Take a fresh look at your lifestyle.

ஐ அம் கேம் – படத்தைப் பார்க்க ரசிகர்கள் தயாரா?

துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், கதிர் நடிப்பில், கதை எழுதி, சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோரோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, ஆதர்ஷ் சுகுமாரன், ஷாபாஸ் ரஷீத், சஜீர் பாபா ஆகியோரோடு சேர்ந்து வசனம் எழுதி, நஹாஸ் ஹிதாயத் இயக்கி இருக்கும் படம்.

வே ஃபேரர் பிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் தயாரித்தது.

I’m Game என்றால் நான் தயார் என்று பொருள். I’m Game, If You are என்பது முழுமையான வாக்கியம். அதாவது நீங்கள் தயார் என்றால் நானும் தயார் என்பது பொருள். 

ஒரு படத்துக்கான திரைக்கதை அமைப்பதில் மலையாளக் கலைஞர்கள் மிக வல்லவர்கள்.

மலையாளப் படங்கள் எல்லாமே ஓரளவாவது நன்றாக இருக்கக் காரணம் அதுதான். 

அதிலும் உலக அளவிலான ஆங்கிலப் படங்களை எடுத்துக் கொண்டு காப்பி அடித்ததே தெரியாத அளவுக்கு செய்து விடுவார்கள்.

ஒரிஜினல் படத்தை எடுத்தவர்களாலேயே அது நம் படத்தின் காப்பி என்பதை கண்டுபிடிக்க முடியாது.

அதாவது இட்லியில் இருந்துதான் அந்த இட்லி உப்புமா பிறந்தது என்பது, அந்த இட்லிக்கே தெரியாது.

அதே மாதிரி அவர்கள் அமைக்கும் திரைக்கதைகள் மிக நம்பும்படியாக இருக்கும்.

அதுவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான யதார்த்தத்துக்கு சம்மந்தமே இல்லாத கதைகளைக் கூட உண்மை போல நம்ப வைக்கும் சிறப்பான திரைக்கதைகளை அவர்களுக்கு அமைக்கத் தெரியும்.

உதாரணமாக தமிழர்கள் எல்லாம் அயோக்கியர்கள், திருடர்கள் தமிழ்ப் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று அவர்கள் படங்களில் சொல்வார்கள்.

அதேபோல மலையாளிகள் தங்கள் குடும்பப் பெண்களின் மானம் காக்க இனமானம் தன்மானம் மாமானம் கொண்டு ரத்தம் சிந்தவும் உயிரை இழக்கவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டையும் நம்பும் அளவுக்கு திரைக்கதை அமைப்பார்கள். 

அப்படித்தான் இந்த ஐ அம் கேம் படத்திலும்.

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியில் மலையாளிகள் அதிகம் இருக்க மாட்டாரகள்.

காரணம் கிரிக்கெட் மிக கடினமான கடுமையான கேம். அடி படவும் உயிர் போகவும் வாய்ப்பு உள்ள விளையாட்டு.

மூளையைப் பயன்படுத்தி நோகாமல் சம்பாதிப்பதுதான் அவர்களுக்கு வழக்கம்.

கமர்ஷியல் கிரிக்கெட்டோ தேசிய அளவிலான கிரிக்கெட்டோ…. கேரளம் தந்த மாபெரும் கிரிக்கெட்டர் என்றால் அது ஸ்ரீசாந்த் தான்.

நிறைய நோ பால்கள் போடுவது, பேட்டிங் செய்பவருக்கு கஷ்டம் இல்லாமல் பந்துகளை பவுண்டரி வரை போகும் அளவுக்கு தானே பெருந்தன்மையோடு வைட் பால் போடுவது,

மீறி சரியாகப் போட்டாலும், பந்துகளை சுலபமாக அடிக்கும்படி போட்டு ரன்களை வள்ளல் போல அள்ளிக் கொடுப்பது, பேட்டிங் செய்யும்போது ஸ்டம்புகளை மட்டுமல்ல கையில் உள்ள பேட்டையும் பறக்க வைப்பது,

ஃபீல்டிங் செய்யும்போது பந்தை முன்னால் விட்டு பின்னால் துரத்திக் கொண்டு ஓடி, பந்து பவுண்டரி கடந்த உடன் கீழே விழுந்து புரள்வது, ஆட்டம் போய்க் கொண்டு இருக்கும்போதே கடினமான சூழல்களில் கிரவுண்டிலேயே தேம்பித் தேம்பி அழுது சக வீரர்களின் மன உறுதியைக் குலைப்பது,

இவை கூடப் பரவாயில்லை.

