Take a fresh look at your lifestyle.

பல்டி – திருப்தி தருகிற ‘ஆக்‌ஷன்’ அனுபவமா?

79

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்படுகிற ‘கமர்ஷியல்’ படங்கள் சிறப்பாக இருக்கச் சில விஷயங்களைக் கைக்கொண்டால் போதும்.

வழக்கத்திற்கு மாறான களம் மற்றும் பாத்திர வார்ப்புடன் வழக்கமாகத் திரைப்படங்களில் இடம்பெறுகிற சில விஷயங்களை ’திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டில் வித்தியாசப்படுத்திக் காட்டுகிற திரையனுபவத்தைத் தந்தாலே ஓரளவுக்கு வெற்றி உறுதியாகிவிடும்.

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான ஷேன் நிகம் உடன் சாந்தனு பாக்யராஜ், செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட சிலர் நடித்துள்ள ‘பல்டி’ அப்படியொரு வரவேற்பை ரசிகர்களிடம் பெறும் வகையில் உள்ளதா?

‘வட்டி’ மாபியா கதை!

கோவை – பாலக்காடு எல்லைப்பகுதியில் உள்ள வேலம்பாளையம் எனும் சிற்றூர். கிராமமும் அல்லாத, நகரமும் அல்லாத அவ்வூரில் ‘வட்டி மாஃபியா’வாக திகழ்கின்றனர் பொற்றாமரை பைரவன் (செல்வராகவன்), சோடா பாபு (அல்போன்ஸ் புத்ரன்) மற்றும் ஜி மா எனும் கௌரி (பூர்ணிமா இந்திரஜித்).

அந்த ஊரின் அதிகார மையமாக யார் திகழ்வது என்பதில் மூவருக்கும் இடையே கடும் போட்டி. இவர்களது பார்வையில் நான்கு இளைஞர்கள் படுகின்றனர்.

அவர்கள், கபடி விளையாட்டில் சூரப்புலிகளாக விளங்கும் உதயன் (ஷேன் நிகம்), குமார் (சாந்தனு பாக்யராஜ்), ரமேஷ் (சிவா ஹரிஹரன்) மற்றும் மணி (ஜெக்சன் ஜான்சன்). பொற்றாமரை பைரவன் நடத்தி வரும் அணி வீரர்களை எதிர்த்து விளையாடி இவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

ஒருமுறை பொற்றாமரை பைரவனுக்குச் சொந்தமான ஹோட்டலுக்கு நண்பர்கள் நால்வரும் உண்ணச் செல்கின்றனர். அப்போது, எதிர்த்து விளையாடிய கபடி வீரர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து தாக்குகின்றனர்.

அந்த மோதல் தொடர்பாக, நால்வரும் பொற்றாமரை அணி மேலாளரை அடிக்கச் செல்கின்றனர். அவர்கள் சென்ற இடம், பொற்றாமரை பைரவனின் அலுவலகம்.

‘மனதில் ஒன்று, வெளியில் வேறொன்று’ என முகம் காட்டும் பொற்றமரை பைரவன், அவர்களைச் சந்தித்ததும் ‘எங்க டீமுக்காக நீங்க ஆட முடியுமா’ என்று கேட்கிறார்.

ஏற்கனவே சோடா பாபுவின் (அல்போன்ஸ் புத்ரன்) அணிக்காக விளையாட ஒப்புக்கொண்டு, அவரிடம் பணம் வாங்கியிருக்கிறார் குமார். அதனைச் சொன்னபோதே உதயனும் மணியும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், அதிக பணம் தருவதாகப் பொற்றாமரை பைரவன் சொன்னவுடன், ‘சரி’ என்கிறார் குமார். ஆனால், உதயனுக்கு அதில் துளி கூட இஷ்டமில்லை.

அந்தப் போட்டியில், பொற்றாமரை அணி சோடா பாபு அணி எதிர்த்து விளையாடுகிறது. இறுதியில், பொற்றாமரை வெற்றி பெறுகிறது.

அது, அந்த நால்வரும் மீதும் சோடா பாபு கோபம் கொள்ளக் காரணமாகிறது.

இந்த நிலையில், பொற்றாமரை பைரவனுக்குச் சொந்தமான ஜீப் ஒன்றை சோடா பாபுவின் ஆட்கள் லவட்டிச் செல்கின்றனர். அதனைத் திரும்ப வாங்கச் சென்ற, அவரது ஆட்களையும் தாக்குகின்றனர்.

விஷயம் கேள்விப்பட்டவுடன், குமார் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார். பேச்சுவார்த்தை பலனளிக்காமல் போக, அங்கே ஒரு மோதல் நிகழ்கிறது. அதன் முடிவில், அவர்கள் சோடா பாபுவைக் கட்டிப் போட்டு தாக்குகின்றனர்.

