Take a fresh look at your lifestyle.

ஹேப்பி ராஜ்: அப்பாவின் அருமையை உணர்த்தும் படைப்பு!

ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், அப்பாஸ், கீதா கைலாசம் , மதுரை முத்து நடிப்பில் மரிய ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கி இருக்கும் படம். பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவரதா, ஜெயகாந்த் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பு.

தோற்றம் காரணமாக குதிரை முட்டை என்று ஊராரால் உருவக் கேலி செய்யப்படும் அப்பாவுக்கு (ஜார்ஜ் மரியான்) மகனாகப் பிறந்து, அப்பாவால் ஹேப்பி என்று மகிழ்ச்சியாக அழைக்கப்படுபவன் அரவிந்த ராஜ் (ஜி.வி பிரகாஷ்).

ஆனாலும் அவனுக்கு அப்பா மீது கோபம். காரணம் குதிரை முட்டையின் பையன் என்பதால் அவனை எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை.

‘குதிரை முட்டையின் மருமகள் என்றால் ஊரே சிரிக்கும்’ என்று அவன் காதலிக்கும் பெண்ணும் (பிரார்த்தனா நாதன்) விட்டு விட்டுப் போய்விடுகிறாள்.

எனவே, அவன் அப்பா பற்றி யாருக்கும் தெரியாத பெங்களூருவுக்கு வந்து ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறான்.

அந்த ஐ.டி கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருப்பவளும், மாபெரும் நவ நாகரிக அல்ட்ரா மாடர்ன் வெள்ளைத் தோல் வட இந்தியத் தொழில் அதிபரின் (மீண்டும் அப்பாஸ்) மகள் (கௌரி பிரியா) மீது அவனுக்கு காதல் வர, அவளும் காதலிக்கிறாள்.

”அப்பா, அம்மாவோடு வந்து பெண் கேள்” என்று அவள் சொல்ல, ராஜுக்கு அதிர்ச்சி. எனினும் ராஜின் அப்பா மற்றும் அம்மா (கீதா கைலாசம்) ஆகியோரின் போட்டோ பார்த்து நாயகியின் குடும்பம் ஒத்துக் கொள்கிறது.

ஆனாலும், பெண் பார்க்கும் வைபவத்தில் பெங்களூரு ஸ்டார் ஹோட்டலில் ராஜின் ஊர் மக்கள் கும்பலாக வந்து தங்கள் பாணியில் பங்கேற்க, அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜின் அப்பாவுக்கும் நாயகியின் அப்பாவுக்கும் பகை எழுகிறது.

“காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று இருவரின் அப்பாவும் ஒருவர் ஒருவரிடம் எதிர்பார்க்க, பிரச்சனை பெரிதாகிறது.

”அவங்க அப்பா மன்னிப்பு கேட்க சம்மதிச்சிட்டார்” என்று இருவரும் தங்கள் அப்பாவிடம் பொய் சொல்ல, நாயகியின் அப்பா மற்றும் குடும்பம் ராஜின் கிராமத்துக்கு வருகிறது. அங்கு என்ன நடந்தது என்பதே ‘ஹேப்பி ராஜ்’.

பொறுப்பில்லாத, பெற்றோர்கள் மேல் கோபப்படுகிற பிள்ளை, ஒரு நிலையில் அப்பா, அம்மாவின் அருமை உணரும் வகையில் சென்ற வாரம் வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் யூத். இந்த வாரம் வரும் படம் ‘ஹேப்பி ராஜ்’.

அதில் நகரத்து பெற்றோர். இதில் கிராமத்து பெற்றோர்.

அப்பாவை ஊர் மக்கள் கிண்டல் செய்வதன் காரணமாக அவமானமாக உணரும் கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக நடித்துள்ளார். கவுரி பிரியா கேரக்டருக்கு பொருத்தம்.

படத்தின் பெரும்பலம் அப்பாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியானின் தோற்றமும் நடிப்பும்.

அம்மாவாக கீதா கைலாசம் சிறப்பு. அல்ட்ரா மாடர்ன் அப்பாவாக அப்பாஸும் அசத்துகிறார்.

இப்படியாக நல்ல நடிக, நடிகையர் தேர்வு. ஹீரோ ஹீரோயின் கேரக்டர் போலவே பலமான மற்ற கதாபாத்திரங்கள், திரைக்கதையில் அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம்.

