் வீடு விளங்காமல் போய்விடும்’ என்ற நம்பிக்கை வேரூன்றியிருந்த காலமது.
அப்படியொரு சூழலில், ‘கர்ணன்’ எத்தகையவன் என்பதைக் காட்டுவதாக அமைந்தது இப்படைப்பு.
குலப்பெருமைகளுக்கு எதிரானவன்!
வழி நெடுக பாத்திரங்கள், முன்கதைகள், தர்ம அதர்ம மோதல்கள், அவற்றுக்கான விளக்கங்கள் என்று பெருகிவிரியும் மகாபாரத்தத்தின் பரப்பு, அதிலிருந்து பல்வேறு புனைவுகள் துளிர்த்தெழ பாதை காட்டுகிறது.
அறத்தின் வழி கட்டமைக்கப்படாத கர்ணனின் பிறப்பும் மரணமும் அதிலொன்று.
அஸ்தினாபுரத்தின் அரசன் பாண்டுவின் மனைவியான குந்தி தேவி, இளம்பருவத்தில் துர்வாச முனிவரிடம் இருந்து ஒரு வரத்தையும், அதனோடு ஒரு மந்திரத்தையும் பெறுகிறார்.
அதன்படி, எந்த கடவுளரை நினைத்து அம்மந்திரத்தைச் சொன்னாலும், அவர் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.
பருவ வயதில் விளையாட்டுத்தனமாக சூரியனை நினைத்து அம்மந்திரத்தை குந்தி உச்சரிக்க, காதில் கவச குண்டலங்களோடும் மார்புக் கவசத்தோடும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.
திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றது ஊராரின் அவதூறுக்கு உள்ளாகுமே என்று அதனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விடுகிறார்.
குரு பீஷ்மருக்கு தேரோட்டும் அதிரதனும் அவரது மனைவி ராதையும் அக்குழந்தையைக் கண்டெடுக்கின்றனர். ‘கர்ணன்’ என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.
வில் வித்தையிலும் வீரத்திலும் சிறந்து விளங்கும் கர்ணன், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி அரச குடும்பத்தினர் பங்கேற்கும் விளையாட்டு, கலைப் பயிற்சிகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்.
ஆனாலும், தூரத்தே நின்று உன்னிப்பாகக் கவனித்து உள்வாங்கிக் கொண்ட கர்ணன் வெல்லமுடியாத மாவீரராக உருவாகிறார்.
மகாபாரதத்தின் அதிசாகச பாத்திரங்களில் ஒன்றான அர்ஜுனனை சாய்க்கும் வல்லமை கர்ணனுக்கு மட்டுமே உண்டு.
இந்தச் சூழலில், அர்ஜுனனின் வில்வித்தைக்குச் சவால் விடும் கர்ணன், அதில் வென்று காட்டி துரியோதனின் நட்பைப் பெறுகிறார்.
குந்தி தேவி பெற்ற தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பாண்டவர்கள், சூதாட்டத்தில் தோற்ற நிலப்பகுதியை பெறுவதற்காகத் தங்களது பெரியப்பா திருதராஷ்டிரர் பிள்ளைகளான துரியோதன் உள்ளிட்ட கௌரவர்களோடு மோதுகின்றனர்.
அப்போது, போர்க்களத்தில் எதிரியாக நிற்கிறார் கர்ணன்.
போரில் யார் வென்றார் என்பதையோ, அதற்காகச் சொல்லப்படும் காரணத்தையோ தனியாக விளக்க வேண்டியதில்லை.
தேரோட்டியின் மகன் என்று சொல்லி கர்ணனுக்காக வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதற்கு, வர்ணப் பெருமைகளே காரணமாகச் சொல்லப்படுகின்றன. அவற்றை மீறி கர்ணன் தன் நிலையை உயர்த்திக்கொள்கிறார் என்பது ரசிகர்களை இப்படைப்போடு ஒன்றவைக்கும் முக்கிய அம்சம்.
ஆனால், மொத்தக் கதையும் கெட்டவனான துரியோதனுக்கு கர்ணன் துணை நின்றான் என்பதிலேயே தொக்கி நிற்கிறது.
இருவருக்குமான நட்பு திரைக்கதையில் சிலாகிக்கப்படாதது அதனை ஒருசார்பானதாக மாற்றிவிடுகிறது.
திரைக்கதையின் ஏற்றமும் இறக்கமும்!
பெருவுருவொன்றை சிறு அரிசியில் வரைவது போல, மகாபாரதத்தின் ஒரு பகுதியைத் திரைப்படமாக்குவதென்பது மிகப்பெரிய சவால். ஏ.எஸ்.நாகராஜனின் திரைக்கதை அதனை மிகலாவகமாக எதிர்கொண்டுள்ளது.
