“முட்டக் கலக்கி…”
இணையதளம் திறந்தாலே இந்தப் பாட்டுக்கு எல்லோரும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பசி வருத்த அடுப்படிக்குப் போய் ஆம்லெட் போட முட்டையை எடுத்தாலே இந்தப் பாட்டுத்தான் காதில் ஒலிக்கிறது.
மண்டைக்குள் இந்தச் சொல்லாடல் ஒரு பெரிய போரையே நிகழ்த்துகிறது.
ஏனென்றால் குட்டைக் கலக்கிக்குப் பொருள் புரிந்த எனக்கு, முட்ட கலக்கி என்றால் என்ன எனப் புரியவில்லை.
பாதி வெந்த சாலையோர உணவு என்கின்றனர் சிலர். அதை எதற்குப் பெண்ணுக்கு ஒப்புமை செய்கின்றனர் எனக் குழம்பினேன்.
சரி… முட்டை கலக்கி என்றால் பெண்ணுக்கான ஒரு சிறப்புக் காரணப் பெயர் போலும், என்று என் இலக்கியத் தாய் அன்புவல்லி அம்மாவை அழைத்துக் கேட்டேன், “அம்மா முட்ட கலக்கி என்றால் என்ன?” என்று.
அம்மா தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் ஆழங்கால் பட்டவர். கண்டிப்பாக அவருக்குத் தெரிந்திருக்கும் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்.
ஆனால், அம்மாவுக்கும் தெரியவில்லை.
அய்யோ எனக்கு, எப்போதும் எது செய்யும் போதும் கவியரசர் பாடல்களைக் கேட்பது பழக்கம்.
முட்டையை உடைத்துக் கலக்கிக் கொண்டே, முட்டக் கலக்கியை நினைத்துக் கொண்டிருக்கும் போது கண்ணதாசனின் இந்தப் பாட்டு வந்தது.
“பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம் வராது”
எட்டாம் வகுப்புவரையே பள்ளிக்குச் சென்ற கவியரசருக்கு இந்த அடிகள் எங்கிருந்து வந்தன?
முட்டைக் கலக்கி எங்கிருந்து வந்ததென தெரியாமல் இருக்கலாம். ஆனால், கண்ணதாசன் பொன் வரிகள் எங்கிருந்து வந்தன என அறியாமல் நாம் உயிர் வாழலாமா?
இதோ – அதற்கான விடை
தொல்காப்பியம்: பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல்
மெய்ப்பாடு என்றால் – உள்ளத்து உணர்ச்சியை உடலால்/முகத்தால் புறத்தார்க்குப் புலப்படுத்துவது.
எடுத்துக்காட்டு:
மகிழ்ச்சியை – நகைத்து வெளிப்படுத்துவது
வலியை – கண்ணீரால் வெளிப்படுத்துவது
இந்த மெய்ப்பாட்டியல் அக்காலத்திலேயே மன உணர்ச்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட Psychiatry / psychology என்னும் துறைகளின் வளர்ச்சியைத் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம்! பாருங்கள்!
இந்த மெய்ப்பாட்டியலில் ஒரு நூற்பா இருக்கிறது.
அது என்ன சொல்கிறதென்றால், காதல் கொண்ட தலைவி தன் தலைவனைப் பிரிந்திருக்கும் வேளைகளில் எப்படியெல்லாம் துன்புறுவாள் என்பதை இலக்கியப் பாடல்கள் எவ்வாறு விளக்குகின்றன என்பதுதான் அது.
காதலில் எப்போதும் அதிகம் வருந்துவது பெண்கள் தானே. அது அக்காலத்திலும் அப்படித்தான் போலும்.
John Gray “Men are from Mars, Women are from Venus” என்று சரியாகச் சொன்னது போல. ஆணும் பெண்ணும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிகவும் வேறுபட்ட உயிரினங்கள்.
இந்த உணர்வுக்கு மட்டுமே 24 மெய்ப்பாடுகளை முதலில் கூறிய தொல்காப்பியர், மேலும் இருபதைக் கூறுகிறார். வியப்பாக இருக்கிறதா?
தொல்காப்பியம் உலக வியப்புகளில் இருக்க வேண்டிய ஒன்று. நம் தாய் நூல். மூல நூல்.
இந்நூலைப் படிக்காமல் நாங்கள் தான் தமிழர் என யாரும் மார்தட்டிக் கொண்டு ஆரியர் கண்டுபிடித்த முருகனை, வழிபட தேர்தல் வந்தால் பக்தி பரவசத்தோடு மலையேற ஓடக்கூடாது.
அது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் முருகன் யார் என ஒரு கட்டுரை பிறகு எழுதுவோம்.
இப்போது தலைப்புக்கு வருவோம்.
அந்த இருபது மெய்ப்பாடுகளைச் சுருக்கமாக பார்ப்போமா?
268 ஆம் நூற்பா:
“இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
எதிர்பெய்து பரிதல் ஏதும் ஆய்தல்
பசியட நிற்றல் பசலை பாய்தல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடல் மெய்யே என்றல்
ஐயம் செய்தல் அவன்தமர் உவத்தல்
அறன் அழித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல்
எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி உவத்தல் உறுபெயர் கேட்டல்
நலத்தக நாடின் கலக்கமும் அதுவே”
மேல் கூறிய நூற்பாவில் குறிப்பாக 3 – 6 அடிகள் படியுங்கள்.
பசியட நிற்றல் – பசி வருத்தினும் உணவு கொள்ளாமை
பசலை பாய்தல் – மேனியில் நிறவேறுபாடு உண்டாதல்
உண்டியிற் குறைதல் – உணவின் அளவு மிகச்சிறிதாதல்
உடம்பு நனி சுருங்கல் – உடம்பு மிக இளைத்தல்
கண் துயில் மறுத்தல் – உறங்காமை
பொய்யாக் கோடல் – உண்மையைப் பொய்யாகக் கருதுதல்
மெய்யே என்றல் – பொய்யை உண்மை எனக் கருதுதல்
இன்னும் பிற,
இப்போது போய் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது”
காதல் மயக்கத்தை தொல்காப்பியத்திலிருந்து எப்படிச் சாறு பிழிந்து கூறியிருக்கிறார் பாரும் நம் கவியரசர்.
அதனால் தான் இன்று இப்பாடலைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நம் நெஞ்சம் துணியும்.
கவியரசரின் இலக்கியம் சார்ந்த பாடல்கள் எண்ணற்றவை. ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால் தமிழ் அறிவும் விரியும் இன்பமும் பெருகும்.
இப்போது முட்டக் கலக்கி என்று காதலியைச் சிறப்பிப்பதன் காரணம் என்ன என்று எனக்கு யாராவது விளக்குங்கள்.
ஏற்கெனவே ஒரு பெருங்கவிஞர், பெண்ணை “ரவா லட்டு” என ஒரு திரைப்படப் பாடலில் எழுதினார்.
அது ஒரு பெரிய ஹிட் பாடலாகியது.
பாடல்களில் பெண்கள் ஏன் உணவுப் பொருட்கள் ஆகின்றனர்?
நன்றி: புவனா கருணாகரன்