 

இந்திய அணிக்கு ஆடிக் கொண்டு இந்திய அணிக்கு எதிராக கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கு பெற்று பெரும் பணம் லஞ்சமாகப் பெற்று தண்டிக்கபட்டது இது கூட ஸ்ரீசாந்தின் வரலாறுதான்.

ஆனால் இந்த ஐ அம் கேம் படத்தில்?

மெட்ராஸ் ரிபெல் என்ற அணியில் விளையாட திருவனந்தபுரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் கிரிக்கெட் வீரன் விக்கி (ஆண்டனி வர்கீஸ்), சூதாட்டத்தில் பெரும்பணம் சம்பாதிக்க சொந்த அணியே தோற்க வேண்டும் என்று சொல்லும் மேற்படி மெட்ராஸ் ரிபெல் அணியின் உரிமையாளர் (இயக்குநர் மிஸ்கின்), மற்றும் உரிமையாளருக்கு துணை போகும் அந்த அணியின் கேப்டனான சென்னைக்காரர் (கதிர்) இருவரையும் பகைத்துக் கொள்கிறான்.

சொல்லொணா கொடுமைகள் அனுபவித்து கண்ணீர், வியர்வை, ரத்தம் சிந்தி காதலியைக் களத்தில் இறக்கி, இன்னுயிரை இழந்து மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் மனம் காக்கிறார் அந்த திருவனந்தபுரம் கிரிக்கெட் வீரர் என்று திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். 

இப்போ புரியுதா, உண்மைக்கு புறம்பாக திரைக்கதை அமைப்பதில் அவர்கள் எவ்வளவு வல்லவர்கள் என்பது.? 

ஆனால், எல்லா சமயத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றால் முடியுமா?

ம்ஹும் !

ஹைதராபாத்தில் வாழும் பெரும்பணக்காரரரின் மகனான டான் ஜான் (துல்கர் சல்மான்) சூதாட்டத்தில் பெரும் பணம் இழக்கிறான் ஆந்திர தாதா பைனான்சியர்களிடம் கடன் வாங்கி, கட்ட முடியாமல் தெலுங்கில் திட்டு வாங்கி அடிபடுகிறான்.

ஒரு நிலையில் அவனது அம்மா (ஜெயசுதா) அறுபது லட்ச ரூபாய் பணம் கொடுத்து, ”இவ்வளவுதான் முடியும். இதை வச்சு நீ பொழைச்சாலும் சரி நாசமா போனாலும் சரி” என்று (அப்படியே) சொல்கிறார்.

அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் ஆடப் போகும் டான் ஜான், சென்னை அணி தோற்கும் என்று பணம் கட்டுகிறான். ஆனால், சென்னை அணி ஜெயிக்கிறது.  

வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி, இழந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, ஜான் காரில் தப்பி ஓட, அவனை சூதாட்ட கிளப் ஆட்கள் துரத்தி வர, கார்கள் மோதி விபத்துக்கு ஆளாகி அவனது வலது கை துண்டிக்கப்படுகிறது.

அதே நாளில் விபத்தில் இறந்த வேறு ஒருவரின் கை அவனுக்கு பொருத்தப்படுகிறது. 

சில மாதங்களில டான் ஜான் குணமாகிறான். ஆனால், அவனது கை அவன் சொன்னபடி கேட்காமல் சுயமாகச் செயல்படுகிறது. பொதுவாக அப்படி வேறொருவரின் கை பொறுத்தப்படும்போது புதிய கை சில சமயம் மூளை சொல்வதை கேட்காது.

