“அழகுகள் யாவும் அவளிடம் அடைக்கலம், அவள் அங்கங்கள் யாவும் மன்மதன் படைக்கலம்” என்றான் ஒரு கவிஞன்.
அப்படிப்பட்ட அழகு’களை’… தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அழகி ஒருத்திக்கு பெற்றோர் இட்ட பெயர் மும்தாஜ் பேகம் ஜெஹான் தெஹ்லவி.
அழகு… தவமிருக்காமலேயே சிலருக்குக் கிடைக்கிற வரம். இயற்கையின் படைப்பிலே எல்லாமே அழகுதான்.
இங்கு, அழகாய் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். அழகு தன்னிடம் வந்துசேர வேண்டும் என துடிக்கிறார்கள்.
ஆனால், நினைக்காமலே, துடிக்காமலே சிலரை அழகு அண்டி வந்து அடைக்கலமாகி, தன் அடையாளத்தை ஆழமாகப் பதித்து விடுகிறது.
அப்படித்தான் மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவியிடம் தன்னை அடைக்கலப்படுத்திக் கொண்டது அழகு.
மும்தாஜ் பேகம் தேஹலவி – பாலிவுட் சினிமாவை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தார். தனது அழகாலும், அருமையான நடிப்பாலும் பாலிவுட்டை ஆண்ட இந்த அழகு மலரின் திரைப்பெயர்தான் மதுபாலா.
1933-ம் ஆண்டு டெல்லியில் பழமைவாத இஸ்லாமிய குடும்பம் ஒன்றில் பிறந்த 11 குழந்தைகளில் 5-வது குழந்தைதான் மதுபாலா.
பெஷாவாரில் தந்தை பணியாற்றிய அந்த நிறுவனத்தில் வேலையிழப்பு காரணமாக மதுபாலாவின் குடும்பம் மறுவாழ்வுக்காக மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு வேலை தேடி அலைந்தனர் மதுபாலா குடும்பத்தினர்.
மதுபாலாவின் அழகு, சாதிக்க வேண்டும் என்ற வெறி அவரை மும்பை சினிமா அரங்கங்களின் படிக்கட்டுகளை ஏறி இறங்க வைத்தது.
தனது 9-வது வயதில் சிறுமி மதுபாலா பாலிவுட்டில் கால் பதித்தார். 1942-ம் ஆண்டு அவரது முதல் படமான ‘பஸந்த்’ பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
1947-ம் ஆண்டு ‘நீல்கமல்’ படத்தில் ராஜ்கபூருடன் இணைந்தது அவருடைய திரைப்பட வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை மும்தாஜ் என்று அழைக்கப்பட்டவர் மதுபாலாவாக பரிணாமம் பெற்றார்.
இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், மதுபாலா ரசிகர்களின் பேசு பொருளாக மாறினார்.
மஹல், பிரஜ் வஹி, பாதல், தரன்னா, சாங்தில், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் 55, ஹவுரா ப்ரிட்ஜ், முகல்-இ-ஆசம், கல் ஹமாரா ஹை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ் பெற்றார், இந்தத் திரையுலக வீனஸ்.
புகழின் பாதையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மதுபாலாவுக்கு வேகத்தடையாக இருந்தது அவரை சூழ்ந்துக் கொண்ட நோய்.
அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. அறுவை சிகிச்சை எல்லாம் பிரபலமாகாத அந்த காலக்கட்டத்தில் இதய நோய் அவரை முடக்கிப்போட்டது.
“உறவு என்றொரு சொல் இருந்தால்,
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்…”
என்ற வாலியின் வரிகளுக்கு ஏற்ப திலிப்குமாருடன் காதல். பின்பு பிரிவு. கிஷோர்குமாருடன் திருமணம். பல்வேறு நெருக்கடிகள் என பளபளப்பான சினிமா வாழ்க்கையில்தான் கண்ணுக்கு தெரியாத எத்தனை காயங்கள்.
இதயநோய் காரணமாக, படப்பிடிப்புத் தளத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த மதுபாலாவை, 36-வது வயதில் தேர்ந்தெடுத்துக் கொண்டது மரணம்.
வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து, வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று கூறிவிட முடியாதோ, அதுபோலத்தான் கனவு தொழிற்சாலையும், அதன் கனமான நிகழ்வுகளும்.
மதுபாலாவும் “வாழ்ந்ததாக”தான் எல்லோரும் நினைத்தார்கள், மதுபாலாவைத் தவிர…
பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 14, 1933)
✍️ *லாரன்ஸ் விஜயன்*