Take a fresh look at your lifestyle.

கோயில் மணிக்கு நிகரானது கோவிந்தராஜனின் குரல்!

கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார்.

பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். பயின்று இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார்.

சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

1953-ல் ‘பொன்வயல்’ படத்தில் சுத்தானந்த பாரதியின் “சிரிப்புத்தான் வருதையா” என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதற்கு முன்னரே ‘ஒளவையார்’ திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.

சீர்காழியின் குரல், கோயில் மணியோசையின் கம்பீரத்தைக் கொண்டது. பூமி அதிர முழங்கும் போர் முரசைப் போன்று பேருண்மைகளையும் ஆழமான தத்துவங்களையும் அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கக் கூடியது.

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும், தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத ஒலிச்சித்திரமாக்கியவர் சீர்காழி.

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று கர்ணனுக்காக உருகிய குரலும் அவருடையதுதான்.

கே.பி.சுந்தரம்பாளுக்கு அடுத்ததாக ஒலிபெருக்கியே தேவையில்லை என்று சொல்லத்தக்க குரல் வளம் சீர்காழியினுடையது.

சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தன் இனிமையான குரலால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் (1988) மறைந்தார்.

நன்றி: ஜீ தமிழ் நியூஸ்