மாறாக செயல்படும். மருத்துவத்தில் இதற்கு ஏலியன் சின்ட்ரம் என்று பெயர். 

ஆனால் டான் ஜானுக்கு பொருத்தப்பட்ட கை அதற்கு எல்லாம் மேலே.

பெரும்பலத்தோடு பலரையும் அடிக்கிறது. அது ஆடும் சூதாட்டத்தில் எல்லாம் டான் ஜானுக்கு பணம் கொட்டுகிறது. திடிரென்று சிலரை கொலை செய்ய முயல்கிறது.

அப்படி கொல்ல முயல்வது மெட்ராஸ் ரிபெல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் டேவிட் ஆப்ரஹாமை (மிஷ்கின்).

இங்கேதான் உண்மையான ஸ்ரீசாந்தின் நிஜ வரலாற்றுக்கு முற்றிலும் மாறான விக்கி என்ற கேரளா கற்பனை கிரிக்கெட் வீரரின் கதை சொல்லப்படுகிறது. 

விக்கி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில், இந்த ஆண்டும் மெட்ராஸ் ரிபெல் அணியின் உரிமையாளர் ”என் அணி ஜெயித்தால் எனக்கு இருநூறு கோடிதான் லாபம் வரும். தோற்றால் சூதாட்டத்தில் எனக்கு நானூறு எண்ணூறு கோடி லாபம் வரும்” என்று தனது அணியை தோற்கவைக்க திட்டமிடுகிறார்.

இந்த நிலையில் டான் ஜானின் உடலில் இருக்கும் மேற்படி கேரள கிரிக்கெட் வீரரின் ‘நாட்டைக் காக்கும் கை’ …

ஜானின் உதவியோடு, எப்படி மெட்ராஸ் ரிபெல் அணியின் மோசமான உரிமையாளரைக் கொன்று, நேர்மை இல்லாத மெட்ராஸ் கிரிக்கெட் கேப்டனுக்கு புத்தி புகட்டி, மெட்ராஸ் அணியின் மானம் காத்தது என்பதே இந்த படம்.

சிம்பிள். 

வில்லனால் அநியாயமாகக் கொல்லப்படும் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, மாமன், மச்சான், பொண்டாட்டி, காதலி இவர்களில் ஒருவரோ ஒரு சிலரோ ஆவியாக ஹீரோ அல்லது ஹீரோயின் உடம்பில் வந்து, ஹீரோவுக்கு தெரியாத ஃ பிளாஷ்பேக் உண்மையை சொல்லி ஹீரோ மூலமே வில்லனை பழிவாங்குவார்கள் இல்லையா?

அதே, முப்பதாயிரத்து மூணு ஆயிரத்து முன்னூற்றி நானூற்றி முப்பத்திப் பத்தாவது கதைதான்.

புதிய தோரணங்கள், நாளை நமதே, கல்யாண ராமன், மூன்று முகம், மெர்சல் எல்லாம் ஞாபகம் வருகிறது.

என்ன ஒரே வித்தியாசம் என்றால், இந்த ஐ அம் கேம் படத்தில் ஆவிக்கு பதில், இறந்தவரின் கை வந்து ஒரு கை போட்டு ஆடுகிறது. அவ்வளவுதான்.

அதுவாவது புதுசா என்றால் அதுவும் இல்லை.

சுமார் பத்து வருடத்துக்கு முன்பு ஆர்.எஸ். கார்த்திக் நடிப்பில் அசோக் என்பவர் இயக்கிய பீச்சாங்கை படத்தின் கதையும் இதே கை விளையாடும் கதைதான்.

சின்ன பட்ஜெட்டில் இளம் கலைஞர்கள் எடுத்த பீச்சாங்கை படத்தில் கதை இந்த ஐ அம் கேம் படத்தின் கதையைவிட சிறப்பானது. 

