Take a fresh look at your lifestyle.

ரசிகர்கள் காலைத் தொட்டுக் கும்பிடணும்!

உருகிய எஸ்.பி.பி

இதுவரை எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பார் என்று அவருக்கே தெரியாத எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை திருவாரூரில் 2004 ஆம் ஆண்டு சந்தித்தேன்.

இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த எஸ்.பி.பி. தங்கும் விடுதி ஒன்றில் ஷாட்ஸ், டீ சர்ட் என்று எளிய உடையில் இருந்தார்.

கேள்விகள் ஒவ்வொன்றாக கேட்கிறேன். கொஞ்சம் கூட அதிர்வின்றி, மென்மையாக பொறுமையாக பதிலளித்தார்.

40ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பிர்களா என்று கேட்டபோது, எண்ணிப் பார்த்தது இல்லை என்றார்.

1962 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதைக் கேட்ட ஜானகி அவர்கள் சினிமாவில் முயற்சிக்க சொல்லியிருக்கிறார்.

ஆனால், சின்னப்பையனா இருக்கான் என்று சொல்லி அப்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அதன் பிறகு 1966 ஆம் ஆண்டு தெலுங்குப் படத்தயாரிப்பாளர் கோதண்டபாணிதான் முதன்முதலில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்தார்.

எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஒப்பிடும்படி கேட்டேன்.

“எல்லோருக்கும் குரு எம்எஸ்வி தான். அவர் தான் சிமெண்ட் ரோடு போட்டு விட்டார்.

அந்த ரோட்டில் ஒரு வாகனத்தில் நாங்கள் பயணம் செய்கிறோம். இசை உலகின் பிதாமகர், பீஷ்மர் எம்.எஸ்.வி. தான்” என்று யோசனை எதுவுமின்றி கூறினார்.

இளம் பாடகர்களைப் பற்றிக் கேட்டபோது “பாடகர்களுக்கு பொதுவாக பணிவு, மரியாதை வேணும். ஒவ்வொரு பாடலையும் முதல் பாடலா நினைச்சு பாடணும்” என்றார்.

ஓரிரு பாடல்கள் பாடி, அவை ஹிட் ஆகிவிட்டால் தலைக்கனத்துடன் திரியும் சில பாடகர்களை அவர் கண்டிருக்கக் கூடும்.

ரசிகர்கள் உங்களை அளவு கடந்து பாராட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்ற என் கேள்விக்கு அவர் அளித்த பதில் அவர் வார்த்தைகளில்…

“தலைய குனிஞ்சிக்கணும் போல இருக்கும். என் பொழப்புக்காக நான் பாடுறேன். அவங்களுக்காக எதுவும் செய்யல. இருந்தாலும் என் குரல் மேல அவங்களுக்கு அப்படியொரு காதல் (மெதுவாக கண்களை மூடிக்கொண்டு)… சந்தோஷமா இருக்கு.

முடிஞ்சா ரசிகர்கள் ஒவ்வொருத்தரோட கால்களயும் தொட்டுக் கும்பிடணும் போல இருக்கு. அவங்க எனக்கு பிச்சை போடும் கடவுள்”

எஸ்பிபி அவர்களிடம் பேசப்பேச மனதிற்கு அமைதியும், தெளிவும் கிடைத்துக் கொண்டே இருந்தது. தெளிந்த உரையாடலுக்கு எப்போதும் தயாராகவே இருந்தார்.

இசைத்துறையில் எண்ணற்ற சாதனைகள் படைத்த எஸ்.பி.பி. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பணிவும், தொழில் பக்தியும்.

சந்திப்பு – மணா