சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்கண்டேயன் மற்றும் எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டீசல்’.
பெட்ரோல், டீசல் இவற்றின் தாய்ப் பொருளான குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய், கேரோசிலின், ஜெட் விமானங்களுக்கான எரிபொருள், எல்பிஜி கேஸ், தார் என பல பொருட்கள் கிடைக்கின்றன.
இவை பெட்ரோல் பங்குக்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள்,
அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனைகளும் கலந்து சொல்லும் படம்தான் ‘டீசல்’.
1979 ஆண்டு சென்னையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை பிரம்மாண்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன.
பல கிலோ மீட்டர் நீளம் உள்ள அந்தக் குழாய்கள் மண்ணுக்கு அடியில் பாதிக்கப்பட்டாலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டும் அது தரைக்கு மேலே இருக்கும்.
கப்பலில் இருந்து வரும் குரூட் ஆயில் அங்கிருந்து குழாய் வழியாகக் கொண்டு போகப்படும். அந்த ராட்சஷ குழாய் இருக்கும் அந்தப் பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வறுமை சூழ்கிறது.
இதனால் கோபம் கொண்ட ஒரு நபர் (சாய் குமார்) நிலத்துக்கு மேல் இருக்கும் குரூட் ஆயில் குழாயில் இருந்து குரூட் ஆயிலை பல்லாயிரக்கணக்கான லிட்டர் அளவில் திருடுகிறான்.
அவனது வளர்ப்பு மகனான கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞனும், (ஹரீஷ் கல்யாண்) களம் இறங்குகிறான்.

இவர்களால் கடத்தப்படும் குரூட் ஆயில் பம்பாயில் பெரும் தொழில் அதிபராக இருக்கும் பதானி, (மன்னிக்கவும்… பதான். ஆமா, அதான்.) என்பவருக்கு அனுப்பப்பட,
அவர் குரூட் ஆயிலைப் பிரித்து மற்ற பொருட்களை விற்று அவர் லாபம் பார்த்துக் கொண்டு, இவர்கள் அனுப்பிய குரூட் ஆயில் அளவுக்கு மட்டும் பெட்ரோல் டீசலை மட்டும், ஆயில் திருடும் நபர்களுக்கு அனுப்புவார்.
இந்த பெட்ரோலும் டீசலும் பெட்ரோல், எரிபொருள் துறையால் கொடுக்கப்படும் பெட்ரோல் டீசல் அளவுக்கு அப்பாற்பட்டு, நேரடியாக பெட்ரோல் பங்குக்கு நாயகனாலும் வளர்ப்பு அப்பாவாலும் அனுப்பப்படும்.
அதில் அரசுக்கு பணம் போகாது என்பதால், அதில் கிடைக்கும் பணம் பெட்ரோல் பங்க் முதலாளிகள், கடத்தல் நாயகர்கள், மும்பை பதான் ஆகியோருக்கு போகும்.
நாயகனுக்கு வரும் லாபத்தில் பெரும்பகுதி, இந்தக் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு போய்ச் சேரும்.
குரூட் ஆயில் கடத்தலில் தானும் ஈடுபட்டு, பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறான் இன்னொருவன் (விவேக் பிரசன்னா). அவனுக்கு பக்க பலமாக இருக்கிறார் ஆணவம் பிடித்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (வினய் ராய்.)
அவன், கேசரிப் பொடியைக் கலந்து கலப்பட பெட்ரோல் தயாரிக்க, நாயகன் கலப்பட பெட்ரோல் நபரை பிடிக்க, அவனுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் வர, அது நாயகன் – இன்ஸ்பெக்டர் பகையாகிறது.
ஒரு நிலையில் மும்பை பதான் சென்னையில் ஒரு மாபெரும் தனியார் துறைமுகத்தை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறான்.

