ஒற்றுமையே உயர்வு என்பது மக்கள் ஒரு சமூகமாக மேம்படுவதற்காகக் கட்டமைக்கப்பட்ட வார்த்தைகள்.
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் இவை கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், மனிதர்கள் ஒன்றிணைந்து போராடுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டன.
சாதிப் பிரிவினைகளோ, வர்க்க வேறுபாடுகளோ, மதரீதியான மோதல்களோ திரைப்படங்களில் இடம்பெறுவதற்குத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயக்கம் காட்டிய நிலையில் தனிமனித முரண்பாடுகளும் மோதல்களுமே சமூகப் படங்களின் பேசுபொருளாக இருந்தன.
குறிப்பாக, ஆடம்பரம் மீதான மோகமும் கல்வியறிவு உருவாக்கும் ஏற்றத்தாழ்வும் மிக முக்கிய விஷயங்களாக இருந்தன.
1959ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பாகப் பிரிவினை’ படமும் அப்படியொரு முயற்சிதான். மேற்கண்டவற்றைப் பிரதானப்படுத்தியே இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.
முடங்கிய மனங்கள்!
மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை கண்டறியப்படாத காலத்தில், உடல் ஊனமுற்றோர் என்ற சொல் கூட பரவலாகப் பயன்படுத்தப்படாதபோது உருவான கதை ‘பாகப் பிரிவினை’.
அதனால், இப்படத்தில் ‘நொண்டி’ போன்ற வார்த்தைகள் சரளமாக வசனங்களில் இடம்பெற்றிருக்கும்.
மன வேற்றுமை கொண்ட மனிதர்கள் காலத்தின் ஓட்டத்தில் ஒற்றுமையாவதுதான் இக்கதையின் கரு.
ஒற்றுமைக்கும் உதாரணமாக வாழ்கின்றனர் வைத்தியலிங்கம், சுந்தரலிங்கம் சகோதரர்கள். அண்ணன் சொல்லே மந்திரம் என்றெண்ணி வாழும் சுந்தரலிங்கம் வயற்காட்டில் விவசாயம் செய்ய, நிர்வாகம் சார்ந்த பணிகளை வைத்தியலிங்கம் கவனிக்கிறார்.
வைத்தியலிங்கம் – அகிலாண்டம் தம்பதியர்க்கு குழந்தைப்பேறு இல்லை. சுந்தரலிங்கம் – மீனாட்சி தம்பதியருக்கு கன்னையன், மணி என்ற இரண்டு மகன்கள்.
சிறு வயதில் மின்சார கம்பத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்றபோது, கன்னையனின் இடது கை மற்றும் கால் செயலிழந்து போகிறது. இதனால், தன் குடும்பம், ஊர் என்றே அவரது உலகம் சுழல்கிறது.
ஆண்டுகள் கடந்தபோதும் வெகுளித்தனம், துடுக்குத்தனம், அளவற்ற பாசம் என்றிருக்கிறார் கன்னையன். மாறாக, நாகரிகத்தின் குழந்தையாக மாறுகிறார் மணி.
வைத்தியலிங்கத்தின் மனைவி அகிலாண்டத்துக்கு சுந்தரலிங்கத்தையோ, மீனாட்சியையோ, கன்னையனையோ சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில், மணியைத் தனது சொந்த மகனாகப் பாவிக்கிறார்.
இந்தச் சூழலில், அகிலாண்டத்தின் அண்ணன் மகன் சிங்காரமும் அமுதாவும் சிங்கப்பூரில் இருந்து திரும்புவதாகத் தகவல் வருகிறது.
மனைவியின் உறவினர்களை அறவே வெறுக்கும் வைத்தியலிங்கம், இதனால் புதிதாகக் கேடு ஏதும் விளைந்திடக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறார். அவர் நினைத்தபடியே சிங்காரத்தினால் குடும்பமே இரண்டாக உடைகிறது.

