மனம் விட்டுப் பேசியிருந்தால் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்பட்டிருக்கும்!
பாடலாசிரியர் ரவிசங்கரின் நினைவுகள்
1992ஆம் வருட வாக்கில் கே.கே.நகரை ஃபேஸ் செய்த எம்.ஜி.ஆர் நகர், கவுன்சிலர் சுசிலா கோபாலகிருஷ்ணன் வீட்டில் பேச்சுலராக குடியேறினேன்.
ஏற்கனவே பத்திரிகையில் ஒன்றாக பணிபுரிந்த நண்பர் கலைக்குமார், அசிஸ்டெண்ட் டைரக்டர் கண்ணன் மூவரும்தான் ரூம் மேட்ஸ். அந்த போர்ஷனில் ஏற்கனவே குடியிருந்த காமெடி நடிகர் டக்ளா ராமு, நடிகர் சத்யன் (நடிகர் ராஜேஷ் தம்பி) காலி செய்தனர். நண்பர் கோவை பாலுதான் அந்த வீடு பார்த்துக் கொடுத்தார்.
அதன்பிறகு நண்பர் கலைக்குமார் டைரக்டர் விக்ரமனிடமும், நான் டைரக்டர் அப்துல் ரகுமான் பிறகு எழில் சாரிடமும் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஆகி பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
கலைக்குமார் ‘ஏதோ ஒரு பாட்டு..’ ஹிட்டானதைத் தொடர்ந்து பாடலாசிரியராகவும் இருக்கிறார். நண்பர் கணேஷும் ரூமிற்கு வந்து அரட்டையடிக்கும் Regular Comer.. ஜூ.வி செந்தில் குமரன் உட்பட நிறைய நண்பர்கள்.
97-ல் கலைக்கு திருமணம் ஆனதைத் தொடர்ந்து வேறு வீடு குடிபெயர்ந்தார். இன்னொரு நண்பர் கண்ணனும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு நான் தனியாகத்தான் அங்கு வசித்தேன்.
அப்போது ஏற்கனவே கலை மூலம் அறிமுகமாகியிருந்த ரவிசங்கர் சார், தான் ஸ்கிரிப்ட் எழுத தனிமை தேவைப்படுது. உங்கள் ரூமில் பார்ட்னராக வருகிறேன் என்றார். அதிர்ந்து பேசாத மென்மையான குணம் அவருக்கு. உடனே நான் சம்மதித்தேன். வாடகையில் ஷேர் செய்துக் கொண்டார்.
ரவிசங்கர் சாரின் சொந்த வீடு சாலிகிராமத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வீட்டுக்கு பக்கத்து வீடு. அவருடைய வயதான அப்பா, பெட்டில் இருந்த அவருடைய அம்மா இருந்தார்கள். பெரிய வீடு. வேலைக்காரம்மா, சமையல்காரம்மா அங்கே இருந்தனர். அம்மாவை பராமரித்து கவனித்து விட்டுதான் அவர் வெளியே கிளம்புவார்.
நான் அப்போது டைரக்டர் எழில் சாருடன் டிஸ்கஷன், ஷூட்டிங், அவுட்டோர் என்று போய் விடுவேன். அப்போது அங்கிருந்து சுதந்திரமாக அவருடைய அசோஸியேட்ஸ் இமயவரம்பன், சாமி ராஜ் உடன் டிஸ்கஸ் செய்து ரவிசங்கர் சார் ரெடி செய்த ஸ்கிரிப்ட் ‘ வருஷமெல்லாம் வசந்தம்’. பிறகு அங்கிருந்து ஷூட்டிங் போய் படத்தை முடித்து, ரிலீஸ் செய்தார்.
2001-ல் எனக்கு திருமணமாகி அந்த வீட்டிலேயே 2006 வரை இருந்தேன். என்னுடைய திருமணத்திற்கு திருவண்ணாமலை வந்து வாழ்த்தி விட்டு பிறகு வேறு இடம் மாறினார், ரவிசங்கர்.
அதன்பிறகு அங்கங்கே, சில நேரம் கே.கே. நகரில் சந்திப்போம். கொஞ்சம், கொஞ்சமாக தொடர்பு விட்டுப்போய் விட்டது. நான் எதிர்பார்க்கா விட்டாலும் ‘சார்..’ என்று மரியாதையாகத்தான் அழைப்பார்.
நானும் அவரை சார் சொல்லி அழைப்பேன். அவ்வப்போது சில கதைகள் சொல்லுவார். வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.

அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் அமையாதது மற்றும் உடல்நிலை பிரச்னை தாங்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார். பிறரிடம் பழகுவதற்கு சங்கோஜப்படுவார்… ஒதுங்கியே இருப்பார்.
நிறைய பேரிடம் பழகிக் கொண்டிருந்திருந்தால் ஒருவேளை அவருடைய தற்கொலை எண்ணம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
இப்போது ஒளிப்பதிவாளர் -டைரக்டர் விஜய் மில்டன் ‘ மழை பிடிக்காத மனிதன் ‘ என்று ஒரு படம் எடுக்கிறார். நான் சந்தித்ததில் மழை பிடிக்காத மனிதன் ரவிசங்கர் சார்தான். மழை வந்தாலே டென்ஷன் ஆகி விடுவார். ‘எதுக்கு சார் நச்.. நசன்னு பெய்ஞ்சுக்கிட்டிருக்கு’ என்று சொல்லுவார்.
நான் கூட அவரிடம், “மழைக்காலமும், பனிக்காலமும் சுகமானதுதானே..” என்பேன். சிரிப்பார். அமைதியான குணம் கொண்ட ரவிசங்கர் சார், ஆழ்கடல் அமைதிக்கு சென்று விட்டார். நட்பை பறிகொடுத்துவிட்டேன்.
– நன்றி: ராமு சரவணன்
இயக்குநர் ரவி சங்கர்
வருஷமெல்லாம் வசந்தம்
DIRECTOR RAVI SHANKAR SUICIDE
ROSAPPU CHINNA ROSAPPU SONG
DIRECTOR RAVI SHANKAR