பதானியின் திட்டம் நிறைவேறினால் சென்னையில் மீனவர்கள் மீன் பிடிக்கவே முடியாத நிலை ஏற்படும். அதன்பிறகு நடந்தது என்ன என்பதே ‘டீசல்’.
மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கும் கதை. இனம், மொழி, வர்க்கம், வடக்கு – தெற்கு பேத அரசியல்… இவை குறித்த சண்முகம் முத்துசாமியின் தெளிவு கொண்டாடத்தக்கது.
நாயகன் ஹரீஷ் கல்யான் தனது ‘டெண்டர்’ காதலன் என்ற என்ற இமேஜில் இருந்து முழு ஆக்ஷன் ஹீரோ என்னும் சந்திரமுகியாக மாறி இருக்கும் படம் இது.
ஒரு காட்சியில் அதுல்யாவுக்கு ஒரு குளோசப் போடுகிறார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் ”ப்ப்ப்ப்ப்ப்ப்பா….வை” பல மடங்கு டெசிபல்களில் நம்மை அறியாமலே சொல்ல வேண்டிய நிலைமை.
படத்தின் டோன், கலர், ஃபிரேமிங், அதன் மூலம் கடலையும் கடல் புறத்தையும் உணர வைப்பது, இரவின் மர்மத்தைக் காட்டுவது என்று, ரிச்சர்ட் நாதன் அட்டகாசமான ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம் நாதனும் எம் எஸ் பிரபுவும் திபு நினன் தாமஸ் இசை இந்தப் படத்திலும் அபாரம்.
மெல்லிசைப் பாடல்கள், குத்துப் பாடல்கள், குறிப்பாக கடலில் நாயகனை சந்தித்து விட்டு நாயகி பிரிந்து செல்லும் காட்சியில் அந்த வரும் பின்னணி இசை அருமை. இசையோடே போய் விடுகிறது மனசு.
‘தளபதி’ படத்தில் வந்த “ராக்கம்மா கையத்தட்டு” பாட்டு ஒரு நிலையில் சட்டென்று மெலடியாகி ”குனித்த புருவமும்…” என்று சோபனா வருவாரே அதே பாணியில் தில்லு பாரு ராஜா பாட்டில் அதுல்யாவை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்.
கலை, இயக்கம் சண்டைக் காட்சிகளும் அருமை.
நடிப்பில் சாய் குமார் அசத்தி இருக்கிறார். வினய் ராய் கேரக்டரின் வன்மை குணத்தை சிறப்பாக சுமந்து ரசிகனுக்குக் கடத்துகிறார்.
நாசர், காளி வெங்கட், போஸ் வெங்கட் இவர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற நிலைக்கு கொஞ்சம் மேலான கேரக்டர்களில். இல்லை இல்லை ரோல்களில் வந்து, ”வாம்மா மின்னல்…” போலப் போகிறார்கள்.
இதுபோன்ற சமூக அக்கறை உள்ள கதைகளைக் கொண்ட படங்களில் முதலில் எதைப் பற்றிய படம் என்பதை லேசாகக் கோடு போலக் காட்டி விட்டு,
ஒரு வணிக ரீதியான படத்துக்கு தேவையான காதல், செண்டிமெண்ட், பாசம் எல்லாவற்றையும் தேவைப்படும் அளவுக்கு மட்டும் சட்டு புட்டென்று காட்டி விட்டு, முக்கிய விசயத்துக்கு வந்து அதன் திசை மாறாமல் பரபரவென்றோ, அழுத்தமாகவோ பாய வேண்டும்.

ஆனால், இந்தப் படம் ஆரம்பக் காட்சிகளில் ஆர்வத்தை தூண்டி விட்டு அப்புறம் ஆயிரம் முறை ரசிகர்கள் பார்த்த வழக்கமான சினிமாக் காட்சிகள் எனும் கடலில் மிதக்க ஆரம்பித்து விடுகிறது.
மீண்டும் மீண்டும் அப்படியே ஆர்வம் தூண்டும் விஷயங்கள் சில நிமிடங்கள் மட்டும் காட்டப்பட்டு விடப்பட, வழக்கமான காட்சிகள் நீட்டி முழக்கி சொல்லப்படுகின்றன.
இரண்டாயிரம் கோடி லிட்டர் குரூட் ஆயிலைப் படத்தில் இரண்டு குளோசப்களில் மட்டும் வரும் காளி வெங்கட் கேரக்டர் ஒரு இரவுக்குள் போட்களில் ஏற்றிக் கடலுக்குள்,
அதுவும் யாருக்குமே தெரியாமல் ரக ரக ரக ரகசியமாக கடத்தி விடுகிறது என்பது காதில் பூமாலையே போடும் கதை.
இரண்டாம் பகுதியில் எமோஷனலாக வர வேண்டிய காட்சிகள் மேட்டர் ஆப் ஃபேக்ட் ஆகக் கடக்கின்றன.
ஒருவேளை இந்தப் படம் மக்களின் நல்லாதரவைப் பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் திரைக்கதைதான்.
– சு. செந்தில் குமரன்