அந்த சம்பவத்தின் எதிரொலியாக, நால்வரது வாழ்வும் தலைகீழாகிறது. ஜாலியாக கபடி விளையாண்டு வாலிபப் பருவத்தைக் கழித்த அவர்கள் என்ன ஆனார்கள்? மேற்சொன்ன மூன்று ‘வட்டி’ மாபியாக்கள் அவர்களது வாழ்வில் நிகழ்த்திய மாற்றம் எத்தகையது என்று சொல்கிறது ‘பல்டி’யின் மீதி.

ஷேன் நிகமின் ‘ஹீரோயிசம்’, அவர் உட்பட நான்கு நடிகர்கள் கபடி ஆடுகிற மற்றும் சண்டையிடுகிற பாணி, அதிரவிடும் பின்னணி இசைக்கு ஏற்ற ‘தியேட்டர் மொமண்ட்’ தருகிற காட்சி அமைப்பு, அவற்றைத் தருகிற அளவுக்கான சிறிய கதை ஆகியவற்றைச் சரியான வகையில் வார்த்திருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம். வில்லத்தனம் செய்கிற மூவரது பாத்திர வார்ப்பும் கூட ‘சூப்பர்’ ரகம் தான்.

அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர், திரையில் கதை சொல்வதில் சில விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்.

‘இது எப்படிச் சரியாகும்’, ‘இந்த தகவல் ஏன் இல்ல’ என்கிற விதமாக ரசிகர்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் விட்டிருக்கிறார் உன்னி சிவலிங்கம்.

அதுவே, ‘சூப்பர்’ என்று சொல்லி ரசிகர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய ‘பல்டி’யைக் கவிழ்த்திருக்கிறது.

ரசிக்கும் ‘மொமண்ட்’கள்!

ஷேன் நிகமுக்கு இதில் 25-வது திரைப்படம். அதற்கேற்ற வகையில், படத்தில் அவரது பாத்திரம் வலுவாக உள்ளது. ’பல்டி’ எனும் பெயருக்கு ஏற்ப கபடி விளையாட்டில் அவர் வெளிப்படுத்துகிற ‘ஸ்டைல்’ முத்திரையைச் சண்டைக்காட்சிகளுக்கும் இயக்குனர் பயன்படுத்தியிருப்பது நல்ல உத்தி.

தியேட்டரில் காட்சிகளை ரசிகர்கள் எப்படி நோக்குவார்கள் என்று புரிந்துகொண்டு கேமிரா முன்னே நின்றிருக்கிறார் ஷேன் நிகம். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

சாந்தனுவுக்கு இதில் ‘செகண்ட் ஹீரோ’ டைப் பாத்திரம். பணம் மீது பேராசை கொண்டவர் எனும் குணாதிசயத்தைப் படம் முழுக்க வெளிப்படுத்தினாலும், தான் சரி என்றெண்ணுவதைச் செய்யத் துணிபவர் என்று சொன்னாலும், அது சரிவரத் திரையில் கடத்தப்படவில்லை.

போலவே, இளமைத்துடிப்பைப் போதுமான அளவுக்கு சாந்தனு வெளிக்காட்டவில்லை. முன்னது இயக்குனர் சம்பந்தப்பட்டது என்றாலும், பின்னதை அவர் சற்று கவனித்திருக்கலாம்.

மீதமுள்ள நண்பர்களாக வரும் சிவா ஹரிஹரன், ஜெக்சன் ஜான்சன் இருவருக்கும் அவர்களது பின்னணியைச் சொல்கிற வகையில் தனிப்பட்ட காட்சிகள் இல்லாதது ஒரு குறையே.

வில்லனாக செல்வராகவனின் நடிப்பு அசத்தல் ரகம். கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்க முயல்வது போன்று வடிவமைக்கப்பட்ட காட்சியொன்றில் அவரது நடிப்பு ‘அடிபொலி’.

காவேரி எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி. ‘டல்’ மேக்கப்பில் அவர் வந்து போனாலும், பாடல் காட்சிகளில் அவரது துறுதுறுப்பு வெளிப்படுகிறது. மற்றபடி, அவரது பாத்திரத்திற்கு அதிக இடம் திரைக்கதையில் இல்லை.

அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இருவரும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி ‘ஸ்கோர்’ செய்திருக்கின்றனர்.

இது போகச் செல்வராகவனின் கையாளாக வருபவர், ஷேன் நிகம்மின் தாயாக வருபவர், ப்ரீத்தியின் சகோதரராக வரும் அக்‌ஷய் ராதாகிருஷ்ணன் உட்படச் சிலர் இந்தக் கதையில் வந்து போகின்றனர்.

ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்திற்கு தேவையான காட்சியாக்கத்தைத் தருகிறது அலெக்ஸ் ஜே.புலிக்கல்லின் ஒளிப்பதிவு,

ஆஷிக்கின் தயாரிப்பு வடிவமைப்பு, சண்டைக்காட்சிகள் அற்ற இதரக் காட்சிகளில் கலர்ஃபுல் ஆக பிரேம்களை காட்ட உதவியிருக்கிறது.

