Take a fresh look at your lifestyle.

கரகாட்டக்காரன் கனகாவும் கங்கை அமரன் மனைவியும்!

‘கரகாட்டக்காரன்’ படம் குறித்து இயக்குநர் கங்கை அமரன் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

****

” ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நான் காட்டியது ஒன்றுமே இல்லை. ஆனால், கரகாட்டக்காரர்கள் படும் கஷ்டங்களும் அவஸ்தைகளும் ஏராளம்.

கரகாட்ட பெண் கலைஞர்களை ஒருவர் கூட நல்லவிதத்தில் பார்த்ததில்லை. அங்கிருந்தே அவர்களுக்கு பிரச்சினை ஆரம்பித்துவிடுகிறது.

‘கரகாட்டக்காரன்’ என்ற படத்தை எடுக்கப் போவதாக அண்ணன் இளையராஜாவிடம் கூறினேன்.

அதற்கு அவர் “அதை வைத்து என்ன எடுக்க போகிறாய்” எனக் கேட்டார்.

அப்போது நான், “என்னிடம் கதையெல்லாம் கேட்காதீர்கள். எனக்கு பாட்டுகளை மட்டும் கம்போஸ் செய்து கொடுங்கள்” என்றேன்.

அப்படி கம்போஸ் செய்த பாடல்கள்தான் அவை! அதிலும் “மாங்குயிலே பூங்குயிலே” பாடல் மிகவும் நன்றாக இருந்தது.

ஒரு ஆண், தனக்கு மனைவியாக வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என நினைத்துப் பாடுவதாக அமைந்துள்ளது.

அவர்கள் இருவரும் பிரியும்போது அதே பாட்டை பாடல் வரியை மட்டும் மாற்றிப் போட வேண்டும் என நான் கேட்டேன்.

ஆனால், இளையராஜா அதே பாடல் கரகாட்ட கோஷ்டி காரை தள்ளிக் கொண்டு வரும் போது போட்டாகிவிட்டது.

எனவே, மீண்டும் மீண்டும் போட்டால் நன்றாக இருக்காது என கூறிதான் அமைந்தது “குடகு மலை காற்றில் வரும்” என்ற பாடல்!

ஏதோ விளையாட்டுத்தனமாக இருந்து அந்த படத்தை 28 நாட்களில் முடித்துவிட்டேன். பாட்டும் டக்கு டக்குனு அமைந்துவிட்டது.

கனகாவை நான் எப்படி அறிமுகப்படுத்தினேன் என்றால், எங்கள் வீடும் தேவிகா வீடும் ராஜா அண்ணாமலைபுரத்தில்தான் இருந்தது.

அப்போது தேவிகாவும் கனகாவும் எங்கள் வீடு வழியாகத்தான் வாக்கிங் செல்வார்கள். வாக்கிங் போவதற்கு கனகா பட்டுப் பாவாடை தாவணி அணிந்துக் கொண்டுதான் வருவார்.

அப்போது ஒரு முறை என் மனைவி வந்து, “என்னங்க! தேவிகாவும் கனகாவும் வாக்கிங் போகிறாங்க” என்றார்.

அப்போது நான் போய் அவர்களை என் வீட்டுக்கு அழைத்து உபசரித்தேன்.

அப்போது என் மனைவி, “நீங்கள் எடுக்கப் போகும் படத்திற்கு இந்த பெண்ணையே புக் செய்துவிடுங்களேன்” என்றார்.

அப்படி அமைந்ததுதான் கனகா!

கனகா திரைப்படங்களில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்பது அவருடைய அம்மாவின் ஆசை.

அந்த ஆசைதான் அந்த படத்தில் கனகாவுக்கு பொட்டு வைப்பது போல் ஒரு கை மட்டும் தெரியும். அது தேவிகாவின் கைதான். அவர்தான் தனது மகளுக்கு பொட்டு வைத்தார். அதில் முகத்தையெல்லாம் காட்டவில்லை.”

நன்றி – புதிய தலைமுறை