ஜான் டோ (John Doe). தமிழ்ப் படம் தான்.
அர்கா மீடியா ஒர்க்ஸ்சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரிக்க, அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஜெயப்பிரகாஷ், அனுபமா, அர்ச்சனாவின் மகள் சாரா, நீரவ், படவா கோபி, சாராவின் அம்மா அர்ச்சனா ஆகியோர் நடிப்பில்,
நிக்கோலஸ் செவாலியர் இணைந்து படத்தின் கதை, திரைக்கதையை எழுதி, மதுமிதா இயக்கி இருக்கும் படம்.
(மேற்படி நிக்கோலஸ் செவாலியர் ஜெர்மனியைச் சேர்ந்த திரை எழுத்தாளர். சோட்டி சி பாத் போன்ற இந்திப் படங்களுக்கும் இணை எழுத்தாளராக பணியாற்றியவர்)
இங்கிலாந்து அமெரிக்கா, கனடா நாடுகளின் சட்டத்துறையில் அடையாளம் இல்லாத ஆண் பிணங்களுக்கு ஜான் டோ என்று பெயர்.
அதுவே பெண் என்றால் ஜேன் டோ (Jane Doe) மூன்றாம் பாலினம் அல்லது பாலினம் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் ஜே டோ (J.Doe). லத்தீனில் இருந்து வந்த சொல் என்கிறார்கள்.
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது.
அம்மா இறந்த நிலையில் வேறு திருமணம் செய்து கொண்ட அப்பாவால் மட்டம் தட்டப்பட்ட மகள் (சாரா), அந்த அப்பாவின் இரண்டாவது மனைவி, அந்த இரண்டாவது மனைவிக்கும் அப்பாவுக்கும் பிறந்த மகன் ஹிருதய் (நீரவ்) ஆகியோரடங்கிய – வெளிநாட்டில் இருந்து இந்திய வந்திருக்கும் குடும்பத்தில் அந்தப் பையன் ஹிருதய் காணாமல் போய் விடுகிறான்.
“நீ போலீசாக லாயக்கே இல்லை” என்று அப்பாவால் (படவா கோபி) மட்டம் தட்டப்பட்டு, ஒரு நிலையில் போலீஸ் ஆகி, கேரள போலீசில் வேலை செய்யும் ஒருவன் (அர்ஜுன் தாஸ்), கேரள எல்லைக்குள் கிடைத்த ஒரு ‘ஜான் டோ’ குறித்த விசாரணைக்காக தமிழகம் வருகிறான்.
காணாமல் போன ஹிருதய்க்கும், தான் விசாரிக்க விரும்பும் ஜான் டோவுக்கும் ஒற்றுமை இருப்பதாக உணர்கிறான்.
ஹிருதய் கேஸை விசாரிக்கும் ராவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி (சஞ்சனா நடராஜன்) ஆரம்பத்தில் கேரள போலீஸ்காரனுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்து, ஒரு நிலையில் ஒத்துழைப்பு தருகிறாள் இருவரும் சரக்கு அடிக்கிறார்கள்.
கடத்தப்படும் எல்லா சிறுவர்களுக்கும் டயாஸ்டீமா (diastema) எனப்படும் ‘மேல் வரிசை சந்து பல்’ இருக்கிறது
அதை வைத்து கேரள போலீஸ் விசாரணை செய்கிறது.
இந்த நிலையில் ஹிருதய் உயிரோடு வருகிறான். ஆனால் அவனுக்கு அவன் பெயர் நினைவு இல்லை. அவன் யாரென்றே அவனுக்கு தெரியவில்லை. தனது பெயர் கேபிரியேல் என்கிறான். அவனிடம் ஏஞ்சல் என்ற பெயர் பொறித்த தங்கக் கையணி இருக்கிறது.
அவன் ஒரு விதமான ghosting – அதாவது அவனைப் பற்றி அவனே மறந்து வேறு அடையாளத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மாற்றப்பட்டு இருக்கிறான்.
கொலையாளி யார் ஏன் எப்படி பிடிபட்டான் என்பதே ஜான் டோ(ய்ய்ய்ய்…!)
மிக இயல்பாகத் துவங்கும் படம். குழந்தைகள் கடத்தல் விசாரணை. “பையன் செத்துட்டான். இல்ல இல்ல… அது வேற…” என்று சில ஓகே ஓகே திருப்பங்களுடன் போகிறது. இடைவேளை டுவிஸ்ட் அருமை.
இடை வேளைக்குப் பிறகு படம் கும்மென்று வேகம் எடுக்கிறது.
மதுமிதாவின் மேக்கிங் சிறப்பு. பல இடங்களில் கட்டிங்ஸ், பிரேமிங் எல்லாம் கவனிக்க வைக்கின்றன.
பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவானது, மலையும் நிலமுமான அவுட்டோர் மற்றும் படத்தின் திரில்லுக்கு துணை போகும் இண்டோர் என்று இரண்டு ஏரியாக்களிலும் சிறப்பாக இருக்கிறது.
படத்துக்கு செட் செய்திருக்கும் டோன், திரைக்கதையின் மூடுக்கு உதவுகிறது. வெல்டன் பிரீதா.
முஜீப் மஜீத், ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

விஜய் வெங்கட் ரமணனின் படத் தொகுப்பு முதல் பாதியில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
மர்மக்கதைக்கு அர்ஜுன் தாஸ் குரல் ஓகே தான். ஆனால் அவர் பேசும் வேகத்தில் அது தெளிவாக புரிவது தியேட்டர் சவுண்ட் சிஸ்டத்தின் கையில் இருக்கிறது.