ஒரு பிக்பாக்கெட்காரனின் கை ஒரு நிலையில் அவன் சொல்கிறபடி பிக்பாக்கெட் அடிக்க மறுக்கிறது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் பணம் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் அவன். நடந்தது என்ன என்பதே பீச்சாங்கை படத்தின் கதை.

பத்து வருடத்திற்கு பிறகு அப்படி ஒரு கதையை இப்போது இப்படி எடுத்து இருக்கிறார்கள். இதை எழுத எதற்கு ஏழு பேர் என்பதுதான் புரியவில்லை. 

இதற்கிடையில் படத்தில் பாராட்டவும் பல சிறப்பான விஷயங்கள் இருக்கின்றன.

விக்கியின் கை தனது உடலில் இருந்து கொண்டு தன் பேச்சைக் கேட்காமல் விபரீதங்கள் செய்வதை சமாளிக்க முடியாமல், டான் ஜான் போராடும் காட்சிகளில் பிரம்மிக்க வைக்கும் நடிப்பை வழங்கி இருக்கிறார் துல்கர் சல்மான். யப்பப்பா… அபாரம்.

துல்கர் சல்மானும் அவர் உடம்பில் உள்ள விக்கியின் கையும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சிகளை, சாதாரண கற்பனைக்கு அப்பாற்பட்டு சிலிர்க்க வைக்கும் வகையில் அமைத்து படமாக்கி விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்கள் சண்டை இயக்குனர்கள் அன்பறிவ்.

கிரேட். ஐ அம் கேம் படத்தின் Man (Men?) of the match இவர்கள்தான்.

விக்கியின் கையிடம் இருந்து டான் ஜானை பலரும் பிரிக்கப் போராடும் காட்சிகளை இயக்கிய விதத்தில் நஹாஸ் ஹிதாயத்தும் ஒளிப்பதிவு செய்த விதத்தில் ஜிம்ஷி காலித், ஜோமோன் ஜான் ஆகியோரும் பாராட்டுப் பெறுகிறார்கள். 

அஜயன் சாலிசெரியின் கலை இயக்கமும் தயாரிப்பு வடிவமைப்பும் அருமை.

கேம்பளிங் காட்சிகளை ரிச்சாக படமாக்கிய விதம், சாமன் சாக்கோவின் பரபர படத் தொகுப்பு.

ஜேக்ஸ் பிஜாயின் இசை ஆகியவையும் படத்துக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளது.

இப்படி எல்லாம் பல தொழில் நுட்பத் தரம் வாய்ந்த அற்புதமான விஷயங்கள் இருந்தபோதும் குழந்தைத்தனமான திரைக்கதை மொத்தப் படத்தையும் கவிழ்க்கிறது.

கதைக்கு தேவையே இல்லாமல் சுத்திக் கொண்டு இருக்கிறார் கயாடு லோஹர்.

நாடகத்தனமான வில்லன் கேரக்டரில் அசத்துகிறார் மிஷ்கின்.

அணிக்கு துரோகம் செய்யும் பயந்தாங்குளி கேப்டன் கேரக்டருக்கு ஒரு தமிழ் முகம் வேண்டும் என்பதால் கதிர் அதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்.

உண்மையில் நேர்மையான கிரிக்கெட் வீரன் விக்கி கேரக்டரில் கதிரையும், முதலாளிக்கு பயப்படும் கேப்டன் கேரக்டரில் ஆண்டனி வர்கீஸையும் போட்டு இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

உண்மையில் டான் ஜான், விக்கியின் அந்த கையோடு போராடும் காட்சிகளைப் பார்த்தபோது ‘இப்பவே இப்படி என்றால் இரண்டாம் பாதியில் அசத்தப் போகிறார்கள்’ என்று ஆசைப்பட்டால் மெர்சல் படத்தின் இரண்டாம் பாதியில் கொண்டு வந்து நம்மை தள்ளி விட்டுப் போகிறார்கள்.

தொழில்நுட்ப சிறப்பு வாய்ந்த ஒரு பெரும் உழைப்பு மோசமான எழுத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது.

மொத்தத்தில் I’m Game..

Though the film is game, the audience is not! 

– சு. செந்தில்குமரன்