சிவகுமார் பணிக்கரின் படத்தொகுப்பு முதல் பாதியில் ‘அட’ என்று சொல்ல வைக்கிறது; பின்பாதியில் ‘அடடா’ என்று வருத்தப்பட வைத்திருக்கிறது.

நாயகனையும் அவரது நண்பர்களையும் சுற்றலில் விடுவது குறிப்பிட்ட பாத்திரம் என்று ரசிகர்களுக்குச் சொல்லப்பட்டாலும், அது எப்படி, ஏன், எதற்காக நிகழ்கிறது என்பது திரைக்கதையில் விரிவாகக் கூறப்படவில்லை.

படத்தொகுப்பு மேஜையில் நீளம் கருதி அக்காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டிருந்தால், அந்த குறைக்குப் படத்தொகுப்பாளரே பொறுப்பு.

கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியானது, சில மாதங்களுக்கு முன் வந்த ‘ராயன்’னை நினைவூட்டுகிறது. ரத்தக்களரியான அந்தக் காட்சிகள், நிச்சயம் பேமிலி ஆடியன்ஸை ‘போதும்டா’ என்று இருக்கையை விட்டு எழ வைக்கும்.

இந்தப் படத்தில் சாய் அப்யங்கரின் இசை ‘ப்ளஸ்’ ஆக உள்ளது. ‘ஜாலக்காரி’, ‘பல்டி’ பாடல்கள் சட்டென்று கவர்கின்றன. பின்னணி இசையானது ரசிகர்களைப் படத்தோடு ஒன்றச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.

சில இடங்களில் ‘சவுண்ட் ஓவர்’ என்று சொல்லும்படியாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி, முதல் படம் என்ற வகையில் இது சாய்க்கு நல்லதொரு அறிமுகம்.

இவர்கள் போக டிஐ, விஎஃப் எக்ஸ், ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, ஒப்பனை, எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் நல்லதொரு உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.

கபடி விளையாடுகிற வீரர்கள் சிலர் எப்படி ‘வட்டி மாஃபியா’க்களின் கையில் சிக்கித் தங்களது வாழ்வை இழக்கின்றனர் என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்.

பின்பாதி கதை இப்படித்தான் நகரும் என்று முடிவு செய்துவிட்டபிறகு, முன்பாதியில் வரும் காட்சியமைப்பையும் அவற்றுக்கான திரைக்கதை ட்ரீட்மெண்டையும் அவர் மாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவ்வாறு செய்யாத காரணத்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகிற வகையில் இரண்டாம் பாதி உள்ளது.

திருவிழா பின்னணியில் நிகழும் கொலையைக் காட்டும் தொடக்கக் காட்சி, ஹோட்டல் சண்டைக்காட்சி, கபடி விளையாடுகிற காட்சிகள், ஹீரோ ஹீரோயின் காட்சிகள் மற்றும் செல்வராகவன் வரும் இடங்களில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் உன்னி சிவலிங்கம். அவையே இப்படத்தில் ரசிக்கத்தக்க ‘மொமண்ட்’களாக உள்ளன.

இந்தக் கதையில் மையப் பாத்திரங்களை அழகழகாக வார்த்த இயக்குனர், அவர்களது குடும்பம், வீடு, சுற்றுப்புறம் மற்றும் கலாசார பின்புலம் உள்ளிட்ட பின்னணியைத் திரையில் சரிவரச் சொல்லவில்லை.

அந்த ஒரு விஷயமே ‘பல்டி’யின் மிகப்பெரிய ‘மைனஸாக’ உள்ளது. திருப்தியான ‘ஆக்‌ஷன்’ படத் திரையனுபவம் கிடைப்பதைத் தடுத்திருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இப்படத்தில் சில காட்சிகள் சரிவரத் திரையில் சொல்லப்படவில்லை. சாந்தனு பாத்திரத்தின் செய்கைகளுக்கு இயக்குனர் நியாயம் கற்பிக்கவில்லை.

அவற்றைச் சரிப்படுத்தியிருந்தால், ‘பல்டி’ ஒரு சிறப்பான ‘கேங்ஸ்டர் ஆக்‌ஷன் ட்ராமா’வாக மாறியிருக்கும்.

அது நிகழாதபோதும், மலையாளத் திரையுலகில் இயக்குனர் அன்வர் ரஷீத் பாணியில் செயல்பட்டு வரும் நஹாஸ் ஹிதாயத், காலித் ரஹ்மான் போன்று ஹீரோயிசம் சார்ந்த கதைகளைச் சிறப்பாகத் தரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் உன்னி சிவலிங்கம். அதற்கு வழியமைத்து தந்திருக்கிறது இந்த ‘பல்டி’.

– உதயசங்கரன் பாடகலிங்கம்