சஞ்சனா நடராஜனின் ‘லேடி சுப்பீரியர்’ கேரக்டர் வடிவமைப்பு அருமை. அதை அவர் சிரத்தையாக ஹேண்டில் செய்திருக்கிறார் பாராட்டுகள்.
ஆனால், ஒரு நிலையில் ஓவர் டோஸ் ஆகிறது.
”அய்யா தங்க ஊசி வாங்கிட்டோம்…” என்று சதக் சதக் என்று கண்ணில் குத்திக் கொள்கிறார்கள். (நம் கண்ணிலும் குத்துகிறார்கள்)
எப்போதும் போடுகிற அதட்டலுக்கு கடைசியில் அந்த கேரக்டர் தானே ஏரிக்குள் குத்தித்து ஹீரோயினிசம் காட்டி இருக்க வேண்டும்?
ஹிருதயாக நடிக்கும் நீரவ் சிறப்பு.
சாரா கவனிக்க வைக்கிறார்.
அனுபமா, ஜெயப்பிரகாஷ் டெய்லர் மேட் நடிப்பு.
வழக்கமான கதை என்றாலும் இடைவேளைக்கு பிறகு படம் நன்றாகவே போனது. ஆகா, செம விருந்து என்று நினைத்தால்…
கிளைமாக்ஸ் என்று ஒன்று சொல்கிறார்கள் பாருங்கள். கொடுமை.
எந்த ஒரு நபருக்கும் அவரது வாழ்வில் முக்கியமான இரண்டு பேர் (உதாரணமாக மனைவி- மகன், கணவர்- மகள், மகன்- மகள் இப்படி..) ஒரே நேரத்தில் ஒரே சமயத்தில் உயிராபத்தில் இருக்கும்போது,
(நீரில் மூழ்குவது, நெருப்பில் சிக்குவது போல) அவர்களைக் காப்பாற்ற முயலும்போது, முதலில் யார் கைக்கு சிக்குகிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவதுதான் மனித இயல்பு என்கிறார்கள்.
அந்த இடத்தில் ஒருவன் சில நொடிகள் யோசித்து அருகில் இருப்பவரைப் புறக்கணித்து இன்னொருவரை தேர்ந்தெடுத்து காப்பாற்றுகிறான் என்றால் முதல் நபரை சாகவிட்ட குற்றவாளி (மனசாட்சி அளவில்) அவன்தான்.
தவிர படத்தில் வரும் மேற்படி விபத்துக்கு காரணமே மனைவியின் கோபம்தான். குற்றவாளி அவள்தான்.
அப்படி இருக்க, மகன், மனைவி என்று உறவு பார்க்காவிட்டாலும் அப்பாவியான மகனை முதலில் காப்பதுதான் நியாயம்.
அதைச் செய்யாமல் மகனை சாக விட்டுவிட்டு, அட அதுவரை கூட ஓகே. ஆனால் அப்புறம்…?
சைக்கோ என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? இப்படியா சைக்கோக்களை கேவலப்படுத்துவது? அப்படிப்பட்டவரை சைக்கோ என்று கூட சொல்லக் கூடாது.
வேண்டுமானால் ‘வைக்கோ’ என்று சொல்லலாம் பொய்க்கோ என்றோ போய்க்கோ என்றோ கூட சொல்லலாம. ஆனால் சைக்கோன்னு சொல்லாதீங்க பிளீஸ்.
மிக முக்கியமாக அப்படி ஒரு சூழலில் ஒரு இந்திய மனம், மனைவி கணவனைவிட மகன் மகளைக் காப்பாற்றத்தான் முயலும்.
(இதை வேண்டுமானால் ஒருவேளைத் தேர்ந்தெடுத்து செய்யும். அதுவும் அரிதாகத்தான். அருகில் இருப்பவரைதான் முதலில் காப்பாற்றத் தோன்றும்)
நிக்கோலஸ் செவாலியரின் ஜெர்மன் நாட்டில் வேண்டுமானால், மகன் செத்தால் போகட்டும் என்று விட்டுவிட்டு மனைவியை காப்பாற்றும்.
நேட்டிவிட்டி முக்கியம் இயக்குநரே.
சும்மா மேற்கத்திய வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு ஜான் டோ, டயாஸ்டீமா, கோஸ்டிங் என்று பெயர் வைத்துவிடுவதால் அது நல்ல படம் ஆகிவிடாது.
இப்படி இம்மெச்சூர் கிளைமாக்ஸ்கள் சரியான பலனை தராது.
குற்றவாளி யாரென்று தெரிந்த பிறகு நிறுத்தி நிதானமாக ரீசன் அன்ட் சீசன் என்று ஒரு பிளாஷ்பேக் கிளைமாக்ஸ் சொன்னால், அந்த கிளைமாக்ஸ் சும்மா பட்டையைக் கிளப்ப வேண்டாமா? இப்படியா தொங்கலில் விடுவது?
மொத்தத்தில் ஜான் டோ (John Doe)… தனக்கான சரியான கிளைமாக்ஸை அடையாளம் காணாத காரணத்தால்… ஜே டோ (J.Doe )!
— சு.செந்தில்குமரன்
#ஜான்டோ #JohnDoe #தமிழ்திரைப்படம் #தமிழ்சினிமா #திரைப்படவிமர்சனம் #சினிமாவிமர்சனம் #அர்ஜுன்தாஸ் #சஞ்சனாநடராஜன் #மதுமிதா #நீரவ் #பிரீதாஜெயராமன் #திரில்லர்படம் #க்ரைம்திரில்லர் #Kollywood #TamilMovieReview #MovieReview #ArjunDas #SanjanaNatarajan #MadhuMitha #CrimeThriller #TamilCinema
