Take a fresh look at your lifestyle.

மக்கள் மனசுல தெய்வங்களோட உருவத்த பதிய வைத்த ஏ.பி.என்!

103

‘நவராத்திரி’ படத்துக்குப் பிறகு, பக்தி மற்றும் புராணப் படங்களைக் கையிலெடுத்த ஏ.பி. நாகராஜன், முன்னணி இயக்குநராக வளர்ந்ததுடன், தன் படங்களில் பிரமாண்டத்தைப் புகுத்தி, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் பங்காற்றியது சுவாரஸ்யமான சினிமா வரலாறு.

இதை நினைவுபடுத்திப் பேசியுள்ளார் அவரது மகள் விஜயலட்சுமி.

“அப்பா, ‘திருவிளையாடல்’ படத்தை சிரத்தையெடுத்து டைரக்ட் பண்ணினார். அந்தப் படத்துல 11 பாடல்களும் சூப்பர் ஹிட்.

“பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை ஷூட் பண்ணிய பிறகு, ஒளிப்பதிவு செய்யப்பட்ட சில காட்சிகள்ல தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கு.

அதனால, சிவாஜியை வரவெச்சு அந்தப் பாடலை அப்பா மறுபடியும் ஷூட் பண்ணினார். சிவாஜி ரொம்ப வலியுறுத்தவேதான் அந்தப் படத்துல நக்கீரர் கேரக்டர்ல அப்பாவே நடிச்சார்.

அதுல சிவாஜிக்கும் தருமியா நடிச்ச நாகேஷுக்கும் இடையே நடக்குற உரையாடல், எல்லாருக்கும் பிடித்தமான காட்சி. அந்த டயலாக்கை அப்பர் ஒரே இரவுல எழுதினார்.

அந்தப் படத்துல பெரிய திமிங்கலத்தை வேட்டையாடுற சீனுக்காக, பஞ்சுல திமிங்கலத்தை உருவாக்கினாங்க. ஷூட்டி முடிஞ்சதும் அந்த பொம்மைத் திமிங்கலத்தை எங்க வீட்ல கொண்டுவந்து வெச்சாங்க.

அந்த ஷூட்டிங்கை நேர்ல பார்த்து வியந்த நானும், என் அண்ணனும், தம்பியும் படத்துல சிவாஜி பண்ணுற மாதிரியே அந்தத் திமிங்கலத்தின்மேல உட்கார்ந்து, அதோட உடலைக் கிழிச்சுச் குதறிட்டோம்.

எங்க கெட்ட நேரம் திமிங்கலத்தை வேட்டையாடுற அத்த காட்சியை மறுபடியும் ஷூட் பண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கு.

அதனால, அந்த பொம்மைத் திமிங்கலத்தை எடுத்துட்டுப் போகலாம்னு படக்குழுவினர் வந்தாங்க.

நாங்க பண்ணி வெச்சிருந்த காரியத்தைப் பார்த்து அவங்களுக்குப் பேரதிர்ச்சி. அப்பா ஒரு வார்த்தைகூட எங்களைத் திட்டலை. இன்னொரு திமிங்கலத்தை உருவாக்கி ஷூட் பண்ணினாங்க.

முருகனின் அறுபடை வீடுகளைத் தமிழ் மக்கள் மனசுல பதிய வெச்ச படம்தான் ‘கந்தன் கருணை’. அதுல, ‘வெற்றிவேல் வீரவேல்’ பாடலையும், அசுரர்களுடன் நடக்குற சண்டைக் காட்சியையும் கோவளம் கடற்கரையில் செட் போட்டுப் படமாக்கினாங்க.

அப்போ வீசிய புயலால, அந்த செட் நாசமாகிடுச்சு. மறுபடியும் செட் போட்டு அப்பா ஷூட்டிங் பண்ணினார்.

‘சுந்தன் கருணை’ படத்துலதான், ஸ்ரீதேவியைக் குழந்தை நட்சத்திரமா அப்பா அறிமுகப்படுத்தினார்.