அமுதாவும் மணியும் ஒருவரையொருவர் விரும்ப, அவர்களது திருமணத்துக்குக் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்க மறுக்கின்றனர்.
அதே நேரத்தில், சிங்காரத்துக்கும் கன்னையனுக்கும் ஏற்படும் சிறு கைகலப்பினால் வைத்தியலிங்கமும் சுந்தரலிங்கமும் பாகப் பிரிவினை செய்துகொள்ளும் நிலைமை உருவாகிறது.
மணியின் திருமணத்தை அடுத்து அவசரம் அவசரமாக கன்னையனுக்கு பெண் தேட முயற்சிகள் நடக்கின்றன.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் கன்னையன், தன் உடல் குறையைப் பொருட்படுத்தாத பெண் கிடைப்பது கடினம் என்கிறார்.
அந்த நேரத்தில், அவர்களது வீட்டில் அடைக்கலம் புகுந்த பொன்னி கன்னையன் மீது விருப்பம் கொண்டிருப்பதை நாசூக்காக வெளிப்படுத்துகிறார். இதனை அறிந்ததும் சுந்தரலிங்கமும் மீனாட்சியும் மகிழ்ச்சியடைகின்றனர்.
பிரிவு ஏற்பட்ட பின்பும் மணியின் மீது கன்னையனுக்குப் பாசம் குறைவதில்லை. ஆனால், அவரோ சிங்காரம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக இருப்பதனால் தன் அலுவலகத்தில் இருந்து பணத்தைக் கையாடும் நிலைக்கு ஆளாகிறார்.
இந்த நிலையில், செயலிழந்துபோன கை, காலை சரி செய்வதற்காக மனைவியுடன் சென்னைக்கு வருகிறார் கன்னையன். வந்த இடத்தில் அவர்களது குழந்தை காணாமல் போகிறது.
அலுவலகப் பணத்தைத் திருடியதால் மணியின் நிலை என்னவானது? காணாமல்போன கன்னையன் குழந்தை திரும்பக் கிடைத்ததா? கன்னையனின் உடல் குறை சரியானதா? இந்த கேள்விகளுக்கு பதில்கள் தருகிறது மீதமுள்ள திரைக்கதை.
கன்னையனின் உடல் முடக்கத்தை விட, அகிலாண்டத்தின் மனமும் சிங்காரத்தின் பேராசையும் மணியின் அறியாமையும் சுற்றத்தினரின் வாழ்வை செயலிழக்கச் செய்கிறது. இதை உணர்த்துவதுதான் இக்கதையின் வெற்றி.
இப்படம் முழுக்க அடையாற்றின் கரையில் அமைந்த நெப்டியூன் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. இதுவே எம்ஜிஆரால் வாங்கப்பட்டு ‘சத்யா ஸ்டூடியோ’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1959ஆம் ஆண்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கல்யாண பரிசு’ படங்களோடு இப்படமும் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.
சிவாஜி எனும் பிறவிக் கலைஞன்!
பாகப் பிரிவினையின் தொடக்கம் முதல் முடிவு வரை இடதுகையை மடக்கி வைத்தவாறே, கன்னையன் பாத்திரமாக வலம் வருவார் சிவாஜி கணேசன். அவரது பொன்மகுடத்தில் பொறிக்கப்பட்ட ரத்தினங்களில் இப்படமும் ஒன்று.
மாடு முட்டியதால் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளிக்கும் காட்சியில் அவரது அறிமுகம் தொடங்குகிறது.
அதன்பின் சரோஜாதேவி காதலைத் தெரிவிக்கும் காட்சியாக இருந்தாலும் சரி, ‘நொண்டி’ என்று சொல்லும் எம்.ஆர்.ராதாவிடம் ‘என் கை சரியானதும் உனக்குதாண்டா முதல் பரிசு’ என்று சவடால் விடும்போதும் சரி; அப்பாத்திரத்தின் இயலாமையையும் சேர்த்தே வெளிப்படுத்துவார்.
