திரையுலகத்தின் அங்கமாக இருப்பதை பெருமையாக உணர்பவர்கள் பலரை இந்த சினிமா கண்டுள்ளது. ஆனால் சினிமாவுக்கே பெருமை சேர்த்த வெகு சில நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயராம்.
மலையாள திரையுலமே கொண்டாடும் பத்மஸ்ரீ ஜெயராம், ஒரு மிமிக்ரி கலைஞனாக திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தவர். ஜெயராமுக்கு, நடிக்கும் வாய்ப்பு 88-ம் ஆண்டு வெளியான ‘அபரன்’ படம் மூலம் கிடைத்தது.
முதல் படத்திலேயே ஹீரோ, வில்லன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். தமிழில் ‘கோகுலம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை கேரக்டர், சீரியஸ் கேரக்டர் என எது கொடுத்தாலும் சிக்ஸர் அடிக்கும் ஜெயராம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பேவரட்.
ஒரு நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், பாடகர் என பன்முகம் கொண்டவராக திகழும் ஜெயராம் ஒரு மிக சிறந்த செண்ட தாள வாத்தியக்காரராகவும் அறியப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், ஜெயராமின் நடிப்பில் வெளியான சில சூப்பர் ஹிட் படங்களில் அவரது பங்களிப்பு அபாரம்.
தெனாலி – டாக்டர் கைலாஷ்
கமல்ஹாசன் – ஜெயராம் காம்போவில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தெனாலி. மோகன்லால் நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மனநல மருத்துவராக ஜெயராம் நடிக்க அவரின் பேஷண்ட்டாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் அனைத்துமே பட்டையைக் கிளப்பியது.
பஞ்சதந்திரம் – நாயர்
கமல்ஹாசன் – ஜெயராம் காம்போவில் வெளியான அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம். ஐந்து நண்பர்களும், அவர்கள் செய்யும் லூட்டிகளும், சேட்டைகளும் படம் முழுக்க கலகலப்பாக வைத்திருந்தது. டைம்லி காமெடியால் ரசிகர்களை இன்று வரை ரிப்பீட் மோடில் வைத்து என்டர்டெயின் செய்யக்கூடிய கிளாசிக் திரைப்படம் பஞ்சதந்திரம்.
பொன்னியின் செல்வன் – ஆழ்வார்க்கடியான் நம்பி
பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் நடிகர் ஜெயராம். வரலாற்று புனைவு நாவல் என்பதால் படத்தின் கதாபாத்திரத்திற்காக உடல் எடை அதிகரித்து ஹேர்ஸ்டைலை மொத்தமாகவே மாற்றி மாறுபட்ட ஒரு தோற்றத்தில் அசத்தி இருந்தார்.
நடிகர் விஜய் – ஜெயராம் காம்போவில் வெளியான துப்பாக்கி
இந்தப் படத்தில் ராணுவ உயர் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும் அதையும் மிகவும் நகைச்சுவை கலந்து சிறந்த ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
உத்தமவில்லன் – ஜேகப் சக்காரியா
கமல்ஹாசன் – ஜெயராம் காம்போவில் வெளியான மற்றுமொரு திரைப்படம் ‘உத்தமவில்லன்’. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இது இவர்கள் கூட்டணி சேர்ந்த ஐந்தாவது திரைப்படம்.
விருதுகளின் பட்டியல்
தூவல் கொட்டாரம் – 1996 படத்திற்காக சிறப்பு ஜூரியில் கேரள மாநில அரசின் திரைப்பட விருது
ஸ்வயம்வர பந்த – படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது
2011-ம் ஆண்டில் நடிகர் இந்திய திரைப்படத் துறையில் அவரது நம்பமுடியாத பங்களிப்பிற்காக இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ உட்பட பல விருதுளைப் பெற்றுள்ளார்.
நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் என எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பட்டையை கிளப்புவார்.
மோகன்லால், மம்மூட்டி, கமல்ஹாசன், விஜய் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயராம் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல பின்னணி பாடகரும் கூட.
அதுமட்டுமல்லாமல், 8 ஏக்கரில் 60 பசுக்களுடன் பண்ணை நடத்திவரும் ஜெயராம் ‘சிறந்த விவசாயி’ விருதினையும் பெற்றுள்ளார்.
கேரள அரசின் சிறந்த விவசாயி விருது பெற்றுள்ள நடிகர் ஜெயராம், “பத்மஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
80, 90 களில் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார்.
தற்போதும் நாயகன், துணை நடிகர், வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என தனது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் காந்தாரா படத்திலும் நடித்திருந்தார். இவரது மகன் காளிதாஸூம் இப்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிகராக உள்ளார்.
நடிப்பைத் தாண்டியும் பன்முகக் கலைஞராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயராம் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம்.
– லாவண்யா யுவராஜ்
- நன்றி: ஏபிபி நாடு தமிழ்