‘திருவருட்செல்வர்’ படத்துல, ‘மன்னவன் வந்தானடி தோழி’ பாட்டுல பத்மினியம்மா பிரமாதமா டான்ஸ் ஆடியிருப்பாங்க.

ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, ஃபுட்டேஜ்ல டெக்னிக்கலா பிரச்னைகள் இருந்திருக்கு. வெளியூர்லேருந்து பத்மினியம்மாவை வரவெச்சு, அந்தப் பாட்டை மறுபடியும் ஷூட் பண்ணினாங்க.

அப்பாவோட பக்திப் படங்கள்ல, கடவுள்களா நடிச்ச நடிகர்கள், நடிகைகள் உடல் முழுக்க நகைகளைப் போட்டுக்கிட்டு ஜொலிப்பாங்க.

கடவுள்கள் இப்படித்தான் இருப்பாங்களா?ன்னு சாமானிய மக்கள் மெய்சிலிர்த்துப்போகுற அளவுக்கு, தன் படங்கள்ல தெய்வங்களோட கதாபாத்திரங்களை அப்பா வடிவமைச்சார்.

நக்கீரராக ஏ.பி.என்

தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்துலயே, பிரமாண்டமா செட் போடுறது, அப்பாவுக்குக் கைவந்த கலை.

படங்கள் தரமா வரணும்னு, செலவு விஷயத்துல சமரசமே பண்ணிக்க மாட்டார். அதுக்குப் பலனா, அப்பாவின் பக்திப் படங்களை மக்கள் குடும்பம் குடும்பமா பார்த்து ரசிச்சாங்க.

நாடக கம்பெனியில் முன்னோர்கள் வாயிலா கத்துக்கிட்டது புத்தக வாசிப்பு மூலமாதான் புராணப் படங்களுக்கான தகவல்களை அப்பா தெரிஞ்சுக்கிட்டார்” தந்தையின் பெருமைகளைப் பேரார்வத்துடன் சொல்லும்போது விஜயலட்சுமிக்கு ஆவல் பன்மடங்கு கூடுகிறது.

“அப்பா எடுத்த முக்கியமான வரலாற்றுப் படம், ‘ராஜராஜ சோழன்’. அந்தப் படத்தை எடுத்தப்போ ராஜராஜ சோழனோட உருவம் எப்படியிருக்கும்னு யாருக்குமே தெரியல.

நிறைய தேடலுக்குப் பிறகு, தஞ்சை பெரிய கோயிலுக்குள்ள கருவறையை ஒட்டிய சுரங்கம் ஒண்ணுல ராஜராஜசோழனோட ஓவியம் இருக்குன்னு தெரியவந்திருக்கு.

விஜயலட்சுமி

ரெண்டு பேருக்கு மட்டுமே உள்ளே போறதுக்கான அனுமதி கிடைச்சிருக்கு. ஆனா, மெழுகுவத்தி அல்லது தீக்குச்சி வெளிச்சத்துல மட்டும்தான் போகணும்னு சொல்லியிருக்காங்க.

அதனால, அப்பாவும், ஆர்ட் டைரக்டர் கங்காவும் அந்த ஓவியத்தைப் பார்த்து மனசுல பதியவெச்சுகிட்டு வந்தாங்க.

அதுக்கப்புறமா, ராஜராஜ சோழனோட உருவத்தை கங்கா மாமா ஒவியமா வரைஞ்சார். அதை அடிப்படையா வெச்சுதான், ராஜராஜ சோழனா நடிச்ச சிவாஜியின் கேரக்டருக்கு உயிர் கொடுத்தாங்க.

அந்தப் படத்துக்காக சென்னையிலிருந்த பரணி ஸ்டூடியோவுல தஞ்சை பெரிய கோயில் போலவே பிரமாண்டமா செட் போட்டாங்க” என்று நினைவு கூர்ந்தார் இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் மகள் விஜயலட்சுமி.

நன்றி: விகடன் தீபாவளி மலர் – 2025.