தமிழ், தெலுங்கில் முன்னணிக் கதாநாயகிகளில் வலம் வரும் நடிகை சமந்தா, திருமண வாழ்க்கையில் சிக்கல், விவாகரத்து, தசை அழற்சி நோயால் பாதிப்பு என்று பல பிரச்சினைகளைக் எதிர்கொண்டு இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை, சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சமந்தா.
அதில், “நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு முன்பு நிறையக் கஷ்டங்களை எதிர்கொண்டேன். பொதுவாக வாழ்க்கையில் நடைபெறும் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள அனைவரும் நினைப்போம்.
ஒவ்வொரு நேரமும் இந்தப் பிரச்சினையெல்லாம் தாங்க வேண்டுமா என்றும் யோசிப்போம். இப்படி நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் விரும்புவோம். ஆனால், பின்னால் திரும்பிப் பார்த்தால் அதில் இருந்து விடுபட வழியே இருந்திருக்காது.
கடந்த மூன்று வருடங்களாக இந்த நிகழ்வுகள் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எத்தனையோ முறை நான் நினைத்து இருக்கிறேன்.
ஆனால் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போதுதான் வாழ்க்கையை வெற்றிக்கொண்டதாக அர்த்தம்.
கடந்தக் காலத்தோடு ஒப்பிடும்போது இப்போது நான் தைரியமாக இருக்கிறேன். இந்த நிலைக்கு வர நிறைய பிரச்சினைகள், சவால்களை எதிர்கொண்டு இருக்கிறேன்” என்று நேர்காணலில் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.