Take a fresh look at your lifestyle.

இட்லி கடை – இயக்குநராக ஜொலித்தாரா தனுஷ்?!

105

சாதாரணமான மனிதர்களைக் காட்டுகிற, அவர்களது வாழ்வில் இருக்கிற அடிப்படையான விஷயங்களைப் பேசுகிற, இதுவரை நாம் பலமுறை பார்த்த காட்சிகளின் எளிமையான வடிவத்தைக் கொண்டிருக்கிற ஒரு திரைப்படத்தை மனதை ஈர்க்கிற வகையில் தர முடியுமா?

இப்படியொரு கேள்வியை நம் மனதில் உருவாக்கியது, தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள ‘இட்லி கடை’ பட ட்ரெய்லர்.

நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், இளவரசு, ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்குகிறது ‘இட்லி கடை’?

‘இ.க.’ கதை என்ன?

எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் தொடங்குவதற்கு முன்னிருந்தே திரைப்படங்களில் சொல்லப்படுகிற ‘அரதப்பழசான’ கதையே இதிலும் இருக்கிறது.

தேனி மாவட்டம் சங்கராபுரம் எனும் சிற்றூரில் இட்லி கடையை நடத்தி வருகிறார் சிவனேசன் (ராஜ்கிரண்).

அவரது மனைவி கஸ்தூரி (கீதா கைலாசம்). இவர்களுக்கு ஒரே மகன் முருகன் (தனுஷ்).

கல்லூரி படிக்கையில், கிரைண்டர் கொண்டு மாவு அரைத்தால் எளிதாக வேலை முடியும் என்கிறார் முருகன்.

கிரைண்டர் விற்பனை பிரதிநிதி ஒருவரையும் அழைத்து வருகிறார். ஆனால், அது மாவு அரைத்து இட்லி அவித்துச் சாப்பிட்டுப் பார்க்கிறது சிவனேசன் – கஸ்தூரி இணை. அவர்களுக்குத் திருப்தியில்லை.

‘நாங்க கையால உரல்லயே அரைச்சுக்கிடுறோம்பா’ என்று சொல்லி அனுப்புகிறது. அதனைக் காணும் முருகன் ஏமாற்றமடைகிறார்.

தங்களது கடையைப் போன்றே பக்கத்து ஊர்களிலும் தொடங்கலாம் என்று ‘ஐடியா’ தருகிறார்.

ஆனால், ‘எல்லா இடத்துலயும் நான் இருக்க முடியாதேப்பா’ என்று மறுத்துவிடுகிறார் சிவனேசன். அது முருகன் மனதில் ஏமாற்றத்தைத் தர, வேலை தேடி சென்னை செல்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து, பாங்காக்கில் ‘ஏஎஃப்சி’ எனும் மிகப்பெரிய உணவகத்தில் மேலாளராக வேலை செய்கிறார்.

அதனை நடத்தி வருபவர் பெரும்பணக்காரரான விஷ்ணுவர்தன் (சத்யராஜ்). அவருக்கு அஸ்வின் (அருன் விஜய்) என்றொரு மகன், மீரா (ஷாலினி பாண்டே) என்றொரு மகள்.

அஸ்வினுக்கு முருகனைக் கண்டாலே ஆகாது. ஆனால், மீராவோ முருகனைக் கல்யாணம் செய்தே தீர்வது என்று பிடிவாதமாக இருக்கிறார்.

விஷ்ணுவர்தனோ, தனது பிள்ளைகள் என்ன விரும்பினாலும் செய்து தருவதில் திருப்தி காண்பவர்.

முருகன் – மீரா கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. திருமணத்திற்குச் சில நாட்கள் முன்பாக, கஸ்தூரி போன் செய்கிறார்.

தந்தை இறந்துவிட்டதாகச் சொல்கிறார். அதனைக் கேட்டதும் முருகன் திடுக்கிடுகிறார்.

‘முருகா, கல்யாணத்துக்கு எல்லோருக்கும் இன்விடேஷன் கொடுத்தாச்சு. இப்ப அதை தள்ளிவைக்க முடியாது.

ப்ளீஸ், எல்லாத்தையும் முடிச்சுட்டு சீக்கிரமா வந்துருங்க’ என்று அவரை அனுப்பி வைக்கிறார் விஷ்ணுவர்தன்.

வந்த இடத்தில், முருகனை இன்னொரு சோகம் தாக்குகிறது.

ஏற்கனவே பெற்றோரை அருகில் இருந்து பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்ச்சியில் இருப்பவர் துவண்டு போகிறார்.

திருமணத்தை ஆறு மாதங்கள் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என்று முருகன் நினைக்கிறார். ஆனால், மீராவோ அதனைக் கேட்கும் மனநிலையில் இல்லை.

அந்த நிலையில், பாங்காக்கில் இருந்து அஸ்வின் சங்கராபுரத்துக்கு வருகிறார். முருகனை அடித்து இழுத்துச் செல்வது எனும் மனநிலையில் இருக்கிறார்.

இடைப்பட்ட சில நாட்களில், மூடியிருந்த தந்தையின் இட்லி கடையைத் திறந்துவிடுகிறார் முருகன்.

தந்தையைப் போலவே, தானும் அதனைத் திறம்பட நடத்த முயற்சித்து வருகிறார்.

ஊராருக்குப் பிடித்த வகையில் சுவையான உணவை முருகனால் தர முடிந்ததா? அஸ்வினால் அவர் எத்தகைய இடையூறுகளை எதிர்கொண்டார்?

