வசனமே இல்லாத படங்களைப் பார்க்க முடியுமா? இன்றைய சூழலில் அவற்றைப் பார்க்கும் பொறுமை ரசிகர்களுக்கு இருக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலை அறிய அவ்வப்போது சில படைப்புகள் வெளியாகும்.
அந்த வகையில் ஒன்றாக இணைய முயற்சித்திருக்கிறது ‘ப்ளோ’ (Flow) அனிமேஷன் திரைப்படம். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது இந்த லாட்வியத் திரைப்படம்.

இதனை ஹிண்ட்ஸ் ஜிபால்டோ இயக்கியிருக்கிறார்.
‘ப்ளோ’ படத்தின் உருவாக்கத்தில் இவர் ‘ஸ்டோரி போர்டு’ உத்தியைப் பயன்படுத்தவில்லை.
அது மட்டுமல்லாமல், இதில் ‘டெலிடட் சீன்ஸ்’ என்று சொல்லும்படியாக உபரிக் காட்சிகளும் இல்லை. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ‘ப்ளோ’ தரும் திரையனுபவம் எத்தகையது?
‘ப்ளோ’ கதை!
தீவு போன்றதொரு நிலப்பரப்பு. அங்கு ஒரு வீடு. அதில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அந்த வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பூனைகளின் சிலைகள் விதவிதமான வடிவங்களில் இருக்கின்றன. அங்கு ஒரு பூனையும் இருக்கிறது. அது தனிமையில் வாழ்கிறது.
அங்கு ஒரு லேப்ரடார் நாய் வருகிறது. அது நட்புடன் பூனையை அணுகுகிறது. ஆனால், அதனுடன் வரும் நான்கைந்து நாய்கள் பூனையைக் கடிக்கப் பாய்கின்றன. அவற்றிடம் இருந்து அப்பூனை தப்பியோடுவதில் திரைக்கதை தொடங்குகிறது.
சில நிமிடங்கள் கழித்து அந்த நாய்கள் பயந்தோடி வருகின்றன. அவற்றின் பின்னே ஒரு மான் கூட்டம் வருகிறது. அப்போதுதான், ஆழிப் பேரலைப் போன்ற பெருவெள்ளமொன்று அந்த நிலப்பரப்பை நிறைப்பது அப்பூனைக்குப் பிடிபடுகிறது.
அப்புறமென்ன, அதுவும் ஓட்டம் எடுக்கிறது.
அந்த நிலம் சிறிது சிறிதாக மூழ்குவதை அது உணரும்போது, நாய்கள் ஒரு படகில் தப்பிச் செல்கின்றன. பூனையைக் காப்பாற்ற முடியாத வருத்தத்தில் அந்த லேப்ரடார் நாயும் செல்கிறது.
மலையளவு நீர் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், ‘இனி அவ்வளவுதான்’ என்று அந்த பூனை நினைக்கும் நேரத்தில் ஒரு படகு வருகிறது.
அதில் கேபிபரா எனும் விலங்கு இருக்கிறது. அதனுடன் சேர்ந்து அந்தப் பூனை பயணிக்கத் தொடங்குகிறது.
பிறகு அடுத்தடுத்து அந்த படகில் ஒரு லெமூர், ஏற்கனவே சொன்ன லேப்ரடார் நாய், ஒரு நாரை போன்ற வெண்ணிறப் பறவை வந்து சேர்கின்றன.

