ஆர்யா, முரளி கோபி, இந்திரன்ஸ், சுனில், சாந்தி பாலச்சந்திரன், கவுரவத் தோற்றத்தில் நிகிலா விமல், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடிக்க, முரளி கோபியின் எழுத்தில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் படம்.
கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன், மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார், தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா ஆகியோரின் தயாரிப்பு.
இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை காக்கை, குருவி போல சுட்டுக் கொல்கிறது; பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறது.
அதைத் தடுக்க முயலும் வெற்றி என்ற இளைஞன் (ஆர்யா) கொடூரமாகத் தாக்கப்படுகிறான். உயிர் போய்விடுமோ என்ற சூழலில், போராளிகள் படை வந்து அவனைக் காப்பற்றுகிறது.
அவன் கையில் துப்பாக்கி தரும் ‘மேதகு’ தொடர்ந்து விடுதலைக்காக போராடச் சொல்கிறார்.
தமிழகம் வரும் வெற்றி, மணி என்ற பெயரில் திருவனந்தபுரம் போய்ச் சேர்கிறான். ஒரு பக்கம் இசைக் கச்சேரி நடத்திக் கொண்டு கேரள முதல்வர் சொல்லும் கொலைகளை செய்து கொண்டிருக்கும் நால்வருடன் (முரளி கோபி, இந்திரன்ஸ் மற்றும் இருவர்) வசிக்க ஆரம்பிக்கிறான் வெற்றி.
அந்த நால்வரின் சகோதரி ஒருத்தியை (சாந்தி பாலச்சந்திரன்) கேரளா உயர் பதவியில் உள்ள தெலுங்கு போலீஸ் அதிகாரி ஒருவன் (சுனில்) சிகரெட்டால் சுட்டு கொடுமைப் படுத்தி பாலியல் கொடுமை செய்கிறான். நால்வராலும் அவனைத் தட்டிக் கேட்க முடியவில்லை.
ஆனால், இலங்கைத் தமிழன் வெற்றியால் அந்தக் கொடுமையை ஒரு தமிழனாக பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முகத்தை மறைத்துக் கொண்டு போய் அந்த தெலுங்கு போலீஸ் அதிகாரியை கொள்ளிக் கட்டையால் சூடு வைக்கிறான்.
அப்போது வெற்றி கையில் பச்சை குத்தப்பட்ட தமிழ் எழுத்துக்களை தெலுங்கு போலீஸ் அதிகாரி படித்து விடுகிறான்.
கேரள முதல்வர் தனது ஆசை நாயகியாக வைத்திருக்கும் ஒரு நடிகை, முதல்வரின் நண்பரும் திண்டுக்கல்லில் உள்ள தமிழ்ப் புள்ளியுமான ஒருவரின் மகனை காதலிக்க, அந்தக் காதலனைக் கொலை செய்கிறார் கேரள முதல்வர்.

விஷயம் அறிந்து கேரள முதல்வருக்கு திண்டுக்கல் தமிழர் கொலை மிரட்டல் விடுக்க, அந்த திண்டுக்கல் பிரமுகரை கொல்ல, மலையாள நால்வர் அணியை அனுப்புகிறார் கேரள முதல்வர்.
அவர்களோடு வரும் வெற்றி, தமிழக பிரமுகரை வெறி கொண்டு கொலை செய்கிறான். காரணம் அந்த தமிழகப் பிரமுகர் ஒரு தமிழ் இனத் துரோகி.
ஒரு நிலையில் மலையாள நால்வர் அணிக்கும் கேரள முதல்வருக்கும் முட்டிக் கொள்ள, நால்வர் அணியின் பக்கம் நிற்கிறான் வெற்றி.
கேரளாவில் இருக்கும் தமிழ்ப் போராளிகளை வேட்டையாட போலீஸ் களம் இறங்க, நால்வர் அணி வெற்றியைக் காக்க முயல,
நால்வர் அணி மீது வன்மம் பாராட்டும் கேரள முதல்வருக்கு பாடம் புகட்ட வெற்றி முயல, நடந்தது என்ன என்பதே அனந்தன்காடு. திருவனந்தபுரத்தில் பழைய பெயர் அனந்தன் காடு.
நம்புங்கள் இது மலையாளத் திரையுலகினர் உருவாக்கிய படம்தான்.
மலையாளப் படங்களில் காலகாலமாக எல்லா ஹீரோக்களும் தமிழர்கள் மற்றும் தமிழ்ப் பெண்களை, உண்மைக்குப் புறம்பாக கேவலமாக விமர்சித்து வரும் மலையாள சினிமா உலகத்தில் இருந்துதான் இப்படி ஒரு படம்.
நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து எல்லாம் அற்பத்தனமாக நடந்து கொண்ட மலையாள சினிமாவில், இந்தப் படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் முகம் அடையாளப்படுத்தாமல் நல்ல விதமாகக் காட்டுகிறார்கள் என்றால் நடிகர் ஆர்யாவும் வினோத்குமாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சம்மந்தப்பட்ட படைப்பாளிகளுக்கும் அன்பான வாழ்த்துகள்.
மிகப்பிரம்மாதமான படமாக்கல் கொடுத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார் ஜியென் கிருஷ்ணகுமார்.
யுவாவின் அட்டகாசமான ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். லொகேஷன்களை பிரேமுக்குள் அடக்குவதாகட்டும், காட்சியின் உணர்வை ரசிகனுக்கு கடத்துவதாகட்டும் அற்புதமான ஒளிப்பதிவு.
மிகப்பிரம்மாதமான சண்டைக் காட்சிகளில் வியக்க வைத்திருக்கிறார் சண்டை இயக்குநர் சக்தி சரவணன்.