இந்த கதை வேறு மொழிகளில் படமாக்கப்பட்டபோது, இதே பாத்திரத்தை தெலுங்கி என்.டி.ராமாராவும், இந்தியில் சுனில் தத்தும், கன்னடத்தில் ராஜ்குமாரும், மலையாளத்தில் கமல்ஹாசனும் ஏற்றிருந்தனர்.
ஆனாலும், தங்களது நடிப்பை சிவாஜியோடு அவர்கள் ஒப்புநோக்கவில்லை என்பதே உண்மை.
இப்படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க முதலில் திலீப்குமாரை அணுகியது தயாரிப்பு தரப்பு. அப்போது, கை செயலிழந்தது போல நடிப்பதில் சிவாஜியை மிஞ்சும் அளவுக்கு தன்னால் நடிப்பை வெளிப்படுத்த முடியாது என்று அவர் மறுத்ததாகத் தகவல் உண்டு.
1936ஆம் ஆண்டு நாடக மேடையில் நடிக்கத் தொடங்கிய சிவாஜி, 1952இல் பராசக்தியில் நாயகன் ஆனார்.
படங்களில் பிஸியாக நடித்துவந்தபோதும், 1974 வரை தனது குழு மூலமாக நாடகங்களை நடத்தி வந்தார். அதன்பிறகு தனது மரணம் வரை அவர் நாடகங்களில் கவனம் செலுத்தவில்லை.
உண்மையைச் சொன்னால், 1975க்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள்தான் மிகை நடிப்பு என்றும் நாடக பாணி நடிப்பு என்றும் விமர்சிக்கப்பட்டது.
தொடக்க காலத்தில் அவரது திரைப்படங்களையும் நாடகங்களையும் ரசித்தவர்களுக்கு நடிப்பில் அவர் கொண்டிருந்த அளவுகோல் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
தரமான பாடல்கள்!
இப்படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களும் ஹிட் ரகம்.
‘தங்கத்திலேயே ஒரு குறை இருந்தாலும்’ பாடல் இல்லாதவற்றை எண்ணி வெம்பும் மனத்துக்கு ஆறுதல் தரும்.
‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் தன் கவலைகளை, துன்பங்களை, இயலாமைகளை நினைத்து வருந்திப் புலம்புவது போலிருக்கும்.
அந்த நாட்களில், தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான குடும்பங்கள் இதனைத் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடியும்.
அந்த அளவுக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் வலுவானதாகவும் வரிகளை அமைத்திருப்பார் கண்ணதாசன்.
‘தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து’ பாடலில் மூன்று வாத்தியங்களை மட்டுமே விஸ்வநாதன் – ராமமூர்த்தி பயன்படுத்தியிருந்தனர்.
இந்த பாடலில் டி.எம்.எஸ். சேர்ந்து பாடும் பி.லீலாவின் ஆலோலம் நம் காதுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடும் சக்தி கொண்டது.
‘தேரோடும் எங்க மதுரையிலே’ பாடலின் நடனம் ஒரு நட்சத்திரத்தின் ரசிகர்கள் தியேட்டரில் எவ்வாறெல்லாம் கொண்டாட்டமாக ரசிப்பார்கள் என்பதை உத்தேசித்து வடிவமைக்கப்பட்டிருக்கும்.
‘பாலூற்றி உழவு செய்வார்’ என்ற தொடக்கத்தை அடுத்து விவசாயம் செய்யும் வழிமுறைகளைப் பட்டியலிடுவார் டி.எம்.எஸ்.
இவ்வரிகளை அடுத்து ‘தேரோடும்’ என்று பாடும்போது வலது கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு செயல்படாத இடது கையையும் காலையும் இழுத்துக்கொண்டே ஒயிலாட்டம் ஆடத் தொடங்குவார் சிவாஜி.
இக்காட்சியில் தியேட்டரில் ஹோவொன்ற ஆரவாரம் எழாமல் இருந்திருந்தால் அதிசயம்தான்.