கடல், ஆறு, மாளிகை பரப்பு என்று பல இடங்களுக்கு அந்தப் படகுப் பயணிக்கிறது. எங்கும் நிற்க முடியாத சூழல்.
இந்த நிலையில், அந்தப் படகை விட்டு வெளியேறுகிற நிலையை அப்பூனை எதிர்கொள்கிறது?
அதன்பிறகு அது உயிர் பிழைத்ததா? மற்ற உயிரினங்கள் என்னவாயின? அழியும் நிலையில் இருந்து உலகம் மீண்டதா என்பதை நமக்குச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
வழக்கத்திற்கு மாறானது!
ஹிண்ட்ஸ் ஜிபால்டோ தான் இப்படத்தின் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றைக் கவனித்திருக்கிறார்.
அந்த பூனை உயிர் பிழைக்கிறத் தருணம் முதல் வெவ்வேறு இடங்களுக்குப் பயணிப்பது, இறுதியாக இந்த உலகம் மீட்சி அடைந்ததா என்று காட்டும் காட்சிகளில் அவரது உழைப்பு அபாரம்.
இந்தப் படத்தின் எழுத்தாக்கத்தை மேட்டிஸ் காஸா உடன் இணைந்து அமைத்திருக்கிறார் இயக்குநர். இதுவரை நாம் பார்த்த பிரமாண்டமான அனிமேஷன் படங்களில் இருந்து விலகி எளிமையை முதன்மைப்படுத்தியிருப்பது இதன் சிறப்பு.
அது மட்டுமல்லாமல், அழிவின் விளிம்பில் இருக்கும்போது மறுமலர்ச்சி வருமா’ என்ற எண்ணத்தை நம் மனதில் விதைத்து அதற்கொரு முடிவைச் சொல்லியிருப்பது அருமை.

இப்படத்தின் இசையை ரிஹார்டோ ஸ்லுபே இணைந்து அமைத்திருக்கிறார் ஹிண்ட்ஸ் ஜிபால்டோ. அது தரும் அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது.
வழக்கமாக, அனிமேஷன் படங்களில் புகழ்பெற்ற ஹாலிவுட் கலைஞர்கள் டப்பிங் பேசியிருப்பார்கள்.
விலங்குகள், தாவரங்கள் கூட ‘வசனம்’ பேசுவதாகக் காட்சிகள் இருக்கும்.
இந்தப் படத்தில் மியாவ் சத்தம் முதல் சிணுங்குதல், பயப்படுதல், மிரளுதல், பீதி கொள்ளுதல் போன்ற உணர்வுகளை மட்டுமே ஒலிகளாகக் கேட்கச் செய்கிறது இப்படம்.
லாட்வியாவைச் சேர்ந்த ஹிண்ட்ஸ் ஜிபால்டோ, அனிமேஷன் பற்றி முறையான கல்வியைப் பெறாதவர். அதேநேரத்தில், இணையம் வழியே அது குறித்த அறிவைப் பெருக்கி விரிவாக்கிக் கொண்டவர்.
2011இல் இவரது இயக்கத்தில் அனிமேஷன் குறும்படம் வெளியாகியிருக்கிறது. 2019வாக்கில் ‘அவே’ எனும் முழுநீள அனிமேஷன் படத்தை ஆக்கியிருக்கிறார். அந்த வரிசையில் இரண்டாவது முழுநீளப் படமாக ‘ப்ளோ’ வந்திருக்கிறது.
தனது லேப்டாப்பில் சிறுகச் சிறுக இப்படத்தை உருவாக்கிய ஹிண்ட்ஸ், லாட்விய நாட்டின் தேசிய திரைப்பட மையத்தின் நிதியுதவிக்குப் பிறகு பெரியளவில் இப்படத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்.
பிறகு பெல்ஜியம், பிரான்ஸ் நாட்டின் சில நிறுவனங்களும் இந்தப் புராஜக்டில் இணைந்திருக்கின்றன.
தற்போது கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருது உள்ளிட்டவற்றைப் பெற்றிருக்கிறது இப்படம்.
தற்போது பெரிய ஸ்டூடியோக்கள் தயாரிக்கும் அனிமேஷன் படங்களை விட இப்படத்தின் பட்ஜெட் மிகக்குறைவு. இதுவே ‘ப்ளோ’வின் யுஎஸ்பி.

குழந்தைகளுக்கானது அனிமேஷன் படம் என்ற எண்ணம் உள்ளவர்கள், ‘ப்ளோ’ பார்த்தால் உடனடியாக தமது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
காரணம், இப்படத்தின் தத்துவார்த்தமான உள்ளடக்கம். இந்த உலகின் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர் அப்படியொரு தேவையில் இருக்கின்றனர் என்பதுவே ‘ப்ளோ’வின் சிறப்பு.
– உதயசங்கரன் பாடகலிங்கம்