பிரபல வங்காளப் பட இயக்குநரான மிர்னாள் சென் தனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக இயக்குநர் ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் குறிப்பிட்டிருப்பார்.
அப்படிப்பட்ட மிகச்சிறப்பான இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி, ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.
“ ‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது அதை ஏற்கச் சொல்லி என்னை சம்மதிக்க வைத்தது கமல் தான்.
அவரும் ரஜினியும் என்னுடன் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு மிகக் குறுகிய நாட்களுக்குள்ளேயே நடந்து முடிந்து விட்டது. 12 நாட்களுக்குள்ளேயே நான் நடித்த காட்சிகளை எடுத்து முடித்து விட்டார்கள்.
அந்தப் படத்தைப் பற்றி தற்போது கூட இளைஞர்கள் பலர் விவாதிக்கிறார்கள். தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக ‘அவள் அப்படித்தான்’ படம் இன்றும் பேசப்படுகிறது” என்று ஸ்ரீபிரியா சொல்லிக்கொண்டு போனபோது அவரைப் பேட்டி கண்டவர் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“அந்தப் படம் முழுக்க உங்களது கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் நீங்கள் பேசும் வசனங்கள் மிகவும் ஷார்ப்பாக இருக்கும்.
அதிலும் ரஜினி கதாப்பாத்திற்கு எதிராக நீங்கள் பேசிய வசனங்களை அப்போது முழுமையாக உணர்ந்தீர்களா?”
இதற்கு ஸ்ரீபிரியாவின் பதில்: அந்தப் படம் எடுக்கப்பட்ட போது இயக்குநர் ருத்ரையா சொன்னபடி அந்த வசனத்தைப் பேசி நடித்தேன். அவ்வளவுதான்.