Take a fresh look at your lifestyle.

எல்லாவற்றிற்கும் செண்டிமெண்ட் பார்ப்பது சரியா?

142
சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது.
 
சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத தாய்மார்கள் பாடுகிறார்களே தாலாட்டுப் பாடல்கள். அதற்கு இணையான கவிதை இலக்கியங்கள் உலக மொழிகளில் இருக்காது என்பது என் கருத்து.
 
“மல்லிகையால் தொட்டில் இட்டா
எம்புள்ளே மேலே
வண்டுவந்து மொய்க்கு மின்னு
மாணிக்கத்தால் தொட்டிலிட்டா
எம் புள்ளையோட
மேனியெல்லாம் நோகுமின்னு
வயிரத்திலே தொட்டிலிட்டா
வானிலுள்ள
நட்சத்திரம் ஏங்குமின்னு
நெஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
நித்திலமே நீயுறங்கு
பொன்னே உறங்கு பூமரத்து வண்டுறங்கு
கண்ணே உறங்கு
கானகத்துச் செண்டுறங்கு”
என்று என் தாய் பாடுவார்.
 
நான் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்தபோது ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்ற படத்திற்கு ஒரு தாலாட்டுப் பாடலை என் தாயார் பாடிய கருத்திலே எழுதியிருந்தேன்.
 
நாட்டியப் பேரொளி பத்மினி பாடுவதுபோல் அக்காட்சி இடம்பெற்றது.
 
“வைகைக்கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ
தெக்குச் சீமைக் காத்து வந்து
தொட்டில் கட்டித் தாலாட்டுது”
என்று ஆரம்பமாகும்.
 
இந்தப் பாடலின் சரணத்திலேதான் என் தாயார் பாடிய கருத்தை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் போட்ட மெட்டுக்கேற்பக் கொஞ்சம் மாற்றி எழுதினேன்.
 
“மல்லிகையால் மெத்தையிட்டா
வண்டுவந்து மொய்க்குமின்னு
மாணிக்கத்தால் மெத்தையிட்டா
மேனியெல்லாம் நோகுமின்னு
வைரங்களால் மெத்தையிட்டா
நட்சத்திரம் ஏங்குமின்னு
நெஞ்சத்திலே மெத்தையிட்டேன்
நீலக்குயில் நீ தூங்கம்மா”
என்று எழுதினேன்.
 
ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பாடல் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் ஒலிப்பதிவு ஆகும்போது டைரக்டர் கே. சங்கர், “தயாரிப்பாளர் ஏதோ வார்த்தையை மாற்றச் சொல்கிறார் என்னவென்று கேள்’ என்றார்.
 
உடனே தயாரிப்பாளர், “படத்தின் முதல் ரீலிலேயே இந்தப் பாடல் வருகிறது. இதுதான் படத்தின் முதல் பாடல். எடுத்த உடனே “நீ தூங்கம்மா” என்று பாடினால் படமே தூங்கிவிடும். ஆகவே ஆடம்மா, ஓடம்மா என்று மாற்றலாமா” என்றார்.
 
“தூங்க வைப்பதற்குத்தான் தாலாட்டுப் பாடல். எழுந்து ஆடவைப்பதற்கு யாராவது தாலாட்டுப் பாடல் பாடுவார்களா? அல்லது ஓடவைப்பதற்குத்தான் பாடுவார்களா?
 
“தூங்கம்மா என்ற வரி வந்தால் படம் தூங்கிப் போய்விடும் என்கிறீர்கள். ஓடம்மா என்ற வரி வந்தால் தியேட்டரை விட்டுப் படம் சீக்கிரம் ஓடம்மா என்று சொல்வதுபோல் ஆகிவிடாதா?” என்று கேட்டேன்.
 
“அப்படியென்றால் ஆடம்மா’ என்று போடலாமே என்றார். சரி, பணம் போடுபவர் சொல்கிறார். அவர் நம்பிக்கையை ஏன் கெடுக்க வேண்டும் என்று “நீ ஆடம்மா” என்று மாற்றி எழுதினேன். வாணி ஜெயராம்தான் இந்தப் பாடலைப் பாடினார்.
 
தயாரிப்பாளர் செண்டிமெண்ட்படி படம் தியேட்டரில் அதிக நாள் ஆடியிருக்க வேண்டுமல்லவா? இல்லை. இரண்டே வாரத்தில் பெட்டிக்குள் ஆடிச் சுருண்டு விழுந்துவிட்டது. இதுதான் சினிமா செண்டிமெண்ட்.
 
எதிலும் ஓரளவிற்குத்தான் செண்டிமெண்ட் பார்க்க வேண்டும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்கும்தான்.
 
– கவிஞர் முத்துலிங்கம்
 
நன்றி: தினமணி