குறிப்பாக திண்டுக்கல் பட்டாசு சண்டைக் காட்சியில் சண்டை இயக்கம், ஒளிப்பதிவு, ரோஹித் வரியத்தின் படத் தொகுப்பு, அஜ்னீஷ் லோகநாத்தின் இசை, இயக்குனரின் இயக்கம் யாவும் பிரமாதம்.
படம் முழுக்கவே பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் அஜ்னீஷ் லோக்நாத்
மிக சிறப்பாக நடித்துள்ளார் ஆர்யா.
முரளி கோபி, இந்திரன்ஸ், நால்வர் அணியில் வரும் மற்றவர்கள், அம்மாவாக வரும் நடிகை, தங்கையாக வரும் சாந்தி பாலச்சந்திரன் அனைவரும் சிறப்பாக நடிப்பு. சபாஷ் சபாஷ்.
பெரிதாக ஏமாற்றி இருப்பவர் எழுத்தாளர் முரளி கோபி தான்.
படம் துவங்கி இடைவேளை வரை எழுத்தில் இருந்த ஒழுங்கு அப்புறம் இல்லை.
போராளி, எளிய ரவுடிகள், அரசியல் சதிகள் என்று யதார்த்தம் நிறைந்த கதையில், திடீரென்று கேரள முதல்வரின் கட்டில் பிடியில் இருந்த நடிகையை திண்டுக்கல் பிரமுகரின் மகன் காதலித்தான்.
கேரளா முதல்வருக்கும் திண்டுக்கல் பிரமுகருக்கு முன்பே நட்பு எல்லாம் உண்டு என்று இதுதான் இட்லி என்றால் சட்னி கூட நம்பாத மாதிரி ஒரு கதை சொல்கிறார்.
முதல்வரின் பேரனை அவன் கராத்தே பயிலும் பள்ளியில் இருந்து, போற போக்கில் ஆர்யா கடத்தும் காட்சியை எல்லாம் பாலைய்யா ரசிகர்கள் கூட, ‘லாஜிக் மிஸ்டேக்’ என்று சொல்லி விடுவார்கள்.
அங்கேயே படம் மனசுக்குள் இருந்து விலகுகிறது. அப்புறம் அந்த நால்வரிடமும் முதல்வர் பேரம் பேசுவதெல்லாம்… சாரி சாரே!
உண்மையில் இது ஓர் ஈழத்தமிழனின் படம். அதை அப்படியே சொல்லாமல் இடைவேளைக்கு பிறகு வெற்றி கேரக்டரை கொஞ்ச நேரம் கூப்பில் வைத்துவிட்டு நால்வரின் கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததுதான் முதல் பலவீனம்.

ஓர் ஈழத்தமிழனின் கதைக்கு முழு முக்கியத்துவம் தருவதா என்ற எண்ணம் எப்போது படம் சம்மந்தப்பட்டவர்களுக்கு வந்ததோ, அப்பவே படம் படுத்து விட்டது.
இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களை படத்தில் சீண்டவும் தயங்கவில்லை. இலங்கை ராணுவ அதிகாரி ஒருவன், போராளிகள் அமைப்பை கெட்ட வார்த்தையில் திட்டுவதுபோல ஒரு வசனம். அதைக் கூட அந்தக் கேரக்டரின் பார்வை என்று சொல்லி விடலாம்.
ஆனால், தமிழர்களை நிராயுதபாணியாக சுட்டுக் கொன்றுவிட்டு பெண்களை பாலியல் ரீதியாக சீரழித்து விட்டு, சிங்கள அதிகாரி, “இப்ப புரியுதா? உன் இடத்துல வந்து நான் இப்படி நடந்து கொள்ளும்போது உனக்கு வலிக்குது இல்ல. அப்படி தானே எனக்கு வலிக்கும்?” என்கிறான்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் எந்த சிங்களப் பொது ஜனத்தைக் கொன்றார்கள்? எந்த சிங்களப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள்?
இப்படி ஒரு வசனத்தை இந்தப் படத்தில் வைத்ததன் மூலம் நாங்கள் எல்லாம் முழுசா எல்லாம் திருந்தவே மாட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறதா இந்தப் படக்குழு? எதற்கு இந்த இன்டலக்சுவல் அரகன்ஸ்?
இன்றைய கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் உண்மையில் தமிழர்களின் பூமி.
(மொழி வாரி மாநிலப் பிரிவினையின்போது நேருவை மயக்கி கேரளாவுக்கு என்று பிடுங்கிக் கொண்டார்கள். நெய்யாறு, நெடுமங்காடு, வண்டிப் பெரியாறு, இடுக்கி இப்படி பல பகுதிகளை நாம் இழந்தோம். கன்னியாகுமரியை மட்டும் மீண்டும் மீட்க முடிந்தது.)
எனவே சில தலைமுறை முந்தைய, நம்பூதிரி வழி வந்த மலையாளிகளுக்கு திருவனந்தபுரம் என்றால் இளக்காரம். காரணம் அது தமிழர் நிலம்.
படத்தில் ஒரு காட்சியில் கேரள முதல்வர், நால்வர் அணியைப் பார்த்து “திருவனந்தபுரத்துக்காரனோட கேவலமான புத்தியைக் காட்டுறியே?” என்கிறார்.
இன்னொரு காட்சியில் ”இந்த அனந்தன் காட்டையும் நான் இப்போ ஆட்சி செய்யறேன் பாத்தியா?” என்கிறார்.
இதன்மூலம் திருவனந்தபுரம் தமிழர் நிலம் என்ற கருத்துக்கு வலு சேர்த்து இருக்கும் விஷயத்துக்காக இந்தப் படக் குழுவைப் பாராட்டலாம்.
மொத்தத்தில் அனந்தன் காடு… பாதி பசுமை. மீதி பாலை.
– சு. செந்தில் குமரன்