Take a fresh look at your lifestyle.

“அத்தை மடி மெத்தையடி”!

திரைத் தெறிப்புகள் – 49:

*

“ல்ல்லாயி.. ஆரிராரோ” என்று தேனான அந்தக் குரல் காதைத் தொடும்போதே அன்பின் கதகதப்பை உணர முடியும். காதில் நுழைந்தாலும், கண்ணையும் சற்றே கிறங்கடிக்கும்.

சொந்தத்தின் அருமையை உணர்ந்தவர்களுக்குத் தெரியும் – ‘அத்தை’ என்பது எத்தகைய மந்திரச் சொல் என்று!

சொந்த உறவுகள் மீது மிகவும் சொந்தம் பாராட்டும்படி பல பாடல்கள் தமிழில் உண்டு. அப்படி அத்தை எனும் சொந்தம் தான் வைத்திருக்கும அளவு கடந்த பாசத்தைக் கொஞ்சலாக வெளிபடுத்திருக்கிற விதத்தில் அமைந்திருக்கிறது 1963-ம் ஆண்டில் வெளிவந்த ‘கற்பகம்’ படத்தில் இடம் பெற்றிருக்கிற இந்தப் பாடல்.

“அத்தை மடி மெத்தையடி.
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா….”

– என்ற பாடலை பி.சுசீலா பாடியிருக்கும் விதம் மெல்லிய வயலின் இசையமைப்பதைப்  போலிருக்கும். மென்மையான கொஞ்சலைப் போலவும் இருக்கும்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் இயக்கிய இப்படத்தில் அறிமுகமாகியிருந்த கே.ஆர். விஜயா, தனது மருமகளான குழந்தையை அள்ளிக் கொஞ்சிப் பாடி நடித்திருக்கும் விதம் அருமையாக அமைந்திருக்கும்.

இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் இந்தப் பாடல் வரிகளை எழுதியவரான வாலி இந்தப் பாடலுக்காகவே தனிக் கவனம் பெற்றார்.

“மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான்குட்டி கேட்டு கண் மூடும்….”

கவியரசர் கண்ணதாசன் போலவே மிக எளிய பாடல் வரிகளில் அன்பைக் கடத்தியிருப்பார் வாலி.

குழந்தையை எவ்வளவு நளினமாக தெய்வத்திற்கு இணையாகி விடுகிறார் கவிஞர்!

“வேறோர் தெய்வத்தைப் போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோவிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னைத் தூக்கி வைத்தேன்….”

என்று இந்தப் பாடல் நிறைவடையும் போது “அன்னை மடி மெத்தையடி” என்று மெதுவாகத் தென்றல் தொட்டதைப் போல், பி.சுசீலா பாடிய விதமும், அந்தக் காட்சிக்கேற்ற அன்பு நிறைந்த அழகான திரை மொழியும் நெஞ்சுக்குள் இப்போதும் நம் நினைவைப் பால்யத்திற்குப் பின்னகர்த்தி நிழலாடுகின்றன.

*
– மணா