Take a fresh look at your lifestyle.

இப்படி ஒரு படம் இயக்க தனி துணிச்சல் வேண்டும்!

இயக்குநர் கீது மோகன் தாஸுக்குக் குவியும் பாராட்டு

தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’.

இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாஷின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, கீது மோகன்தாஸின் தனித்துவமான கதை சொல்லல், படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்தது.

இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டையொட்டி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

நடிகை ருக்மிணி வசந்த் :

“இந்தப் படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். யாஷ் பலருக்கும் உத்வேகமாக இருக்கிறார். யாஷின் ரசிகையாக துவங்கிய என்னுடைய பயணம், தற்போது அவருடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பானது.

இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சல் கீது மோகன்தாசுக்கு இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”

நடிகை ஹுமா குரேஷி :

“நான் எங்கு சென்றாலும், என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாக ‘டாக்ஸிக்’ படத்திற்காக எனது நேரத்தை செலவிட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்க கீது மோகன்தாஸ் என்னை அணுகியபோது, கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே ஒரு அசத்தலான படைப்பை கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் கூட இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.

இந்தப் பிரம்மாண்டமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறேன்.

நடிகை கியாரா அத்வானி :

“ஒரு பெண்ணின் கனவு மற்றும் பார்வையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அது கீது மோகன்தாஸ். இந்திய சினிமா உங்கள் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு யாஷ் சார் இந்திய சினிமாவை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.”

இயக்குநர் கீது மோகன்தாஸ் :

“எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. 

ஆனால், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான யாஷ் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார்.

‘படையப்பா’ உள்ளிட்ட பல மாஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை எனக்கு ரெஃபரன்ஸாக யாஷ் காட்டினார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது”

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென ஒரு இருண்ட, அடர்த்தியான, பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம், கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என, திரைப்படம் மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.