குந்தி தேவி கர்ணனைப் பெற்றெடுப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. இதனால், அவர் பெற்ற வரமோ அதன் விளைவுகளே தனியாக வார்த்தைகளில் விவரிக்கப்படவில்லை.
போலவே, அதிரதனும் ராதையும் வளர்ப்பு பெற்றோர் என்பதைக் காட்டவும் தனியாக ‘பில்டப்’ ஏதுமில்லை.
ஆங்கிலப் படங்களில் முக்கியப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, ஏதேனும் ஒரு செயல்பாட்டை அல்லது சம்பந்தப்பட்ட காட்சியைக் காட்டி பாத்திரப் பெயர்களைச் சுட்டும் வழக்கமொண்டு.
அதற்கிணையாக, இப்படத்தில் பஞ்சபாண்டவர்களின் அறிமுகத்தை அமைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர்.
சுபாங்கி – கர்ணன் காதல், கனகன் உடனான மோதல் என்று திரைக்கதை நகர்ந்தாலும், அதன் ஆதார இழையாகத் தாயைத் தேடியலையும் கர்ணனின் பிம்பமே இருக்கிறது.
போருக்குத் தலைமை தாங்கும் பீஷ்மர் கர்ணனனைப் படைத்தலைவனாக அறிவிப்பதைப் புறக்கணிப்பதற்கு குலம் சார்ந்த மனவோட்டம் காரணமாகிவிடக் கூடாது என்பதில் அக்கறை காட்டப்பட்டிருக்கிறது.
அர்ஜுனன் உடனான போட்டியின்போதுதான் கர்ணனை துரியோதனன் முதன்முதலாக காண்கிறானா என்பதற்கு திரைக்கதையில் பதில் இல்லை.
மகாபாரதத்துக்குக் காரணமான சூதாட்ட நிகழ்வோ, அதன் தொடர்ச்சியாக அஸ்தினாபுரம் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்படுவதோ படத்தில் இடம்பெறவில்லை.
பாண்டவர்கள் 13 ஆண்டுகால வனவாசத்தை அனுபவிக்கும்போது, துரியோதன் மற்றும் கர்ணன் உள்ளிட்டோரின் வாழ்க்கை மாறியவிதம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரிய ஏமாற்றம்.
இதனால், பொதுவெளியில் கர்ணன் குறித்து தெரிந்த விஷயங்கள் மட்டுமே திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது.
மிகமுக்கியமாக, துரியோதனனின் நட்பும் கர்ணனின் இருப்பை சக கௌரவர்கள் பார்த்தவிதம் விவரிக்கப்படவில்லை.
அதனால், இறுதிக்காட்சியில் தான் செய்யும் தர்மங்களுக்காக மட்டுமே கர்ணன் நினைவுக்கூரப்படுவது திருப்தியைத் தரவில்லை.
அற்புதமான கலைஞர்கள்!
நிறைய கதாபாத்திரங்கள் என்பதாலும், கர்ணனை மட்டுமே மையப்படுத்தி கதை நகர்வதாலும் மற்ற நடிப்புக்கலைஞர்களுக்குப் பெரிதாக வேலையில்லை.
அதையும் மீறி துரியோதனனாக வரும் அசோகன், பானுமதியாக வரும் சாவித்திரி, குந்தியாக வரும் எம்.வி.ராஜம்மா, அர்ஜுனனாக வரும் முத்துராமன், கனகனாக வரும் ஓ.ஏ.கே.தேவர், சகுனியாக வரும் முத்தையா, சல்லியனாக வரும் சண்முகசுந்தரம் நம் கவனத்தை ஈர்க்கின்றனர்.
பிரபல கன்னட நடிகைகளான கல்பனா தர்மதேவதை வேடத்திலும், ஜெயந்தி திரௌபதை வேடத்திலும் நடித்திருக்கின்றனர்.
அர்ச்சுனன் தவிர இதர பாண்டவ பாத்திரங்களில் பெரிதாகப் பிரபலமாகாத கலைஞர்களே இடம்பெற்றிருக்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் சோபன்பாபு, சந்திரன் வேடத்தில் சில நொடிகள் திரையில் முகம் காட்டுகிறார்.
கிட்டத்தட்ட இருபது திரைப்படங்கள் இது போன்ற சிறு வேடங்களில் நடித்தபிறகே, 1965இல் ’வீரஅபிமன்யு’ மூலமாக நாயகன் ஆனார்.
சுபாங்கியாக வரும் தேவிகா அழகுப்பதுமையாக உலா வருகிறார். பாடல் காட்சிகளில் அவரது கவர்ச்சி ரசிகர்களை ஈர்க்க உத்தரவாதம் தருகிறது.
