ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன்சந்திரா நடிப்பில் உருவாகி,
ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு,
சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சோமிதரன், “சின்ன வயதில் போர் நடந்துகொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும்.
அந்தப் படங்களைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை கேட்கமுடியாதா!
என்னுடைய ஊரின்… என்னுடைய வீட்டின்… ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா! என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது.
அதனை சாத்தியப்படுத்திய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும்.

நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி.
இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையைச் சொல்லும் படமாக இது இருக்கிறது.
போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம்.
அந்த அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள்தான் திருமணமும் இருந்தது.
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியபோது அவர் ஒரு முறை என்னிடம்
‘உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்கமுடியாமல் போய்விட்டது’ எனச் சொன்னார்.
இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.