இப்படம் வெளியாவதற்கு முன்பாக, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மரணமடைந்தார். அதனால், டைட்டில் கார்டில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கும்.
’பிள்ளையார் கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளை யாரு’ பாடலில் கன்னையனை அவ்வூர் பெண்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
இப்பாடலில், வழக்கமாக ஆண்கள் பார்க்கும் வேலைகளை அவரால் பார்க்க இயலாது என்பதும், அவருக்குத் தகுந்த பெண் கிடைக்கவில்லை என்பதும் சொல்லப்பட்டிருக்கும்.
இது, திரைக்கதையில் அப்பாத்திரத்தின் குணாம்சத்தை விளக்கும் காட்சிகளை பதிலீடு செய்திருக்கும்.
இப்பாடலில் குளத்தங்கரையில் அந்த பிள்ளையார் கோயில் இருக்கிறது என்பதைக் காட்ட, வெறுமனே சிவாஜியின் முகத்தில் நீரலையின் பிரதிபலிப்பு தெரியுமாறு ஒளியமைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் விட்டல்ராவ்.
கலை இயக்குனர் பிரமாண்டம் காட்டினாலும் புலப்படாத பிரமிப்பைத் தந்திருப்பார்.
இதே படத்தில் இடம்பெற்ற ‘ஆடலிலே பல வகை உண்டு’ பாடலை வெறும் கிளப் டான்ஸுக்கானதாக இல்லாமல், அதிலும் மனித மனத்தின் நுட்பத்தை வெளிப்படுத்துமாறு வரிகளை வடித்திருப்பார் கல்யாணசுந்தரம்.
‘மந்தரையின் சோதனையால்’ என்று தொடங்கும் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே’ பாடலில் பாகப் பிரிவினை நடந்தபின் நிகழும் உறவுகளின் பிரிவு சொல்லப்பட்டிருக்கும். இதனை எழுதியவர் மருதகாசி.
அக்கால வழக்கப்படி எவரும் வாயசைக்காமல், காட்சியின் பின்னணியில் ஒலிப்பது இப்பாடலின் இன்னொரு சிறப்பு.
ஒரே காலகட்டத்தில் புகழுடன் திகழ்ந்த மூன்று பாடலாசிரியர்கள் இப்படத்தில் பங்கேற்றிருப்பதும், அவரவர் தனித்தமிழுக்கு ஏற்ப விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருப்பதும் மறக்கவியலா சிறப்புதான்.
சோலைமலையின் தனித்துவ எழுத்து!
சமூகப்படங்களில் உரக்க வசனம் பேச வேண்டுமென்ற நியதியை ஸ்ரீதர் உடைத்தாலும், அவரது சமகால இயக்குனர்கள் பலர் அதனைப் பின்பற்றவில்லை.
குடும்ப உறவு, நட்பு, பாசம் போன்றவற்றுக்கே முக்கியத்துவம் தந்த பீம்சிங், இந்த விஷயத்தில் அவருக்கு இணைகோடாகத் திகழ்ந்தார்.
இப்படத்தில் சோலைமலையின் கதையும் வசனமும் பாத்திரங்களின் முரண்களைச் சரியாகப் பிரதிபலித்தன.
‘நீ பொங்கலுக்கு பொங்கல்தானே குளிப்ப’ என்று டி.எஸ்.பாலையா கிண்டலடிப்பதாகட்டும், ‘அத்தே..’ என்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு நக்கலுடன் வில்லத்தனத்தை எம்.ஆர்.ராதா வெளிப்படுத்துவதாகட்டும், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஏற்ப அவரது பேனா விளையாடியிருக்கும்.
‘பா’ வரிசை ஹிட்!
படம் முழுக்க ‘விக்’ வைத்துக்கொண்டே வலம் வரும் சிவாஜி, கிளைமேக்ஸில் இடம்பெற்ற மருத்துவமனை மற்றும் சர்க்கஸ் காட்சிகளில் விக் இல்லாமல் காட்சியளிப்பார்.
