Take a fresh look at your lifestyle.

“தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா”?

திரைத் தெறிப்புகள் – 86 :

*

மது மற்றும் போதையூட்டும் பானங்களைக் குடிப்பதாக நடிப்பதைக்கூடத் தனது படங்களில் தவிர்த்தே வந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

1968-ம் ஆண்டில் வெளிவந்த ‘ஒளிவிளக்கு’ திரைப்படத்தில் வாலி எழுதி, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் பாடல், மது எந்த விதத்தில், எப்படியெல்லாம் அதைக் குடிப்பவரையும், அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் சீரழிக்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

“தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா? – இல்லை!
நீ தான் ஒரு மிருகம் –
இந்த மதுவில் விழும் நேரம்.
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்.
நீ தான் ஒரு மிருகம் –
இந்த மதுவில் விழும் நேரம்…”

என்று நீளும் இந்தப் பாடல்.

ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் மனசாட்சியே, அவரைச் சுற்றி வெவ்வேறு பிம்பங்களாகச் சுற்றி நின்று கேள்வி கேட்பதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சிக்கு ஐடியா கொடுத்தவர் கவிஞர் வாலி.

இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும், வரிகளைக் குழைவாக அவர் உச்சரித்த விதமும் கவனம்பெறும் வகையில் அமைந்திருக்கும்.

“மானைப் போல் மானம் என்றாய் –
நடையில் மதயானை நீயே என்றாய்.
வேங்கை போல் வீரம் என்றாய் .
அறிவில் உயர்வாகச் சொல்லிக் கொண்டாய்.
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்…”

அறிவினால் வெகு உயரத்துக்குப் போகிறவர்கள், அதீத மது போதையால் எந்த அளவுக்குக் கீழிறங்கிப் போகிறார்கள் என்பதை உணர்த்தும் எளிமையோடு இருக்கின்றன வாலியின் இந்த வரிகள்.

“அலையாடும் கடலைக் கண்டாய்.
குடித்துப் பழகாமல் ஆடக் கண்டாய்.
மலராடும் கொடியைக் கண்டாய்.
மதுவைப் பருகாமல் ஆடக் கண்டாய்.
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்.”

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த நேரத்தில்தான் இந்தப் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது.

பின்னாளில் மதுவிலக்குத் தளர்த்தப்பட்டப் பிறகு குடிப்பழக்கத்தின் எதிர்வினையை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் மதுபோதையின் ஆபத்தான பின்விளைவைப் பற்றி உணர்த்திய முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.

அண்மைக் காலங்களில் மது அருந்துவதை, பெரும் கொண்டாட்ட நிகழ்வாகவே காட்டும் திரைப்படப் பாடல்கள் வெளிவந்து கொண்டிருப்பது எல்லாம் தனிக் கதை.

*

– மணா.

*