படத்தின் இறுதி அரைமணி நேரத்தில் தலை காட்டும் என்.டி.ராமாராவ், குறும்பு கலந்த புன்னகையுடன் கிருஷ்ணனுக்குரிய கற்பிதங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கர்ணன் எனும் பெயரைச் சூட்டும் முனிவர் வேடத்தில் நடித்த கே.வி.ஸ்ரீனிவாசன் தந்த இரவல் குரல், அப்பாத்திரத்தை தமிழ் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்கிறது.
அசுர உழைப்பு!
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பி.ஆர்.பந்துலு, தனது பத்மினி பிக்சர்ஸ் மூலமாக ‘கர்ணன்’ படத்தைத் தந்திருக்கிறார்.
1964ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மகாபாரத கதையின் நுட்பங்களைத் திரைக்கதையில் இடம்பெறச் செய்வதற்காக கிருபானந்த வாரியார், அனந்தராம தீட்சிதர் ஆகியோரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கிறது.
நாடக ஆசிரியரான சக்தி டி.கே.கிருஷ்ணசாமி இப்படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார்.
படம் முழுக்க கலை இயக்குநர் கங்காவின் உழைப்பு நிரம்பியிருக்கிறது. தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட புராண கதைகள் பிரமாண்ட உருப்பெற, இவரது குழுவினரின் பங்களிப்பும் ஒரு காரணம்.
கதாபாத்திரங்களின் பின்னணியில் இடம்பெற்ற கலையமைப்பில் பொன்னிறமும் செந்நிறமும் நிரம்பியிருப்பது, இதற்கு ‘கிளாசிக்’ அந்தஸ்தை வழங்குகிறது.
இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் தயாரான புராண மற்றும் பிரமாண்ட திரைப்படங்களில் கங்கா பணியாற்றியிருக்கிறார்.
ஆர்.தேவராஜனின் படத்தொகுப்பு பிரமாண்டமான உள்ளடக்கத்தை மூன்று மணி நேரப் படைப்பாக மாற்றியிருக்கிறது.
ஈஸ்ட்மென் கலரில் தயாரான கர்ணன், மும்பையிலுள்ள பிலிம் சென்டரில் ப்ராசஸ் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் தொழில்நுட்ப ஆலோசகராக ஜே.எப்.ஹெச்.வேண்டர் ஆவேரா என்பவர் பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தில் சண்டைக்காட்சிகளை யார் வடிவமைத்தது என்பது குறித்த விவரங்கள் கிட்டவில்லை. இறுதியாக வரும் போர்க்காட்சியின்போது ராஜஸ்தான் போலீஸ் படையினரும் துணை நடிகர் நடிகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர, இந்திய ராணுவத்தின் 61ஆவது குதிரைப்படை பிரிவும் போர்க்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்பின்போது மூன்று கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கர்ணனை அங்க தேசத்து அரசனாக்குவதாக துரியோதனன் அறிவிக்கும் காட்சியில், மாபெரும் வைட் ஷாட்டுக்கு அடுத்தபடியாக லோ ஆங்கிள் மிட்ஷாட்டில் இருவரும் காட்டப்படும்போது மனம் காற்றில் பறக்கிறது.
தவிர, அரண்மனை செட்டுக்குள் ட்ராலியின் நகர்வுகள் ஒவ்வொன்றின் மூலமாகவும் பின்னேர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி.
காலத்தால் அழியாத பாடல்கள்!
எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் அற்புதமான முத்துக்கள்.
முதல்பாடலாக வரும் ‘என்னுயிர் தோழி கேளொரு சேதி’ சாவித்திரி பாத்திரத்துக்கான அழகு அறிமுகம்.
‘கண்ணுக்கு குலமேது’, ‘கண்கள் எங்கே’, ‘போய்வா மகளே’, பாடல் வரிகளுக்கு முன்பாக நீண்ட முன்னிசையைக் கொண்ட ‘மஞ்சள் முகம் நிறம் மாறி’, ‘மலர்கள் சூட்டி’ ஆகிய பாடல்கள் பி.சுசீலாவின் பெருந்திறமைக்கான சிறு சான்றுகள்.
பி.பி.ஸ்ரீனிவாஸின் குரலில் ஒலிக்கும் ‘என்ன கொடுப்பான்’, சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்த ‘பரித்ராயசாதுநாம்’ ஆகியன ஒரு நிமிடமே ஒலித்தாலும் நம் மனதைத் தொடுகின்றன.
கண்ணதாசன் எழுத்திலமைந்த இப்படத்தின் பாடல்கள் இன்றும் கர்நாடக ராகங்களில் அமைந்தவற்றில் மிகச்சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன.
