சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி: ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடி கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற போது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’.
இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்துகொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம்.
இந்த ‘டீசல்’ படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு சார் இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார்.
‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும்.
நடிகர் ஹரிஷ் கல்யாண்: “தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் எரிபொருள் உலகத்திற்கு பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்த கதை சொல்லி இருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியானபோது பெரிதாக யாரும் திட்டவில்லை. அதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது.
பெட்ரோல், டீசல் என எளிய மக்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படியான மாஃபியா நடக்கிறதா என்பதை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்காகவே இந்த படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்த படத்திற்காக 30 நாட்களும் மேலாக கடலில் ஷூட் செய்து இருக்கிறோம். அந்த சமயத்தில் எங்களுக்கு உதவிய அத்தனை மீனவர்களுக்கும் நன்றி. அதுல்யாவும் சூழலை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார்.
படத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். எங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை” என்றார்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்: ‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது.
என்னுடைய முதல் படமான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள்.
அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.
நடிகர் பிரேம்குமார்: “எல்லாவிதமான அம்சங்களும் ‘டீசல்’ படத்தில் இருக்கும். டீசலுக்கு பின்னால் நடக்கும் மாஃபியா என்ன என்பதை மிகத் துல்லியமாக இந்த படத்தில் இயக்குநர் சண்முகம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணுக்கு இப்போது திரைத்துறையில் சரியாக நேரம் கூடி வந்திருக்கிறது. அதுல்யா, வினய் என அனைவரும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ‘டீசல்’ தீபாவளியாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் விவேக் பிரசன்னா: “தயாரிப்பாளர்கள் தரப்பு, இயக்குநர் சண்முகம், ஹீரோ ஹரிஷ் கல்யாண் என இவர்கள் எல்லோருக்கும் இந்த படம் எவ்வளவு முக்கியமானது மனப்போராட்டத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது என்பது எனக்கு தெரியும்.
சரியான தருணத்திற்காக இந்த படம் காத்திருந்தது. பல தலைமுறைகளிடமிருந்து அரசியல் சூழல் பெரும் சொத்தை சுரண்டி அவர்களுக்கே தெரியாமல் எப்படி அவர்களை பலியாக்கினார்கள் என்பதை இந்த படம் சரியாக காட்டி இருக்கிறது.
எரிசக்தி தொடர்பான அரசியல் பேசும் படமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது இருக்கும்.