இவை எல்லாம் படத்தின் பெரும் பலங்கள். முதல் பாதியில் சோதிக்கும் வழக்கமான காட்சிகள் இரண்டாம் பகுதியில் கனம் கூட்டுகிறது.

ராஜின் அப்பாவின் தோற்றத்துக்கு காரணமான அந்த குடும்ப பிளாஷ்பேக் அருமை.

தன்னைப் போல் பிள்ளை பிறந்து விடுமோ என்று பயந்த நிலையில் அழகான குழந்தை பிறக்க அப்பா நெகிழும் காட்சிகள் யாவும் நல்ல எழுத்து.

அப்பாவின அருமைகளைச் சொல்லும் படம் எனபதும் இந்தப் படத்தின் பலம்.

‘எப்படி இருந்தாலும் நம்ம பெற்றோர் நம்ம பெற்றோர்தான். படிப்பு, பழக்க வழக்கம் காரணமாக நாம் அடையும் நவ நாகரீக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மட்டமாகப் பார்ப்பது தவறு’ என்று அழுத்தமாகச் சொல்கிறது படம்.

வில்லேஜ் லொகேஷன்கள் கண்களில் ஒத்திக்கொள்ள வைக்கிறது. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சிறப்பு. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் இனிமை.

பிரார்த்தனா நாதன் கேரக்டரை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சிகளில் அப்பா பேசும் விசயங்கள், வார்த்தைகள் அருமை.

திணிக்கப்பட்ட காட்சிகளாக இருந்தாலும் ரயில் டிக்கட் காட்சிகள் அருமை. இதை பொருத்திய விதத்தில் கவனிக்க வைக்கிறது ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பு.

பிரச்னை என்ன என்றால் எல்லா விஷயங்களையும் நாடகத்தனமாக செயற்கையாக, நீளமாக அல்லது லாஜிக் இல்லாமல் சொல்கிறார்கள்.

அப்பாவைப் பற்றி தெரியாத பெண்ணைத்தான் லவ் பண்ண வேண்டும் என்றால் கல்யாணத்தின் போது அப்பா பற்றி தெரியாமல் போகுமா? இது ஹேப்பி ராஜுக்கு தெரியாதா?

ஹேப்பி ராஜின் அப்பா அம்மா, போட்டோ பார்த்து உணர்ந்து, ”நல்ல குடும்பம்தான் தெரியறாங்க…” என்று ஒத்துக் கொள்ளும் நாயகியின் அப்பா,

பிறகு கிராமத்து நபர்களின் அவர்கள் பாணி, நடவடிக்கைகள் காரணமாக (அந்த காட்சிகள் வேறு யதார்த்தமாக இல்லை) வெறுக்கிறார் என்பது பொருத்தமாக இல்லை.

அப்படி கஷ்டப்பட்டு முன்னேறிய அப்பா, திடீரென்று அவ்வளவு பணக்காரராக காட்டப்படுவது எப்படி? அது நிஜமா? இல்லை நாடகமா?

நாடகம் எனில், அது கூட நாயகியின் அப்பாவுக்கு தெரியாதா? ஜமீன்தார் வீட்டில்தான் சம்மந்தம் வைப்பேன் என்று ராஜின் அப்பா சொல்வது என்ன லாஜிக்.? அது நகைச்சுவையாகவும் இல்லையே.

விஷயம் என்னவென்றால், கேரக்டரின் தன்மைக்கும் சூழலுக்கும் காட்சிகள் எழுதாமல், முந்தைய காட்சிக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அடுத்தடுத்து காட்சிகளை எழுதி இருக்கிறார்கள்.

எனவே படத்தின் பில்டிங் ஸ்ட்ராங் என்றாலும் பேஸ்மெண்ட் வீக்காக போய்விட்டது. கனமான காட்சிகள் சில கூட லாஜிக் இல்லாததால் ஈர்க்கவில்லை.

இரண்டாம் பகுதி ரொம்ப நீளம். எப்படா முடியும் என்ற உணர்வு.

இப்படிச் சில குறைகள் இருந்தாலும் சொல்ல வரும் விஷயத்தால் நெகிழ வைக்கிறது படம்.

மொத்தத்தில் ஹேப்பி ராஜ்… அப்பாவின் அருமை.

– சு.செந்தில்குமரன்