Take a fresh look at your lifestyle.

சிதம்பரம் ஜெயராமனும், கலைவாணரும் ஆடிய கேரம் போர்டு!

402

ஒருமுறை கேரம் விளையாட்டுப் போட்டிக்காக சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் கோவை சென்றிருந்தார்.
அப்போது கோவையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இருந்தார். ஜெயராமன் அவர்களைப் பற்றி பலர் வாயிலாக என்.எஸ்.கே. அவர்களுக்குத் தகவல் எட்டிச் சேர்ந்திருந்தது.

கலைவாணருக்கும் கேரம் விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஆகவே, தம் காா் ஓட்டியை அனுப்பி ஜெயராமனை அழைத்து வரச் செய்தார்.

அப்போது அங்கே கலைவாணருடன், டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.ஜி.ராமச்சந்திரன், (எம்.ஜி.ஆர்.) கவிஞர் காமாட்சி சுந்தரம், உடுமலை நாராயணகவி, புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

கேரம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவே பல படப்பிடிப்புகளைத் தள்ளி வைத்தவர் சிதம்பரம் ஜெயராமன் என்பது இன்னொரு செய்தி.

என்.எஸ்.கே அவர்களுடன் இருந்தபோது ஓர் இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த எம்.எஸ்.சுப்புலஷ்மி அம்மையாருக்கு சிதம்பரம் ஜெயராமன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.

கலைவாணரும் மதுரமும் ஓரணி. ஜெயராமனும் எம்.எஸ். அவர்களும் ஓரணி என்று ‘டபுள்ஸ்’ விளையாடினார்கள்.
கலைவாணர் அணி தோற்றுப்போனது. ஜெயராமனின் கேரம் விளையாட்டுத் திறமையை அன்றைக்கு எம்.எஸ். அவர்களிடம் ஓஹோ என்று புகழ்ந்தார் கலைவாணர்.

“இவர் விரல்கள் என்ன மந்திர விரல்களோ!” என்று வியந்து பாராட்டிச் சொன்னார் எம்.எஸ். அம்மா. என்.எஸ்.கே அவர்களுக்கு முதல் சந்திப்பின்போது ஜெயராமன் திரைப்படக் கதாநாயக நடிகர் என்ற உண்மை தெரியவே தெரியாது.

பின்னர் அந்த விவரம் தெரிய வந்தபோது, “ஏன் இப்போது நடிப்பதில்லை” என்று கேட்டார் ஜெயராமனிடம். “எனக்கு சரிப்பட்டு வராது என்று விட்டுவிட்டேன்!”.

“ஏன் சரிப்பட்டு வராது?”

“திரை உலகில், படப்பிடிப்புக்கு வெளியேயும் நடிப்புதான் அதிகமாக இருக்கிறது. நல்லொழுக்கம், நல்ல பழக்கம், நேர்மை, கட்டுப்பாடு, சொன்ன சொல் தவறாமை போன்ற பண்புகள் பலவீனமாகி வருகின்றன. என் இயல்புக்கு அவை சரிப்பட்டு வரவில்லை!”.

“நீங்கள் நடிப்புத் துறையில் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ‘இழந்த காதல்’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்!” என்று ஒரு கட்டளை போலவே கூறினார் கலைவாணர்.

கலைவாணர் பிடிவாதமாக இட்ட அன்புக் கட்டளையை ஜெயராமன் மீற முடியவில்லை. அந்தப் படத்தில் நடித்தார். பின்னர் வேறு சில திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. கைது ஆனார் ஜெயராமன்! “வெள்ளையனே வெளியேறு!” என்று தொடங்கிய பாடலைப் பாடியதற்காக சிதம்பரம் ஜெயராமன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் பாடிய வாசுதேவ நாயரும் கைது செய்யப்பட்டார்!

ஜெயராமன் அவர்கள் எந்தக் கட்டத்திலும் தமிழ் இசை தவிர வேற்று மொழிப் பாடல்களைப் பாட சம்மதித்ததில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“தெலுங்குக் கீர்த்தனைகளையும் சேர்த்துப் பாடினால் தவறு ஒன்றும் இல்லையே?” என்று ஒரு முறை அவரிடம் யோசனை சொல்லப்பட்டதாம். “நான் பாட மாட்டேன்!” என்பதே அவருடைய உறுதியான பதிலாக இருந்தது.

