யூவி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் குமார் ராஜு தயாரிக்க, சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி நடிப்பில் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி தெலுங்கிலும் தமிழிலும் இருக்கும் படம்.
இன்னும் சரியாகச் சொன்னால் சென்னையில் கதை நிகழும் தெலுங்குப் படம்.
பண விஷயத்தால் முன்னாள் காதலி விட்டு விட்டுப் போய்விட, ரொம்பவும் மனம் இறுகிப் போன நிலையில், பைக் புல்லிங் செய்து பணம் ஈட்டும் ஓர் இளைஞனும் (சந்தோஷ் சோபன்), கிராமத்தில் பிறந்து வளர்ந்து வேலை தேடி சென்னைக்கு வரும் பெண்ணும் (மானசா வாரணாசி) சந்திக்கிறார்கள்.
(BIKE PULLING என்றால், தான் பயணிக்கும் வழியில் பயணம் செய்பவர்களை உடன் அழைத்துச் சென்று அதற்காக பணம் பெறுவது).
சாதாரண சந்திப்பு நட்பாகிறது. ஒரு நிலையில் இருவரும் ஒரே சிறு வீட்டில் தங்குகிறார்கள். இன்டீரியர் டெக்கரேஷன் கம்பெனி ஆரம்பித்து முன்னேறுவது அவனது கனவாகிறது. அவளுக்கு ஐ.டி வேலை கனவு.
அவனது முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவ, இவளது பேச்சுவன்மை, மொழி ஆளுமை அவனுக்கு பலமாக இருக்கிறது.
இவளது ஒத்துழைப்பால் அவனுக்கு ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்து, அவன் இன்டீரியர் டெக்கரேட்டராக பிசி ஆகிறான். நிறைய சம்பாதிக்கிறான். அவளுக்கு ஐ.டி வேலை கிடைக்கிறது.
அதற்குள் அவர்களுக்குள் காதலும் திருமணம் கடந்த உறவும் ஏற்படுகிறது.
அந்த உரிமையில் ”நீ ஐ டி வேலையை விட்டு என்னோடு எப்போதும் பணிபுரிய வசதியாக இன்டீரியர் வேலைக்கு வந்துவிடு என்கிறான்.
ஆனால், அவள் “இப்போது நீ தனியாக சிறப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டாய். லைஃப் வேறு; தொழில் வேறு. உனக்குப் பிடித்தது இன்டீரியர், எனக்குப் பிடித்தது ஐடி” என்கிறாள் அவள்.
கோபம். சண்டை. பிரிகிறார்கள்.

எனினும் சுமையாக இருக்கிறது. அவளுக்கு அவள் வீட்டிலும் அவனுக்கு அவன் வீட்டிலும் திருமணத்துக்கு வரன் பார்க்க, நிலைமை உணர்ந்து இருவரும் ஒன்றுசேர முடிவு செய்கிறார்கள்.
காதல் விஷயம் இருவர் வீட்டுக்கும் தெரிய, பெண்ணின் அப்பா சாதி பார்த்து மறுக்கிறார்.
அப்போது தெரிய வரும் ஓர் உண்மை எல்லோரையும் அதிர வைக்கிறது.
அவள் மீது உண்மையில் அன்பு காட்டுவது பெற்றோரா அல்லது காதலனா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இரு தரப்புக்கும் ஏற்படுகிறது.
ஜெயித்தது யார்? காதலனா? பெற்றோரா? ஜெயிப்பவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? அவளுக்கு அதிகம் தேவைப்பட்டது பெற்றோரா, காதலனா? என்பதே இந்தப் படம்.
மிக இயல்பாக நிதானமாக ஆரம்பிக்கிறது படம்.
காதல் தோல்வியால் மனம் கெட்டித்துப் போய் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளான எளிய இளைஞனை கண்முன் நிறுத்துகிறார் சந்தோஷ் சோபன்.
நிதானமாக வரிகள் விழும் கவிதை போல இருக்கிறது நாயகியின் கேரக்டர். அதில் அற்புதமாகப் பொருந்துகிறார் மானசா வாரணாசி. நன்றாக நடிக்கிறார். நகரத்துக்குள் பொருத்திக் கொள்ளும் அழகு கொண்ட கிராமத்துப் பெண்ணாக அசத்துகிறார்.
ஆங்காங்கே அட்சர சுத்தமான லிப் கிஸ்கள் தூள் பறக்கின்றன.
இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்ய ஆசைப்படுவோருக்கு நிஜமாக பயன்படும் அளவுக்கு அது சம்மந்தப்பட்ட காட்சிகள் படிப்பினையாகவும் சபாஷ் சொல்லி ரசிக்கும் அளவுக்கும் இருக்கின்றன.
இன்டீரியர் டெக்கரேஷனில் நாயகனுக்கு துணையாக வரும் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் குறைவு என்றாலும் சிரிக்கும்படி செய்துள்ளார் யோகிபாபு.

நாயகியின் தோழிக்கும் அவளைவிட இரண்டு மடங்கு வயது கொண்ட நபருக்கும் இருக்கும் நெருக்கத்தை, அந்தப் பெண்ணும் சந்தோஷமாக இருப்பது போல கேஷுவலாகக் காட்டி இருக்கிறார்கள்.
சாதி காட்டி அப்பா மறுக்கும்போது வரும் அந்தப் பிரச்சனையும், அது தொடர்பான காட்சிகளும் காதலின் வலிமையைச் சொல்லும் கனமான காட்சிகள்.
படமாக்கலில் அசத்தி இருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர்.
‘இதயத்தைத் திருடாதே’ படம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்று கவனமாக வண்டியைத் திருப்பி, ‘நினைவே ஒரு சங்கீதம்’ என்ற எண்பதுகளின் தமிழ் திரைப்படத்தை ஒட்டி படத்தைக் கொண்டு போய் நிறுத்துகிறார்கள்.
படம் மனதுக்குள் நுழைய முக்கியக் காரணம் கதாநாயகி மானசா வாரணாசியின் நடிப்பும் தோற்றமும்.
COUPLE FREINDLY ….. நெகிழ்ச்சி.
– சு. செந்தில் குமரன்