கமல்ஹாசன் தன் சிறுவயதில் தனது வீட்டில் இருந்ததைவிட அவ்வை டி.கே.ஷண்முகத்தின் வீட்டில்தான் அதிகம் இருந்துள்ளார்.
அப்போது அவர் வளர்ந்த விதத்தைப் பற்றி சொல்கிறார் அவ்வை ஷண்முகத்தின் மகனும் பாடகருமான டி.கே.எஸ்.கலைவாணன்.
‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்குப் பிறகு, கமல் மேலும் படங்களில் நடித்த சமயத்தில், எங்கள் அப்பா குழந்தைகளுக்கான நாடகத்தை போட விரும்பினார்.
இதில் நாயகன், வில்லன், காமெடியன் என்று அனைத்து வேடங்களிலும் குழந்தைகளையே நடிக்கவைக்க திட்டமிட்டார்.
அப்போது திருச்சியைச் சேர்ந்த பாரதன் என்ற எழுத்தாளர், ‘அப்பாவின் ஆசை’ என்ற பெயரில் எழுதியிருந்த நாடகத்தை படித்தார். அதையே அவர் நாடகமாக போட விரும்பினார்.
இந்த நாடகத்தில் யாரை நடிக்க வைப்பது என்று தேடியபோது கமலைப் பற்றி கேள்விப்பட்டார். அந்த பையனை அனுப்ப முடியுமா என்று ஏ.வி.எம். செட்டியாரிடம் அப்பா கேட்டார்.
கமலின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்துவிட்டதா என்று ஏவிஎம்மிடம் அப்பா கேட்டபோது, “அவன் நடித்து முடித்துவிட்டான். நீங்கள் தாராளமாக அழைத்துப் போகலாம். உங்களிடம் இருந்தால் அவன் இன்னும் பண்பட்டு விடுவான்” என்று சொல்லி அவர் அனுப்பி வைத்தார்.
கமலின் அப்பாதான் அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் எப்போதும் காவி நிறத்தில் கதர் சட்டைதான் போடுவார். அப்பாவின் அலுவலகம் வீட்டின் பின்னால் நாடகக் குழுவின் அலுவலகம் இருந்தது.
ஏதாவது வசனம் பேசுவியா என்று அப்பா கேட்டதும், கமல் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காட்டினார். அவர் ஆவேசமாக பேசிக் காட்டியதைப் பார்த்த அப்பா அசந்துவிட்டார்.
பின்னர் அப்பாவின் நாடகத்தில் இருந்து 2 வசனங்களைக் கொடுத்து கமலை பேசவைத்தார். அதையும் கமல் சிறப்பாக பேசினார்.
“என் நாடகத்தில் நீதான் ஹீரோ” என்று அப்பா சொன்னதும், கமலின் அப்பா, அவரது கழுத்தைப் பிடித்து என் அப்பாவின் காலில் பிடித்துத் தள்ளினார்.
“அவர் ஆசிர்வாதத்தை வாங்கிக்கடா முதல்ல” என்றார். இதைப் பற்றி கமல் இப்போதும் கூறுவார்.
அன்றிலிருந்து கமல் எங்கள் வீட்டிலேயே இருந்தார். அப்போது கமல் பேசும்போது அதில் பிராமண பாஷை கலந்திருக்கும். அதையெல்லாம் என் அப்பா மாற்றவைத்தார்.
அதனால் “எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததே ஷண்முகம் அண்ணாச்சிதான்” என்று கமல் இப்போதும் சொல்வார்.
கமலை ஹீரோவாகப் போட்டு அப்பா நடத்திய நாடகம் 100 மேடைகளைக் கண்டது. எல்லோரும் கமலை பாராட்டினார்கள். அவர் மிகுந்த அக்கறையுடன் நடித்தார்.
எங்கள் நாடகக் குழ்வில் கமல் சேர்ந்த நாளில் இருந்து, தனது வீட்டுக்கே போகமாட்டார். எந்நேரமும் எங்கள் வீட்டிலேயே இருப்பார். எங்களோடுதான் வளர்ந்தார். ஊரில் நாடகம் நடக்கும்போது நாங்கள் சேர்ந்து விளையாடுவோம்.
அப்போது எங்கள் அப்பா, “விளையாடும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கமல் ஹீரோவாக நடிப்பதால், யாருக்கு காயம் ஏற்பட்டாலும் கமலுக்கு காயம் ஏற்படக் கூடாது” என்பார். அந்த அளவுக்கு கமல் மீது அப்பாவுக்கு பாசம் அதிகம்.
ஒருமுறை பள்ளியில் விளையாடும்போது கமலுக்கு காயம் ஏற்பட்டது. அப்போதுகூட அவரை எங்கள் வீட்டுக்குதான் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அந்த அளவுக்கு அவர் எங்கள் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தார்.
வெளியூரில் நாடகங்கள் நடக்கும்போது அறையில் கட்டில் மீது ஏறி நின்று ஆங்கிலப் பட வசனங்களைப் பேசிக் காட்டுவார். என் அப்பா அவரை திட்டித் தூங்கவைப்பார்.
எங்கள் நாடகத்தில், “உழைத்துப் பிழைக்க வேண்டும்” என்று ஒரு பாடல் வரும். அந்த பாடல் பின்னணியில் டேப்பில் ஒலிக்க, கமல் அதற்கு ஏற்ப வாயசைக்க வேண்டும்.

ஆனால், ஒருமுறை அந்தப் பாடலைப் பாடும்போது டேப் அறுந்துவிட்டது. எல்லோரும் என்ன செய்வது என்று மலைத்துப் போய் நிற்க, கொஞ்சம்கூட கவலைப்படாமல் முழு பாடலையும் பாடி நடித்தார் கமல்.
அப்பா மேக்கப் போடும்போது கமல் அருகிலேயே இருந்து கவனிப்பார். பின்னாளில் அவருக்கு மேக்கப் மீது ஈடுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
அப்பாவின் மீதான தனது பிரியத்தை எடுத்துக் காட்டும் விதமாகத்தான், தான் பெண்ணாக நடித்த படத்துக்கு, ‘அவ்வை ஷண்முகி’ என்று கமல் பெயர் வைத்தார்.
என்று பழைய விஷயங்களை நினைவுகூர்ந்தார் டி.கே.எஸ். கலைவாணன்.
– பி.எம்.சுதிர்