Take a fresh look at your lifestyle.

இம்மார்ட்டல்: திகில் பட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர், லொள்ளு சபா மாறன் நடிப்பில், மாரியப்பன் சின்னா எழுதி இயக்கி இருக்கும் படம்.

ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பு.

இம்மார்ட்டல் (IMMORTAL) என்றால் அழிவில்லாதது என்று பொருள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பழங்குடி மக்கள் கூட்டம் ஒன்றில் ஒரு மலை ஜாதிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தை அமானுஷ்ய சக்திகளும் கொண்ட ராட்சச உருவம் கொண்ட மிருகமாக வளர்கிறது.

இப்போது சென்னையில் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் வேலை செய்யும் மகி (ஜி.வி பிரகாஷ்குமார்) என்ற இளைஞன், தான் தங்கி இருக்கும் அறையை அவசரமாக காலி செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பெண்ணிடம் இருந்து ரூம் ஷேரிங்குக்கு ஆள் வேண்டும் என்று கேட்டு ஃபோன் வருகிறது.

அழைப்பது பெண் என்பதால் ஆர்வம் அதிகமாகிப் போனால், அது ஒரு மாபெரும் அபார்ட்மெண்ட் ஏரியா.

அதில் அந்தப் பெண் சிந்து (கயாடு லோஹர்) இருப்பது ஒரு பரந்த ஃபிளாட் அங்கே அவளைத் தவிர யாருமே இல்லை.

ஆள் கொள்ளை அழகு. ”வாடகை ஷேர் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை” என்கிறாள். தவிர அவன் என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறாள்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிசன் பைக்கை ஒரு நாளில் வாங்கித் தருகிறாள்.

திடீரென அந்த வீட்டின் ஒரு அறையில் இருந்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ நம்பியார் மாதிரி தோல் சுருங்கிய வயது முதிர்ந்த உருவத்தோடு ஒருவர் (டி.எம் கார்த்திக்) இருப்பது தெரிகிறது.

”அவர் எனது தாத்தா” என்கிறாள் சிந்து.

ஆனால், அவர் சிந்துவுக்கு தெரியாமல் மகியிடம், ”நான் அவளது தாத்தா எல்லாம் இல்லை; உன்னை விட இரண்டு வயதுதான் மூத்தவன்” என்கிறார்.

மகி என்ன கேட்டாலும் அவன் கேட்ட அடுத்த நொடி சிந்து மூலம் அந்த உணவு ஆர்டரில் வந்து சேர்கிறது.

சப்பாத்தி என்று கேட்டு அது வரும்போது ”எனக்கு இட்லி வேண்டும்” என்று அவன் கேட்டால், பார்சலில் இட்லியே இருக்கிறது.

சிகரெட், பீடி இப்படி அவன் கேட்பதை எல்லாம் நொடியில் அவள் கொடுக்கிறாள்.

தாத்தா என்று சொல்லப்பட்டவர், ”என் நிலைதான் உனக்கும். நம்மைப் போல பலரின் ரத்தம் குடித்து ஆயிரம் ஆண்டுகளாக வாழும் அமானுஷ்ய சக்தி, ராட்சச உருவ மிருகம்தான் அவள்” என்று சொல்கிறார்.

அந்த உருவத்தை மகியும் பார்த்து நடுநடுங்கிப் போகிறான். அங்கிருந்து வெளியே வர அவனால் முடியவில்லை. மீறி வந்தாலும் ஒரு நிலையில் எல்லா பாதைகளும் அந்த அபார்ட்மென்டுக்கே மீண்டும் அவனைக் கொண்டு போய் நிறுத்துகிறது.

சிந்து என்று அழகிய பெண்ணாக இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தி கொண்ட ராட்சச உருவ மிருகத்திடம் இருந்து மகி தப்பினானா? என்ன ஆனது? என்பதே இந்த இம்மார்ட்டல் படம்.

மாரியப்பன் சின்னாவின் படமாக்கல் நன்றாக இருக்கிறது. ராட்சச உருவ மிருகத்தின் சீ.ஜி அனிமேஷன் வேலைகள் சிறப்பு, நேர்த்தி.

அட்டகாசமான பரபரப்பான பின்னணி இசை, சுறுசுறுப்பான பாடல்கள் என்று அசத்தி இருக்கிறார் சாம் சி.எஸ்.