மகன் விருஷசேனனைப் பிணமாக கர்ணன் தூக்கிவரும் காட்சியிபோது ஒலிக்கும் ஷெனாய் கலந்த பின்னணி இசை நம் மனதை உருக்கும்.
படக்குழுவினருக்கு ஏமாற்றம்!
‘பாகுபலி’ படத்தில் பல்லாளதேவனாக நடித்தபோது தனக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் படங்களின் சிவாஜியின் நடிப்பே முன்மாதிரியாக இருந்தது என்று ராணா டாகுபதி கூறியிருப்பது இதன் சிறப்பைச் சொல்லும்.
1964 ஜனவரி 14 அன்று பொங்கல் விருந்தாக வெளியான ‘கர்ணன்’, மதுரை தங்கம் மற்றும் சென்னை சாந்தி தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.
மற்ற நகரங்களில் இத்திரைப்படம் 80 நாட்கள் வரை ஓடியபிறகு, அங்குள்ள தியேட்டர்களில் ‘பச்சைவிளக்கு’ திரையிடப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், கர்ணனுடன் போட்டியிட்ட ‘வேட்டைக்காரன்’ தேவர் பிலிம்ஸுக்கும் எம்ஜிஆருக்கும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனால், கர்ணன் படத்தின் வெற்றி அதன் பட்ஜெட்டை ஈடுசெய்யவில்லை என்று கூறப்படுகிறது.
கர்ணனைத் தொடர்ந்து பந்துலுவின் ‘முரடன் முத்து’ படத்தில் சிவாஜி நடித்தார். அதன்பின்னர் சிவாஜியும் பந்துலுவும் ஒன்றிணையவில்லை.
1965இல் எம்ஜிஆருடன் பந்துலு இணைந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக ‘ரகசிய போலீஸ் 115’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படங்களை எம்.ஜி.ஆரை நாயகனாகக் கொண்டு இயக்கித் தயாரித்தார்.
எழுபதுகளில் பந்துலுவின் ‘கண்டொண்டு ஹென்னேறு’ படத்தை தழுவி ‘ராமன் தேடிய சீதை’ தமிழில் தயாரானது.
2012ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதியன்று, பி.ஆர்.பந்துலுவின் பிறந்ததினத்தைக் கொண்டாடும் வகையில் ‘கர்ணன்’ படத்தின் டிஜிட்டல் பிரிண்ட் வெளியானது; ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
படைப்புகளுக்கான விதை!
மணிரத்னம் தயாரிப்பில் தயாரான ‘தளபதி’, துரியோதனன் – கர்ணன் நட்பைப் பிரதானமாகக் கொண்டது.
அப்படத்தில் கீதா – ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட ‘கர்ணனில்’ வரும் சாவித்ரி – சிவாஜி நடிப்பைச் சிறிதேனும் நினைவுபடுத்தும்.
கௌரவர் படைகளை தலைமை தாங்கும்படி பீஷ்மரைக் கேட்டுக்கொண்ட துரியோதனன் கர்ணனை எப்படி எதிர்கொண்டான்?
சுபாங்கியின் தந்தை கனகன் எந்த விதங்களிலெல்லாம் மருமகன் கர்ணனை இழிவுபடுத்தினார்?
ஆயிரம் பேரைப் பெற்றாலும், தாய்க்கு முதல் குழந்தை மீதுதான் அதிக பாசமிருக்குமா?
பாண்டவர்களை எவ்விதத்திலும் சேதப்படுத்தாது காக்கும் கண்ணன், கர்ணனையும் அவரது மகனையும் சூது மூலம் கொல்வது எந்தவிதத்தில் தர்மம்?
கர்ணனின் மறைவினால் வேதனையடைந்த துரியோதனன் மனதில் எப்படியெல்லாம் எண்ணக் குமுறல்கள் வெடித்தன என்பது உட்படப் பல்வேறு கேள்விகள் எழக் காரணமாகிறது இத்திரைப்படம். அந்த வகையில், இது பல படைப்புகளுக்கான ஓர் விதை.
இவையனைத்தையும் தாண்டி, ஒரு திரைப்படம் வெளியாகும் காலத்தைவிடப் பின்னர் படுபயங்கரமாக கொண்டாடப்படலாம்.
திரைத்துறைக்கும் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும் இழப்பு அதிகமென்றாலும், காலத்தால் அழியாத கூறுகளை ஒரு திரைப்படம் கொண்டிருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் இதனுள் அடங்கியிருக்கிறது.
பி.ஆர்.பந்துலுவின் ‘கர்ணன்’ திரைப்படம் அப்படியொரு காவிய உதாரணம்!
– ரோகிணி