விஷ்ணுவர்தனும் மீராவும் முருகனைச் சந்திக்க வந்தார்களா? இவற்றுக்கு நடுவே, வெளியூரில் இருந்து வந்த முருகனுக்கு யாரெல்லாம் துணையாக நின்றார்கள் என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ‘கதை இப்படித்தான் இருக்கும்’ என்று தியேட்டருக்குள் நுழைந்தால், அதற்கேற்பத் திரையிலும் படம் ஓடுகிறது.

ஆனால், ஒரு நடிகர் இயக்குனர் ஆனால் நடிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதைக் காட்டிவிடுகிறார் தனுஷ்.

எளிமையான வசனங்கள், காட்சியமைப்பு, பாத்திர வார்ப்பு என்றிருந்தபோதும், குறிப்பிட்ட நடிகர் நடிகையரிடமிருந்து தனுஷ் நடிப்பை வாங்கியிருக்கும் விதமே, திரையோடு நம்மை ஒன்ற வைக்கிறது. இட்லி கடையின் யுஎஸ்பியே அதுதான்.

அபாரமான நடிப்பு!

இந்த படத்தில் நாயகன், நாயகியின் நடிப்பு எப்படியிருந்தது என்று தனியே குறிப்பிடத் தேவையில்லை.

அந்த அளவுக்கு தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண்விஜய், ராஜ்கிரண், கீதா கைலாசம், இளவரசு, பார்த்திபன் எனப் பலர் ‘செம’ நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

இவர்கள் போக வடிவுக்கரசி, நரேன், இளவரசுவின் குடும்பத்தினராக வருபவர்கள், ஊர்காரர்களாக வருபவர்கள் எனப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

வில்லத்தனம் செய்கிற விஷயத்தில் இன்னொரு ‘ரஜினிமுருகன்’ ஆக இப்படம் சமுத்திரக்கனிக்கு அமைந்திருக்கிறது.

தொடக்கத்தில் வரும் காட்சிகளில் நித்யா மட்டுமே திரையில் ‘துருத்தலாக’த் தெரிந்தார்.

ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியொரு எண்ணம் உருவானதையே மறக்கடித்துவிடுகிறார்.

ஒரு இயக்குனராக, தனுஷ் மிளிர்கிற படம் ‘இட்லி கடை’.

வெவ்வேறு வகைமையில் பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன் படங்களைத் தந்தபோதும், திரையோடு நம்மை ஒன்றச் செய்கிற வித்தையை இதில் அவர் சாதித்திருக்கிறார்.

அதனைச் சாதித்தபிறகு, கிளைமேக்ஸ் வரை அந்த நிலையில் இருந்து ரசிகர்கள் விலகிவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார். அதுவே இப்படத்தின் சிறப்பு.

ஜாக்கியின் கலை வடிவமைப்பு, கிரண் கௌசிக்கின் ஒளிப்பதிவு, ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு, பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி வடிவமைப்பு, சதீஷின் நடனக்காட்சி வடிவமைப்பு, ராஜாவின் ஒப்பனை எனப் பல அம்சங்கள் இப்படத்தினைச் செறிவாக உணரக் காரணமாக இருக்கின்றன.

அனைத்துக்கும் மேலாக ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.

காட்சிகளில் மௌனத்திற்கு அவர் இடம் தந்திருக்கும் விதமும் உணர்ச்சிப் பிரவாகமான காட்சியமைப்பில் தனது இசையைக் கோர்த்திருக்கும் விதமும் ‘அடடா.. அடடா..’ ரகம்.

எளிமையான மனம் கொண்டவர்கள் இந்த படத்தில் பல காட்சிகளைக் கடந்து வருகையில் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

கிட்டத்தட்ட பாடல்களும் கூட அதே ரகத்தில்தான் தந்திருக்கிறார் ஜி.வி.பி.

இந்த படம் முழுக்க யதார்த்தமாகவும் இல்லை; முழுக்க சினிமாத்தனமாகவும் இல்லை. அதனால் சில லாஜிக் மீறல்கள் வெளிப்படையாகத் தெரியும்.

மீரா மற்றும் முருகன் பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் ஆழமானதாகக் காட்டியிருக்கலாம்; ’கல்யாணம் வரைக்கு வந்த ஒரு பெண்ணை எப்படி கைவிட்டுப் போக முடியுது’ என்கிற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமான காட்சிகள் இதில் இல்லாதது ஒரு குறை.

போலவே, குலக்கல்வி மாதிரி ‘குலத்தொழில்’ எனும் விஷயத்தை ஊக்குவிக்கும்விதமாக இப்படத்தின் சிறப்பம்சங்கள் மடை மாற்றக்கூடிய சாத்தியங்களும் இதில் இருக்கின்றன.

அதையும் வசனங்களில் லேசாகச் சரி பண்ணியிருக்கலாம்.

மற்றபடி, ’படத்துல புதுசா எதுவுமே இல்ல. ஆனாலும் நல்லாத்தான் இருக்கு’ என்கிறவிதமாக அமைந்திருக்கிறது ‘இட்லி கடை’.

கூடவே, பெற்றோர் குழந்தைகளைச் சிறு வயதில் இருந்தே நல்வழி காட்டி வளர்ப்பது வாழ்வின் அடிப்படையான விஷயம் என்று சொல்லியிருக்கிறார் தனுஷ்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவரை ஜொலிக்க வைத்திருக்கிறது இப்படம்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்