சிந்து என்று யார் என்று முழுக்க முழுக்கத் தெரியும் இடத்தில் அவர் போட்டிருக்கும் ஓர் ஆங்கிலப் பாடல் படத்தை சும்மா கும்மென்று தூக்கிக் கொண்டு உயரத்தில் பறக்கிறது. ஒரு படத்துக்கு இசையமைப்பாளரின் பங்கு என்றால் இப்படி இருக்க வேண்டும்.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, சிவசங்கரின் கலை இயக்கம் இரண்டும் பாராட்டுக்குரியது.

மகி கேரக்டரை தனக்கே உரிய பாணியில் இயல்பாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்

தந்தத்தில் செய்த சிலை போன்ற தோற்றம், அழகு, இளமை, மயக்கும் சிரிப்பு, ஒரு நொடி கூட கோர முகம் காட்டாத இனிப்பான வில்லி பார்வை, விஷம் தோய்ந்த கவர்ச்சி என்று கயாடு லோஹர் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார்.

டி.எம்.கார்த்திக் கேரக்டர் ஆரம்ப ஜோர் ஓகே. போகப்போக வலுவின்றிப் போகிறது. குமார் நடராஜன் கதாபாத்திரம் ஓகே.

மாறன், ஆதித்யா கதிர், ஆகியோரின் கதாபாத்திரங்களும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

ஆயிரம் ஆண்டு வாழும் அந்த அமானுஷ்ய சக்திகள் கொண்ட ராட்சத மிருகத்தின் சக்தி என்ன என்பது பற்றி தெளிவான கேரக்டர் டிசைன் இல்லை. தங்கள் வசதிக்கு அதை வளைத்துக் கொள்கிறார்கள்.

கிளைமாக்ஸ் சமயம் மகி, பால்கனி வழியாகத் தப்பிக்க முயல்வது எல்லாம் நேர்த்தி இல்லாத எழுத்து.

சிந்து வீட்டில் மகி தங்கப்போகும் அந்த ஆரம்பக் காட்சிகள் சும்மா ஜில் என்று இருக்கிறது. ஆனால், ஒரு நிலையில் தேவைக்கு மேல் நீள்கிறது

காரணம் கதை சொன்ன விதம் திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அமானுஷ்ய ராட்சச மிருகம் பிறந்த கதையை விலாவாரியாக சொல்லி விட்டதால் கயாடு லோஹர் படத்தில் வந்து சில காட்சிகளிலேயே கதை ஆடியன்ஸுக்கு எளிதாகப் புரிந்து விட்டது.

அதனால்தான் சிந்து வீட்டில் மகி இருக்கும் காட்சிகளும் தாத்தா கேரக்டர் வரும் காட்சிகளும் தேவைக்கு அதிகமாக தோன்றி சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.

முருகதாஸ் இயக்கத்தில் ‘ஏழாம் அறிவு’ படத்தில் செய்த அதே தவறை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்கள்.

மாறாக படத்தில் ஆரம்பத்தில் வரும் அந்த ராட்சச மிருகம் பிறந்த கதையை அங்கே சொல்லி இருக்கக் கூடாது.

மகி வீடு தேடுவது, சிந்து வீட்டில் தங்குவது என்று ஆரம்பித்து, சிந்து கேரக்டர் யார் என்று மகிக்கு தெரிய வரும் இடத்தில் அந்த ஆரம்பக் காட்சியை சொல்லி இருந்தால் இந்தப் படம் தியேட்டரில் சும்மா தெறிக்க விட்டிருக்கும்.

அதே போல அவ்வளவு பிரம்மாண்டமாக பயங்கரமாக பில்டப் கொடுத்துக் காட்டப்பட்ட அந்த இம்மார்ட்டல் சக்தியோடு கடைசியில் ஜி.வி பிரகாஷ் ஒண்டிக்கு ஒண்டி மோதுவது போல எல்லாம் காட்சி அமைத்து ஒரு வீடியோ கேம் ஃ பீலிங்கை கொண்டு வந்து விட்டார்கள்.

முக்கியமாக இந்த கடைசி இரண்டு குறைகளும் இல்லாமல் இருந்தாலே இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக ஆகி இருக்கும்.

எனினும், திகில் பட ரசிகர்களை இந்தப் படம் கவரலாம்.

— சு. செந்தில் குமரன்