Take a fresh look at your lifestyle.

பெண்ணை சக மனுஷியாகப் பார்க்கச் சொல்லும் ‘ஜென்டில்வுமன்’!

இயக்குநர் ராஜு முருகன் பேச்சு

-‘ஜென்டில்வுமன்’  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பைப் பெண்களின் பங்களிப்பைக் கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜென்டில்வுமன்’. மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜு முருகன்: இயக்குநர் ஜோஷ்வா, யுகபாரதி அண்ணன் மூலமாகத்தான் பழக்கம். அவர் முதலில் இந்தக் கதையைச் சொன்ன போது இந்தப் படத்தின் பெயரே வேறு. ஆனால் அதைவிட ‘ஜென்டில்வுமன்’ டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது.

ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளான்.

படம் சென்சார் செய்யும்போது அங்கிருந்து ஒரு நாள் போன் செய்தான் ஜோஷ்வா. இத்தனை கட்; என்ன செய்வது என்றான்.

சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன்.

இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை. புனிதப்படுத்த நீ யார்? பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள். ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை.

இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன்.

பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன் என்றார்.

இயக்குநர் த.செ.ஞானவேல்: ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப்பை உடைப்பது சமூகத்தில் மிகவும் முக்கியம் என கருதுகிறேன். கலைஞனாக ஸ்டீரியோ டைப்பை உடைப்பது மிகவும் முக்கியம். ஸ்டீரியோ டைப்பை உடைத்துத் தான் அனைத்து மாற்றங்களும் வந்துள்ளது. அதனால் இன்றைய சமூகத்தில் அந்த முயற்சியில் வரும் அனைத்து படைப்புகளையும் நாம் வரவேற்க வேண்டும். 

இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்: சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல. அது நடக்கக் காரணம் என்னுடைய படக்குழுவினர் தான். எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். கிட்டத்தட்ட 20 நிமிடக் காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார்.

ஆர்ட் டைரக்டர் அமரன், 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். ஆனால், அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக் கதை எழுதியவுடன் இதை லிஜோமோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன்.

அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள்.