இறுதியில் அவரது உடற்குறை சரியானதைத் திரையில் வெளிப்படுத்துவதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
பாகப் பிரிவினையை அடுத்து பாசமலர், பாவமன்னிப்பு, பார்த்தால் பசிதீரும், பாலும் பழமும் என்று ’பா’ வரிசை படங்களாக அடுக்கினார் பீம்சிங். இவ்வரிசையில் பெரும்பாலானவை சிவாஜியை வசூல்ராஜா ஆக்கியவை.
கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையரின் சீடரான பீம்சிங், தனது படங்களின் படத்தொகுப்பையும் கவனித்துக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு பால் துரைசிங்கம், ஆர்.திருமலையோடு இணைந்து படத்தொகுப்பைக் கையாண்டவர், அதன்பின் இருவரையும் படத்தொகுப்பாளர்களாக பயன்படுத்திக் கொண்டார். திருமலை பீம்சிங்கின் உதவி இயக்குனராகவும் விளங்கினார்.
பாகப் பிரிவினைக்கு முன்னதாக ’பொன்னு விளையும் பூமி’ எனும் படத்தையும், பின்னதாக ’சகோதரி’ எனும் படத்தையும் இயக்கினார் பீம்சிங். முன்னது ஜனவரி மாதத்திலும் பின்னது டிசம்பர் மாதத்திலும் ரிலீஸ் ஆனது.
இப்படங்களில் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று வெவ்வேறு கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
இதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்து படம் இயக்கி ஆண்டுக்கு மூன்று முதல் 5 படங்களைத் தந்த வெற்றிகரமான இயக்குனராகத் திகழ்ந்தார்.
ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், பி.ஆர்.பந்துலு என்று தொடக்க காலத்தில் சிவாஜியோடு பணியாற்றிய சில இயக்குனர்கள் பின்னர் எம்ஜிஆரோடு கைகோர்த்தனர். பல வெற்றிப் படங்களைத் தந்த பீம்சிங் அந்த வரிசையில் இணையாதது ஆச்சர்யம்தான்.
மேக்கப்மேன் டூ புரடியூசர்
பாகப் பிரிவினை மூலமாக சரவணா பிலிம்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆனார் ஜி.என்.வேலுமணி. கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இவர் மேக்கப்மேனாக திரையுலகில் நுழைந்தவர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்று அக்காலத்தில் முன்னணியில் திகழ்ந்த மூன்று நட்சத்திரங்களையும் கொண்டு இவர் படம் தயாரித்திருக்கிறார்.
குடும்பச் சித்திரத்துக்கான இலக்கணம்!
டிஷ்யூம்.. டிஷ்யூம்.. என்ற சத்தத்தையும் சண்டையையும் எந்த அளவுக்கு இளைஞர்களும் குழந்தைகளும் விரும்பினார்களோ, அதே அளவுக்குப் பெண்கள் அவற்றைக் கண்டால் முகம் சுளித்தனர்.
அந்த மனநிலையை மிகச்சரியாகப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, பீம்சிங்கின் படங்களில் பெரும்பாலும் சண்டைக்காட்சிகள் இடம்பெறவில்லை.
சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இயல்பான மனிதர்கள், வாழ்வியல் முரண்களைச் சொன்ன எளிமையான திரைக்கதைகளோடு அற்புதமான இசை, திறன்மிக்க ஒளிப்பதிவு என்று துருத்திக்கொண்டு தெரியாத தொழில்நுட்பத்தின் உதவியோடு அற்புதமான படைப்புகளைத் தந்தார் பீம்சிங்.
பாகப் பிரிவினை, அப்படியொரு குடும்பச் சித்திரங்களுக்கான முன்மாதிரியாக அமைந்தது என்றால் மிகையல்ல.
– மாபா