சிதம்பரம் ஜெயராமன், கலைவாணர் கேட்டுக்கொண்டு பரிந்துரைத்ததால் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் குருவாக இருந்து இசை கற்பித்திருக்கிறார் என்ற உண்மை பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆனால் அது உண்மை.

‘உதயணன்’ என்ற படத்தில் எம்.கே.டி. நடித்தார். அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக இருக்க வேண்டும் என்று ஜெயராமன் அவர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை.

பாகவதரும் கலைவாணரும் சிறை சென்றுவிட்ட நிலையில், “அந்தப் படத்திற்கு நீங்களே இசை அமையுங்கள்” என்று இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் அவர்களை ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.

கலைவாணர் விடுதலையாகி வந்ததும், மீண்டும் ஜெயராமனோடு அவருடைய தொடர்பு தொடர்ந்தது. “நீங்கள் திரையுலகிலிருந்து விலகக்கூடாது. தொடர்ந்து இசையமைக்க வேண்டும்!” என்று கோரிக்கை வைத்தார்.

அவ்வாறே சிதம்பரம் ஜெயராமன் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அது மட்டுமல்ல வேறு பல திரைப்படங்களுக்கும் இசையமைத்துக் கொடுத்து விட்டு, மற்றவர்களின் பெயரைப் போட்டுக் கொள்ள அனுமதித்தார்! அதற்கு ஒரு காரணம் இருந்தது.
அவர்களும் முன்னுக்கு வரவேண்டும் என்பதே அவருடைய எண்ணம்!

குடும்ப வாழ்க்கை

கிருஷ்ணவேணி என்ற பெண்மணியைத் 1944இல் சிதம்பரம் ஜெயராமன் மணந்து கொண்டார். துரதிஷ்டவசமாக அவர் காலமான பிறகு, தங்கபாப்பா என்ற பெண்மணியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார்.

ஜெயராமன் அவர்களுக்கு சுந்தர ஜெயஜோதி, சிவகாமசுந்தரி, காளிதாஸ், ராஜசேகர், தங்க மோகன், தமிழ்ச்செல்வன், கங்கா, குணசுந்தரி என்று 8 மக்கள்.

சென்னை மாநகரில் தியாகராய நகரில் 24, தெற்கு தண்டபாணி தெரு என்ற முகவரியில் வாழ்ந்தார் ஜெயராமன். தன் இசைக்குத் தந்த முகவரி அது. அங்குதான் சிதம்பரம் ஜெயராமன் வாழ்ந்து வந்தார்.

அப்போதே மயில், கிரேடுன் நாய், குதிரை, எட்டு ஓங்கோல் பசுக்கள் எட்டு கார், மூன்று டிரைவர்கள் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் ஜெயராமன்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராமண்ணா, கே.ஏ.தங்கவேலு, வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி, ஏ.பி.நகராஜன் என்று பல கலைஞர்கள் ஜெயராமன் அவர்களின் இல்லத்திற்கு தினமும் வந்து போவதுண்டு.

இவர்களின் நட்பு ஜெயராமனுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்தது. கே.ஏ.தங்கவேலு வருடம் தோறும் வீட்டில் நடக்கும் நவராத்திரி கொலுவின்போது, முதல் நாள் இசை நிகழ்ச்சி சிதம்பரம் ஜெயராமனின் கச்சேரி தான்!

“சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராக நிரவல்கள் அத்தனையும் நானே தொகுத்துக் கொடுத்து, பதிவும் செய்து, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்களின் பெயரைப் படத்தின் இசையமைப்பாளர் என்று போட்டுக்கொள்ள மகிழ்ச்சியுடன் இசைந்தேன்!” என்று ஜெயராமன் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடினாலும், நிறைவு செய்கையில்,

வாழ்க தமிழ் மொழி, வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே –
என்றும் தமிழ் மொழி, என்றும் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே!
வெல்க தமிழ் மொழி, வெல்க தமிழ் மொழி
வெல்க வெல்கவே!
வாழ்க நிரந்தரம், வாழ்க நிரந்தரம்
வாழிய வாழியவே!
– என்ற தமிழ் மொழி வாழ்த்துடன் தான் உணர்ச்சிப் பூர்வமாக பாடி கச்சேரியை நிறைவு செய்வார்.

– முத்தமிழ் இசைச் சித்தர் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு (2018) விழா மலரிலிருந்து…